பயணங்கள் முடிவதில்லை....பூம்பாறை
கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் இடங்களுள் ஒன்று....
"பூம்பாறை"
இவ்வூர், அழகை மட்டும் இல்லைங்க, பல ஆச்சரியங்களையும் கொண்டுள்ளது.
"பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையில் மேவு பெருமாளே."
பூங்கதலி கோடி திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையில் மேவு பெருமாளே."
என திருப்புகழில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற பூம்பாறை குழந்தை வேலப்பர் எழுந்தருளியுள்ள பூம்பாறை என்னும் அழகிய சிற்றூர் கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ தொலைவில் மேல்மலைப் பகுதியில் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் அமைந்துள்ளது.
இங்குச் செல்லும்போது மலையில் வளைந்து நெளிந்து செல்லும் சாலையிலிருந்து தொலைவில் தெரியும் இவ்வூரின் காட்சியைத் தவறவிட்டுவிடாதீர்கள்.
அடுக்கடுக்கான நிலங்கள், பெட்டிபெட்டியான வீடுகள், சுற்றிலும் பசேலெனப் போர்த்திய புல்வெளிகள் என மனத்தைக் கொள்ளைகொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது பூம்பாறை.
ஊருக்குள் நுழைந்ததுமே முதலில் தெரிவது 'அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில்', இது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலின் உபகோயிலாகும்.
சிறிய கோவில்தான்.... ஆனால் மிகவும் பழமையானது.... இக்கோவில் மிகப்பழமை வாய்ந்தது என்பதற்குச் சான்றாகப் பழமையானச் சிற்பங்களைக் காணமுடிகிறது.
பழனியில் இருக்கும் போகர் உருவாக்கிய, நவபாஷான முருகர் சிலை, முதலில் இந்த கோயிலில் தான் போகரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதாகவும். பிறகு தான் பழனிக்குக் கொண்டுச் செல்லப் பட்டதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
பழனி தேவஸ்தானக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும், தை பூசத்திற்கு அடுத்து வரும் கேட்டை நட்சத்திரத்தில் தேர் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுமாம்.
நவபாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார் என்றும், ஒன்று பழனிமலையிலும் மற்றொன்று பூம்பாறையிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மூன்றாவது இந்தப் பூம்பாறையில் எங்கோ மறைக்கப் பட்டதாகவும், அதைச் சிலர் இன்றும் வழிபட்டு வருவதாகவும் செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.
மூலவர் சந்நிதி உள்ளேயே தேனீக்கள் கூடுகட்டியுள்ளன. அதிலிருந்துப் பெறப்படும் தேனைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
பாலா பாரதி



