Thursday, 30 November 2017

கடம்பர் கோயில் நவகண்டம்

கடம்பர் கோயில் நவகண்டம்
கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ள கடம்பர் கோயில் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். பெயருக்குத் தகுந்தாற்போல் இக்கோயிலினுள் கடம்ப மரங்கள் நிறையக் காணப்படுகின்றன.
இக்கோயில் வளாகத்தினுள் நவகண்டச் சிற்பம் உள்ளது. வெகுபுடைப்பாகவும் அழகாகவும் வடிக்கப்பட்ட நாயக்கர்காலத்தைச் சேர்ந்த இச்சிற்பம் இதை வடித்த சிற்பியின் கைத்திறனைக் காட்டுகிறது. தலைமுடி கொண்டையாக வீரனின் இடப்புறம் முடியப்பட்டுள்ளது. காதுகளையும் கழுத்தையும் ஆபரணங்கள் அழகு செய்கின்றன. இடையில் அழகான வேலைப்பாடுடன் குறுவாள் ஒன்றையும் காணமுடிகிறது. வீரனின் இடதுகை நீண்ட வாளின் மீது தாங்கியுள்ளது. வலதுகையால் நீண்ட வாளினை பின் கழுத்துப் பகுதியில் செலுத்தி தன் தலையை தானே அரிந்து கொள்கிறான்.( நன்றி: வீரராகவன் ஐயா)
- பாலா பாரதி
A Memorial Stone of Nayak period is at Kadambar temple Kuzhithalai, Karur Dist, Tamilnadu State. - Bala Bharathi.

