இராபர்ட் புரூஸ் பூட்
இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் புரூஸ் பூட் இங்கிலாந்து நாட்டில், 1834 இல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.
தமிழ்நாட்டில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் பயன்படுத்தியக் கருவிகளைக் கண்டறிந்து, இந்தியாவில் பழையக் கற்காலத்திற்கும் புதியக் கற்காலத்திற்கும் இருந்த நீண்ட இடைவெளியை விளக்கினார்.
1858 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது 24 ஆவது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக (Surveyor) தன் பணியைத் துவக்கியவர், 33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891இல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வுப் பெற்றார்.
இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு தொல்பழங்காலத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அடுத்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டார். இங்கு, பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கான சான்றுகளைக் கண்டறிந்தார்.
இவர் கண்டறிந்த கற்கருவிகளின் தனித்தன்மையின் காரணமாக இவை 'சென்னைக் கற்கோடாரி மரபு' (Madras Industry) வகையைச் சார்ந்தது என்கின்றனர். இவர் சேகரித்த கற்கருவிகள் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பூண்டியில், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இராபர்ட் புரூஸ் பூட், திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.
சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், சென்னை அருங்காட்சியத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை" என்றழைக்கப்பட்ட இராபர்ட் புரூஸ் பூட், டிசம்பர் 29, 1912 இல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும். இவரின் கல்லறை ஏற்காட்டில் ஒரு சர்ச் கல்லறைத் தோட்டத்தில் உள்ளது.
(நன்றி: திரு. ஏற்காடு இளங்கோ, திரு ஊட்டி கிருஷ்ணா)
- பாலா பாரதி




