Thursday, 31 August 2017

தமிழ் தாத்தா உ.வே.சா தடத்தில்: மிதிலைப்பட்டி

பயணங்கள் முடிவதில்லை – தமிழ் தாத்தா உ.வே.சா தடத்தில்: மிதிலைப்பட்டி 
(பகுதி 1)
“மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்கமுடியாது. தமிழ்நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன, சிவஸ்தலங்களும், விஷ்ணு ஸ்தலங்களும், சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப்போல் தமிழ் தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்”.
- டாக்டர் உ.வே.சாமிநாதையர்
தமிழில் மிகப்பழமையான சங்க நூல்களை வெளியிட்டுத் தமிழின் சிறப்பையும், தொன்மையையும் உலகம் அறியும்படி செய்த உ.வே.சா அவர்கள், ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்த நிகழ்ச்சிகள் மனத்தை உருக்கக் கூடியவை. தமிழ் மொழியின் பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில் அதாவது 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் தமிழுக்குப் புத்துயிர் ஊட்ட தோன்றிய பலரில் பெருமைக்குரியவர் உ.வே.சாமிநாதய்யர் என்கிற தமிழ்தாத்தா உ.வே.சா.
“….இவற்றுள் மிகப்பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்ற பிரதிகளிற் குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களையெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து, அழகு கெட்டு, மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவள் அணிந்துகொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப்பட்டிப் பிரதியே.”
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை தனக்கு மிதிலைப்பட்டியிலிருந்து கிடைத்தது என ஐயா குறிப்பிடுவதிலிருந்து அவ்வூரின் பெருமையை நாம் உணர்ந்து கொள்கிறோம் அல்லவா !
இத்தகைய பெருமைகள் கொண்ட அவ்வூரை காணச் செல்வோமா……
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடைவரைகளைக் காண்பதற்கான எங்களின் பயணத்திட்டத்தில் மிதிலைப்பட்டியும் இருந்தது. தேவர்மலை குடைவரைக்கோயிலைப் பார்த்துவிட்டு பூலாங்குறிச்சிக்குப் போகும்போது மிதிலைப்பட்டியைப் பார்க்க நம்மை மேலப்பனையூர் திரு கரு. இராஜேந்திரன் அவர்கள் அழைத்துச் சென்றார்.
மிதிலைப்பட்டி போய் சேர்ந்தபோது மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுமார் ஐம்பது வீடுகள் இருக்கும், நம்மை திரு சுப்பு வரவேற்றார். அவ்வூரின் அழகிய சிற்றம்பலக் கவிராயரிடமிருந்துதான் பழைய ஓலைச்சுவடிகளுடன் மணிமேகலையைப் பெற்றதாக உ.வே.சா குறிப்பிடுவார்.
“கவிராயர் வீடு எங்கேயிருக்கிறது? எங்களைக் கூட்டிப் போகிறீர்களா?"
“இந்த ஊரே ஐயாவோடதுதான், ஐயாவோட வாரிசுகள் சென்னனையில் இருக்கிறார்கள். எப்போதாவதுதான் வருவார்கள்”
போசிக்கொண்டே வந்த நாங்கள் இரண்டு மணித்துளிகளில் ஒரு பழைய வீட்டின் முன்பாக நின்றோம்.
“இதுதான் ஐயாவோட வீடு”
இடிந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத, முழுவீடாக இல்லாமல் வீட்டின் முகப்புமட்டுமே சுற்றுச்சுவருடன் காணப்பட்டது, ஆனாலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