விழுப்புரம் மாவட்ட தொல்லியல் பதிவுகள்

பயணங்கள் முடிவதில்லை: விழுப்புரம் மாவட்ட தொல்லியல் பதிவுகள்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வீரராகவன் அவர்களும் அவரது துணைவியார் திருமதி. மங்கயர்கரசி அவர்களும், விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வெட்டுகள், நடுகற்கள், பாறை ஓவியங்கள் போன்ற தொல்லியல் சான்றுகளை கண்டறிந்து வெளிஉலகிற்கு தெரிவிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும், இருபதுக்கும் மேற்பட்ட நடுகற்களையும், பத்துக்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களையும், இருபதுக்கும் மேற்பட்ட சிற்பங்களையும் கண்டறிந்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வில் கணவன் மனைவியாக சேர்ந்து பணியாற்றும் இவர்களைப் பெற்றது தமிழகத்துக்கு பெருமை என்றால் அது மிகையில்லை.
வீரராகவன் ஐயா சமீபத்தில் நம்மை விழுப்புரம் பகுதியில் அவர் கண்டுபிடித்த நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்களைக் காண அழைத்திருந்தார். அவர்கள் கண்டுபிடித்தவற்றில் சிலவற்றையாவது சென்று பார்க்கலாம் என்று திட்டமிட்டு திரு. வீரராகவன் ஐயாவை சந்திக்கச் சென்றேன். நான் திருச்சியிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கும் அவர் விழுப்புறத்திலிருந்து உளுந்தூர் பேட்டைக்கு வந்துவிடுவதாகவும் உளுந்தூர்பேட்டையிலிருந்து இருவரும் சேர்ந்து சிக்காடு போவதாகவும் திட்டமிட்டிருந்தோம். திட்டமிட்டபடியே அவரை விழுப்புரத்தில் சந்தித்து அங்கிருந்து சேலம் செல்லும் சாலையில் பயணித்தோம்.
முதலில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள தியாகதுருக்கம் அடைந்து அங்கிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள சிக்காடுக்கு வந்து சேர்ந்தோம். சிக்காட்டில் வேடப்பார் கோயில் உள்ளது. இவ்வூரின் ஏரிக்கரையில் கிழக்கு நோக்கிய துர்கை சிலை ஒன்று உள்ளதாகவும் அதைப்பார்க்கலாம் என்றும் அந்த ஏரிக்கரைக்கு நம்மை அழைத்துச் சென்றார் ஏரிக்கரையில் வடக்கு நோக்கி செல்லும் சிறிய பாதையில் போகும்போது, இடப்புறம் காணப்படும் கரையில் ஒரு சிறிய கோயில் போன்ற கட்டுமானம் தென்படுகிறது. மேற்பகுதி மூடியிருக்கவில்லை.
6 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட மேற்கூரையில்லாத இடத்தில் சிவப்பு துணியால் சுற்றப்பட்ட துர்கை சிலையைப் பார்த்தோம், அழகிய, பழமையான இந்த துர்கை சிலை 7 -8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இச்சிலையின் இடப்புறத்தில் ஸ்ரீ நந்திபருமன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வலதுபுறத்தில் சிங்கம், சூலம், நீண்டவாள், சக்கரம், அம்பு மற்றும் அபய முத்திரை ஆகியவையும், இடதுபுறத்தில் மான், கிளி, சங்கு, வில், கேடயம், கடிஅஸ்தம் (கடிமுத்திரை) ஆகியவையும் காணப்படுகின்றன. எட்டு கைகளுடன் கூடிய இச்சிற்பத்தின் வலதுபுறத்தில் நவகண்டம் ஒன்றின் உருவமும் இடதுபுறத்தில் ஒருவர் வணங்குவது போன்ற உருவமும் காணப்படுகின்றன.
இந்து மத இறைவழிபாட்டில், 100 க்கு 90 சதவீத பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றி யிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன.
அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் வந்து வேடப்பர் கோயிலுக்கு எதிர்புறமுள்ள சாலையில் சென்றோம். அது ஒரு மலையடிவாரம். இந்த மலையடிவாரத்தில் செல்லியம்மன் கோயிலும் அதன் எதிரே தாமரைக்குளமும் இருக்கின்றன இந்த செல்லியம்மன் கோயிலில் சிலையிருக்குமிடத்திற்கு சற்றுமேலே சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. ஆனால் இவற்றின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. நான்கு மனித கோட்டுருவங்களும், நீண்ட வாலுடைய குருவிபோன்ற தோற்றத்தைக் கொண்ட உருவமும் உள்ளது. அவற்றைப் பதிவு செய்து கொண்டோம்.
