Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை...குமரப்பட்டி

குமரப்பட்டி

      24-09-2015 அன்று அறிவோம் அறிவிப்போம் குழு நண்பர்கள் இருபது பேர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள குமரப்பட்டி என்ற சிற்றூருக்குப் பயணமானோம்.
நம்மை , ஓய்வு பெற்ற தமிழாசிரியர் முனைவர் சுப்பிரமணியன் ஐயா அங்கு அழைத்துச் சென்றார். அவ்விடத்தில் அப்படி என்ன இருக்கிறது....

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த முடியாது என்று புரட்சி செய்தான். சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட கட்டபொம்மன் மீது ஆங்கிலேயர்கள் போர்தொடுக்க, பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து  தப்பிய கட்டபொம்மன் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்த்தானத்திற்கும் இடையிலிருந்த  குமரபட்டிக்கு அருகிலுள்ள காட்டில் மறைந்து வாழ்ந்திருக்கிறார். புதுக்கோட்டை அரசரின் ஆணைப்படி, அருகிலுள்ள திருக்களம்பூர் எனும் ஊரிலிருந்த சிலர் சூழ்ச்சி செய்து, விருந்துக்கு அழைப்பது போல அழைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தார்களாம்.


கட்டபொம்மனை பிடித்துக்கொடுத்த ஊர் என்ற அவப்பெயரை தாங்கிய அவ்வூர்மக்கள், அவர் மறைந்து வாழ்ந்த இக்காட்டை பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கிறார்களாம். அவ்வூர் மக்கள் இக்காட்டிலிருந்து ஒரு சிறு குச்சியைக் கூட ஒடிப்பதோ, எடுத்துச் செல்வதோ இல்லையாம் பிறறையும் எடுத்துச் செல்ல அனுமதிப்பதிப்பதும் இல்லையாம்.கட்டபொம்மன் வாழ்ந்போது எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் இருப்பதாக அவ்வூர்காரர்கள் கூறுகிறார்கள்.

திருக்களம்பூர் - வேந்தன்பட்டி சாலையின் கிழக்கே உள்ள குமரப்பட்டி எனும் ஊருக்கு வடக்கே இக்காடு உள்ளது. நம்மை திருக்களம்பூர் ஊர்த்தலைவர் திரு பழனிச்சாமி அவர்கள் அன்புடன் வரவேற்று ஊமையன் கோரை என்று அழைக்கப்படும் அக்காட்டைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

குமரப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பர் வழிகாட்டி அழைத்துச் செல்ல அவ்வூர் சிறுவர்கள் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். எதையும் எடுக்காதீர்கள் என்ற நிபந்தனையுடன் விடுதலைப் போராட்டக் களத்தின் சிறு அங்கமாகத் திகழும் இக்காட்டினுள் ஒருவித படபடப்புடனேயே நுழைந்தோம். சிறிய காடுதான் வேங்கை மரங்களும், காட்டுப்புளிய மரங்களும், உயரமான கள்ளிச் செடிகளும், காட்டுச்செடிகளும் அடர்ந்திருந்த அந்தக் காட்டில் உள்ள ஒத்தையடிப் பாதையிலேயே நடந்து சென்றோம். பாதை இரண்டாகப்பிரியுமிடத்தில் வலப்புறமாக உள்ள பாதையில் கூட்டிப் போனார்கள். காட்டுக்குள் நுழையும் முன்பாகவே காலிலுள்ள செருப்புகளை கழற்றிவைத்துவிட்டு வரும்படி கூறியிருந்தனர் எனவே வெறும் காலுடனேயே அக்காட்டுக்குள் உலவினோம்.


நடுக்காட்டினுள் காட்டுக்கோயில் இருந்தது. அதை அவர்கள் "ஊமையன் கருப்பர் கோயில்" என்று அழைக்கின்றனர். அங்குப் பெரிய பெரிய ஈட்டிகளும் அரிவாள்களும் நடப்பட்டிருந்தன.  நிறைய மணிகளும் கட்டப்பட்டிருந்தன. நேர்த்திக்கடனுக்காக பல நிறங்களில் பட்டுத்துணிகள் கட்டப்பட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. கட்டபொம்மன் பிடிபட்டவுடன் அவர் தம்பி ஊமைத்துரை தப்பி வந்து இந்தக் கருப்பர் கோயிலில் மறைந்து விட்டதாக அவ்வூர்காரர்கள் நம்புகிறார்கள்.இங்கு ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்குமாம், அத்திருவிழாவில் கட்டபொம்மன் நாடகம் நடத்தப்படுமாம்.


அங்கிருந்து சிறிது தொலைவிலுள்ள இடத்தில்  கட்டபொம்மன் மறைந்திருந்ததாக கூறப்படும் ஒரு பாறையைக் காட்டினார்கள்.பெரிய பாறை, மனிதர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. விளக்கு ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த ஒரு சிறுகுழியைத் தவிர வேறு எந்த தடயமும் காணமுடியவில்லை. குமரப்பட்டியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலாஜி எங்களுக்கு வழிகாட்டினான்.



                நம்மை இக்காட்டிற்கு அழைத்துச் சென்றவரும், திருக்களம்பூர் ஊரைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டை மாவட்ட குலதெய்வங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான முனைவர் திரு சுப்பிரமணியன் ஐயா அவர்கள் விரிவாகப் பேசினார்.

          " பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி வந்த கட்டபொம்மன், ஊமைத்துரை, கட்டபொம்மனின் மைத்துனர்கள் இருவர், மெய்காப்பாளர்கள் மூவர் என மொத்தம் ஏழு பேர் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கும் இடையில் புதுக்கோட்டை மகாராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தக் காட்டில் மறைந்திருந்தனர். புதுக்கோட்டை மகாராஜாவின் அனுமதி பெறாமல் தங்கியிருந்த காரணத்தினால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார் மன்னர்.திருக்களம்பூர் "சர்தார் முத்துவீரவைரவ அம்பலக்காரர்" என்பவரிடம் பணி ஒப்படைக்கப்படுகிறது. அம்பலக்காரரும் தாரை தப்பட்டை முழங்க காட்டிற்குச் சென்று கட்டபொம்மனையும் மற்றவர்களையும் தன்வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். அவரின் நோக்கத்தைத் தெரிந்துக்கொள்ளாத கட்டபொம்மன் விருந்துக்கு சம்மதிக்கிறான். வீட்டினுள் தூணிற்கு அருகிலிருந்து சாப்பிட்ட கட்டபொம்மன் சாப்பிட்டு முடியும் தருவாயில் அத்தூணிலேயே தீடீரெண கட்டப்பட, இந்நிகழ்வைச் சற்றும் எதிர்பார்க்காத மற்றவர்களும் பிடிபடுகிறார்கள்.

இதற்கிடையில் ஆங்கிலேயர்களிடமிருந்து கட்டபொம்மனைப் பிடித்துக்கொடுக்கும்படி ஆணை வர, ஆங்கிலேயர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துவரும் தனது ஆட்சியில் தன் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் துன்பம் வந்துவிடக்கூடாதே என்ற நோக்கத்துடனும் கட்டபொம்மனையும் மற்றவர்களையும் ஆங்கிலேர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார் மன்னர். கைது செய்யப்பட்டவர்களை புதுக்கோட்டைக்கு அழைத்து வராமல் அங்கிருந்தே மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு ஊமைத்துரையும் மற்றவர்களும் தப்பிக்க , கட்டபொம்மன் மட்டும் கயத்தாற்றிலுள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்படுகிறார்.

இந்த நிகழ்வு தொடர்பான செய்திகள் 'முத்துவீரவைரவ அம்பலக்காரர் கும்மிமெட்டில்' உள்ளது. இந்தக் கும்மிப் பாட்டு எனது ஆய்வுப் பணியின்போது எனக்குக் கிடைத்தது. எனது கருத்துப்படி புதுக்கோட்டை மகாராஜா கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தார் என்று சொல்லலாமே தவிர காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது பொருத்தமற்றது, ஏனெனில் பிடித்துக்கொடுப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது."


ஆங்கிலேயர்கள் , வீரபாண்டிய கட்டபொம்மனை ஒரு கொள்ளைக் கும்பலின் தலைவன் என்றவாறு சித்தரித்து வைத்திருந்தனர். இவர் வரலாறை பாமர மக்களுக்கும் தெரிந்துகொள்ளும் வன்னம் அனைவருக்கும் கொண்டு சேர்த்த பெருமை "ம.பொ.சி " அவர்களைச் சேரும்.
இவர் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் புத்தகத்தால் கவரப்பட்டே பீம்சிங்-பந்துலு ஆகியோர் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை எடுத்தனர். சிவாஜிகணேசனின் நடிப்பும், அரு.ராமனாதன் அவர்களின் வசனமும் அப்படத்தை வெற்றிப் படமாக்கியது. கட்டபொம்மன் என்றாலே சிவாஜியின் தோற்றம்தான் நினைவுக்கு வருமளவிற்கு அப்படத்தின் தாக்கம் இருந்தது.
கட்டபொம்மனின் வரலாற்றை மறைக்க முற்பட்ட ஆங்கிலேயர்கள், கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட புளிய மரத்தை மக்கள் வணங்குவதைக் கண்டு அப்புளியமரத்தை எரித்துவிட்டனர். பின்னர் சிவாஜி கணேசன் அவ்விடத்தை அடையாளம் கண்டு அதைத் தன் சொந்த செலவில் வாங்கி கட்டபொம்மனுக்கு நினைவிடம் கட்டினார். இந்த நினைவிடம் கண்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை NH7  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும் மணியாச்சிக்கும் இடையில் கயத்தாறு எனும் ஊரில் அமைந்துள்ளது.

எங்கெங்கோ அயல்நாடுகளிலுள்ள இடங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு நம் அருகிலுள்ள இவ்வூரைப்பற்றி தெரிவதில்லை. வரலாறு என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துகளாகவே நாம் நினைக்கிறோம். ஆனால் அவை நமக்கு வாழ்க்கைப் பாடங்கள். பின்னாளில் நிகழ இருப்பனவற்றை கட்டியங்கூறும் பதிவுகள்.

குமரப்பட்டி ஊமையன்கோரைக் காட்டைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம், திரு இராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரியைப் படிக்கும் போதெல்லாம் ஏற்படும் , அதற்கு இப்போதுதான் வாய்ப்பு அமைந்தது.
நமது பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு ஊர்திரும்ப தயாரானோம்.

மீண்டும் அடுத்தப் பயணத்தில் சந்திப்போம்...

பயணங்கள் தொடரும்...

...பாலா

No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...