அடுத்து நடுகல் சிற்பத்தை பார்ப்பதற்கு கல்சிறு நாகலூரை நோக்கி பயணமானோம்.
கல்சிறுநாகலூர்:
அடுத்து விழுப்புரம் வீரராகவன் ஐயா அவர்கள் தான் கண்டுபிடித்த நடுகற்களுள் ஒன்றை காண நம்மை கல்சிறுநாகலூர் அழைத்துச் சென்றார். கல்சிறுநாகலூர் சிறிய அழகான ஊர். அவ்வூரின் அம்மன் கோயிலில் வண்டியை நிறுத்திவிட்டு வயலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நெற்பயிற், சோளம் பயிற்செய்யப்பட்ட வயலின் வரப்புகளில் வழியே பயணத்தை தொடர்ந்தோம், தொலைவில் ஒரு சிறிய குன்றைக் காண்பித்தார்கள். அங்குதான் போகவேண்டுமாம். அங்கே போக சாலை உள்ளதாம், ஆனால் பாறையை உடைத்து கற்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் நமது வண்டி செல்வது கடிணம் அதனால்தான் இந்த நீண்ட நடை.
அந்த குன்றை நெருங்கியபோது, இராஜாராமன் என்பவரின் வயலில் இருந்தோம். இங்கு இரண்டு நடுகற்கள் உள்ளதாம். வயலின் வரப்பை ஒட்டி இருக்கும் தைலமரம்இந்த நடுகற்களைச் சுற்றி வளர்ந்து அவை இருப்பதை மறைத்திருந்தது. அது பெரியமரமல்ல, அரிவாள் எதுவும் கொண்டு செல்லாததால் கையாலேயே அவற்றை நீக்கிவிட்டோம்.
வீரராகவன் ஐயா பையில் கொண்டுவந்திருந்த கருப்பு மையை லேசாக அந்தச் சிற்பத்தில் ஒத்தியெடுக்க, அந்த சிற்பத்திலுள்ள உருவங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. இரண்டு சிற்பக்களிலும் இடக் கையில் கேடயத்தைத் தாங்கிக் கொண்டும் வலக்கையில் நீண்ட வாலையும் ஏந்திக் கொண்டு போர்க்கோலத்தில் நிற்க்கும் போர்வீரன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பத்தில் மட்டும் அவ்வீரனை பின்தொடரும் சிறிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை போட்டுள்ள அவ்வுருவங்களைக் கொண்ட அந்த நடுகற்கள் மண்ணில் நன்றாகப் புதைந்திருக்கிறது.
அவ்வூர்ர் மக்கள் அவற்றை தொம்பன், தொம்பச்சி என்று அழைக்கிறார்கள். ஆனால் இவையிரண்டும் ஆண் சிற்பங்கள்தான்.
தொம்பன், தொம்பச்சி பற்றிக் கேட்டால் ஒரு கதை சொல்கிறார்கள். அந்தகாலத்தில் இங்கு வாழ்ந்த ராஜாவும், ராணியும் மாலை வேளைகளில் இங்கு வந்து மகிழ்ச்சியாக இருப்பார்களாம். இரண்டு குன்றுகளுக்கும் இடையில் கயிறைக் கட்டி அதில் பயணம் செய்து மகிழ்ந்து வந்தார்களாம். ஒருநாள் முனிவர் ஒருவர் விட்ட சாபத்தின் காரணமாக அந்தக்கயிறு அருந்து விழுந்துவிட்டதாம். அவர்கள் விழுந்து இறந்தஇடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்து மக்கள் வழிபட்டுவந்தார்களாம்.
இந்த சிற்பங்கள் 6 அல்லது 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வீரராகவன் ஐயா கூறினார். மேலும் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலெல்லாம் பானை ஓடுகள் சிதறிக்கிடந்தன. எனவே அப்பகுதியில் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் ஒரு ஊர் இருந்தால் அதன் வடமேற்கு திசையில் அவர்களின் இடுகாடு இருக்கும், எனவே இந்த சிற்பங்களின் தென்கிழக்குத் திசையில் ஊர் இருந்திருக்க வேண்டும். அந்த நடுகற்கள் இருக்குமிடத்திற்கு அருகிலுள்ள பாறையில் செந்நிறபாறை ஓவியங்கள் உள்ளன. பாறையின் வளைந்த கீழ்ப்பகுதியில் பத்துபேர் தங்குமளவிற்கு இடமிருந்தது. அவ்விடத்தின் பாறைமேற்பகுதியில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் இவை சிதைந்த நிலையிலுள்ளதால் அவற்றின் உருவத்தை உறுதியாகக் கூற முடியவில்லை. அவற்றையெல்லாம் நமது கேமராவில் படமெடுத்துக் கொண்டு வந்தவழியே வண்டிக்குத் திரும்பினோம்.
வீரராகவன் ஐயாவை விழுப்புரத்தில் இறக்கிவிட்டபின் நன்றி கூறிவிட்டு வண்டியை திருச்சி நோக்கி திருப்பினோம்.
பயணங்கள் தொடரும்...
- பாலா பாரதி




லா சலேத் மாதாக் கோயில்

பயணங்கள் முடிவதில்லை: லா சலேத் மாதாக் கோயில்
கொடைக்கானல் போவதென்றாலே நமக்குத் தனி உற்ச்சாகம்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. அப்போது நமது மாணவார்கள் பத்து பேருடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது சலேத் மாதா தேவாலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்குப் போனோம். அதன் பிறகு பலமுறை இவ்வாலயத்திற்க்குச் சென்றுள்ளோம்.
அன்மையில் இங்கு நண்பர்களுடன் போயிருந்தோம்.
இதமான குளிரும், லேசானத் தூறலும் கொண்ட ஒரு காலைப் பொழுது அது. மழைத்தூறலில் நடந்து செல்வது ரம்மியமானது. நடந்து செல்லும்போது நம்மை கடந்துச் செல்லும் மேகங்கள். குளிருக்காக போட்டிருக்கும் ஸ்வெட்டர் , மங்க்கி கேப் என்று நம்மைப் பார்க்க நமக்கே வேடிக்கையாக இருக்கும். பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில்தான் இத்தேவாலயம் உள்ளது. நடந்தேச் சென்றோம்.
ஒரு சிறிய மேடானப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான் , ஆனால் மிகவும் அழகானது. வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே நீல நிறக் கோடுகளுடன் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் லா சலேத் என்ற சிற்றூரில் இது போன்றக் கோயில் உள்ளது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மார்பிலேத் தாங்கிய சலேத் அன்னையின் கோலம் அனைவரையும் பரவசப்படுத்தக் கூடியது. கோயிலின் முற்றத்தில் சமாதி ஒன்று இருந்தது நமக்கு வியப்பாக இருந்தது. வழக்கமாக அப்படி இருக்காதே யாரோ ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யார் அவர்?
அவரை ஏன் இங்கு அடக்கம் செய்திருக்கிறார்கள்?
இந்தக் கோயிலின் வரலாறு என்ன?
என்று பல கேள்விகள் மனதில் எழ அங்குள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.....
அவர்களிடம் பேசியபோது கிடைத்தச் சுவையான செய்திகள் நம்மை வியக்க வைத்தது.
பிரான்ஸ் நாட்டில் லா சலேத் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு 1846 ஆம் ஆண்டு மெலானி, மாக்சிமின் என்ற இரு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மேரிமாதா காட்சித் தந்துள்ளார். மேரிமாதா எங்கெல்லாம் காட்சி கொடுத்தாரோ, எங்கெல்லாம் அற்புதங்கள் செய்தாரோ அங்கெல்லாம் அந்தந்த இடங்களின் பெயராலே அழைக்கப்படுகிறார். வேளாங்கன்னி மாதா, வாடிப்பட்டி மாதா, லூர்து மாதா, லொரேத் மாதா, சலேத் மாதா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சான்சீர் என்றப் பாதிரியார் ஒரு முறை ரோம் நகரில் போப்ஆண்டவரைச் சந்தித்து விட்டுச் செல்லும் போது, மடகாஸ்கர் தீவில் தங்கியுள்ளார். அங்கு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, சலேத் மாதாவை வேண்டிக்கொண்டால், காய்ச்சல் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். வேண்டிக்கொண்ட சில மணி நேரத்திலே காய்ச்சலும் சரியானது. அப்போது அவர் ,
"திரும்பவும் பணி செய்வதற்காக நான் இந்தியா சென்றால், அங்கு இதே போன்று புனித சலேத் மாதா கோயில் கட்டுவேன்"
என்றார். இந்தியாவிற்கு வந்த அவர், தமிழகத்தில் பல ஊர்களுக்குப் பயணித்த அவர் கொடைக்கானல் உகந்த இடமாக இருந்ததால், அங்கு ஆலயம் கட்டி அங்கேயே பணி செய்தார். அப்போதுதான் இந்தியாவிலேயே சலேத்மாதாவிற்கென முதல் கோயில் கொடைக்கானலில் கட்டப்பட்டது.
நோயிலிருந்து விடுபட்டதன் சான்றாக இக்கோயில் கட்டப்பட்டதால் இங்கு உடற்கோளாறு மற்றும் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்துப் போவதைப் பார்க்கலாம்.
நாங்கள் போயிருந்தபோது கூட வெளியூரிலிருந்து சிலர் வேண்டுதலுக்காக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இங்குள்ள மக்கள் ஜாதி, சமய, இன, மத வேறுபாடுகளைத் தாண்டி இவ்வாலயத்திற்க்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இக்கோயிலின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இங்கு புதன், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருப்பலிப் பூசைகள் நடைபெறுகின்றன. அருகிலுள்ள ஊர்களிலிருந்து வேண்டுதலுக்காக பாதையாத்திரையாக வருபவர்களும் உண்டு.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சலேத் மாதா கோயிலுக்கு வருவதற்கு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக உள்ளன.
இக்கோயிலை சினிமாவில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். சத்யாமூவீஸின் வெள்ளை ரோஜா படத்தில் சிவாஜி இருவேடங்களில் நடித்திருப்பார். ஒருவேடத்தில் பாதிரியாராகவும் மற்றொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார். பாதிரியாரான சிவாஜியைக் கொன்று அந்த கோயிலிலேயே புதைத்திருப்பார்கள். கொலை செய்தவர்களை மற்றொறு போலீஸ் சிவாஜி கண்டுபிடிப்பதுதான் கதை. சர்ச்சில் சாமாதி இருப்பதை தத்ரூபமாக காட்டுவதற்குத்தான் இப்படத்தை இங்கு எடுத்திருக்கிறார்கள்.
சிவாஜிகணேசன் நடித்த மற்றொரு படமான ஞானஒளி படத்திலும் இக்கோயில் கதைக்களமாகக் காட்டப்பட்டிருக்கும். இதன் கதை மேடையில் வெற்றிகரமான நாடகமாகவும், சினிமாவாகவும் வெற்றிநடைபோட்டது. 1972 இல் வெளியான இப்படம் அப்போது அனைத்துத் தரப்பு மக்களாளும் விரும்பிப் பார்க்கப்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகிவிட்ட ஒருவன் கடமையே பெரிதெனக் கருதி அவனைக் கைது செய்யத் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் பாதிரியார் என்று இவர்களைப்பற்றிக் கதை அமைக்கப் பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன் (குற்றவாளி), மேஜர் சுந்தரராஜன் (இன்ஸ்பெக்டர்), கோகுல் நாத் (பாதிரியார்) ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.
இப்போது இடையில் ஒரு வரலாற்று தகவலையும் பார்த்துவிடுவோம்.
பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் கியூகோ. கியூகோ தான் வாழும் காலத்திலே மிகுந்த புகழும் பெயரும் பெற்றவர். அக்காலத்தில் அவரது லே மிசரபிள்ஸ் (Le Miserable) நாவலை வெளியிடுவதற்காக பதிப்பகங்களுக்குள் பலத்த போட்டி நடைபெற்றது. முடிவில் மூன்று லட்சம் பிராங்குகள் கொடுத்து அதன் உரிமையை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பதிப்பகம் விலைக்கு வாங்கியது. 1862 இல் லே மிசரபிள்ஸ் நாவல் வெளியாக போகிறதென்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பாரீஸ் நகர தெருக்கள் எங்கும் பெரிய பெரிய விளம்பரங்கள் வைக்கபட்டிருந்தன என்றால் அந்த நாவலை மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் என்று புரியும். லே மிசரபிளின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜீன்வால் ஜீனும், பிஷப் மைரிலும் காவல்துறை அதிகாரியான ஜாவெர்த்தும் வாசகர்களிடம் மிகுந்தப் புகழ் பெற்றப் பாத்திரங்களாக திகழ்ந்தனர்.
கியூகோவின் இந்த லே மிசரபிள்ஸ் நாவல் தமிழில் ஏழை படும்பாடு என்ற பெயரில் நாகையா அவர்கள் நடித்து ராம்நாத் இயக்கி நாடகமாக வெளியாகியிருக்கிறது. இந்தியில் குந்தன் என்ற பெயரில் சேராப் மோடி இயக்கியிருக்கிறார். தமிழிலே இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் "ஞான ஒளி ". தமிழில் இந்த நாவலை ச.து.சு யோகியார் மொழியாக்கம் செய்திருந்தார்.
- பாலா பாரதி


Tuesday, 28 November 2017

ஒத்தக்கல் மந்து

ஒத்தக்கல் மந்து
நீலகிரி மலையில் வாழும் தோடர் பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளுக்கு 'மந்து' என்று பெயர். அவற்றில் தாவரவியல் பூங்கா அருகே ஒரு மந்து உள்ளது. இங்கே ஒற்றைக் கையுடன் தோடர் இனக்குழுத் தலைவர் ஒருவர் இருந்துள்ளார். அதனால் இந்த மந்து 'ஒத்தக்கை மந்து' என அழைக்கப்பட்டது. இம்மந்தில் உள்ள ஒற்றைக்கல்லை இவர்கள் வணங்கி வந்ததால் காலப்போக்கில் இவ்வூர் 'ஒத்தக்கல் மந்து' என்றானது. பிற்காலத்தில் இவ்விடத்தைச் சுற்றி ஆங்கிலேயர்கள் குடியேறினர். ஆங்கிலேயர்கள் இவ்வூரை ஒத்தகமண்டு Ottachamandhu என்றழைத்தனர். அச்சொல் மீண்டும் தமிழுக்கு வரும்போது உதகண்டலம் Ottachamandalam என்று மருவி இன்று ஊட்டி Ooty ஆகச் சுருங்கி அதன் வரலாற்றுப் பெயரிலிருந்து வெகு தொலைவு சென்றுவிட்டது.
ஒத்தக்கல் மந்து என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது மஞ்சக்கல் மந்து என்றழைக்கப்படுகிறது.அந்த ஒத்தக்கல்லைப் பார்க்க நமக்கு அண்மையில் வாய்ப்புக் கிடைத்தது. திரு பெத்த குட்டன் அவர்கள் நம்மை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்து மேற்சொன்ன தகவல்களை நமக்கு கூறினார்.
- பாலா பாரதி


அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...