உ.வே.சா அவர்கள் 'என் சரித்திரம்' எனும் நூலில் இவ்வீட்டைக் குறிப்பிடுகிறார்.
"...அவருடைய பரம்பரையானது தமிழ் வித்துவான்களுடைய பரம்பரையாதலின், பல அரிய தமிழ்ச் சுவடிகள் பல நூற்றாண்டுகளாகச் சேகரித்து அவர் வீட்டிலே பாதுகாக்கப் பெற்றிருந்தன. அவருடைய முன்னோர்கள் பல ஸமஸ்தானங்களில் யானை முதலிய பரிசுகளும் மானியங்களும் பெற்றவர்கள். அவர் வீட்டின் பக்கத்தில் யானை கட்டிய கல்லையும் சிவிகையையும் பார்த்திருக்கிறேன். அங்கே கலைமகளும் திருமகளும் ஒருங்கே களிநடம் புரிந்தனர்."
கலைமகளும் திருமகளும் ஒருங்கே களிநடம் புரிந்த அந்த வீட்டின் இன்றய நிலை கண்ணீரை வரவழைக்கின்றது. நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றிருந்த நமது எண்ணங்களைச் சுப்புவின் குரல் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.
"இதுதான் யானையைக் கட்டிவைக்கும் கல்"
நான்கடி உயரமும் ஒன்றரைக்கு ஒன்றரை அடி கனமும் கொண்ட நட்டுவைக்கப்பட்ட கல்லை சுப்பு காண்பித்தார், அதில் எழுத்துகள் காணப்பட, பின்பு படித்தறிந்துக்கொள்ளலாம் என எண்ணி படமெடுத்துக் கொண்டோம்.
"யார் சிறந்த கவிராயர் என்பற்கு இங்குத்தான் பல போட்டிகள் நடக்கும் என எங்கள் முன்னோர் கூறக் கேட்டிருக்கிறேன்."
"போட்டியா... சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?"
"ஒருமுறை 'வெண்பாபுலி கவிராயருக்கும்', 'பாடுவார் முத்தப்ப செட்டியாருக்கும்', 'அறம்பாடி' யார் சிறந்த கவிராயர் என நிறுவ தேவையேற்பட, போட்டி மிதிலைப்பட்டியில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் முன்னிலையில் நடைபெற்றதாம். வெட்டப் பாடுவதற்கும், ஒட்டப்பாடுவதற்கும் இருவரும் தயாராகியுள்ளனர்.
வெட்டவும், ஒட்டவும் பாடுவது என்றால், முதலில் வெட்டப்பாடுபவர் பாட அங்கிருக்கும் ஆட்டுக்கிடாவின் தலை துண்டாக விழ வேண்டும். பின்னர் ஒட்டப்பாடுபவர் பாட துண்டான தலையைக் கிடாவின் உடலுடன் சேர வேண்டும். வெண்பாபுலிக் கவிராயர் வெட்டப்பாடவும், பாடுவார் முத்தப்ப செட்டியார் ஒட்டப்பாடவும் முடிவெடுக்கப்பட்டு. அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயரின் முன்னிலையில் அவரின் வீட்டுக்கு முன்பாக இதோ இங்கேதான் போட்டி ஆரம்பமானதாம். முதலில் பெண்பாபுலிக் கவிராயர் பாட ஆரம்பிக்க அருகில் சிவன்கோயிலில் இருந்த ஆட்டுக்கிடா போட்டி நடைபெறும் இடத்திற்குத் தானே வந்ததாம்.
'அலறிய வாயும் உளறிய வாயும் உலராது இருப்ப உன் சிரசு விழுந்திடவே'
என வெண்பாபுலிக் கவிராயர் பாடவே கிடாவின் தலை துண்டாகி கீழேவிழ,
பின்பு..

'அலறிய வாயும் உளறிய வாயும் உலராது இருப்ப உன் சிரசு ஒட்டிடவே'
எனப் பாடுவார் முத்தப்ப செட்டியார் பாட, கிடாவின் தலை அதன் உடலில் ஒட்டிக்கொண்டதாம். பிறகுத் தலை ஒட்டியவுடன் கிடா கோயில் வாசலில் போய் நின்றதாம்."
சுவையாக சொல்லிமுடித்த சுப்பு மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சுவையான தேநீர் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை முழுமையாக கிடைக்கச் செய்த புண்ணிய பூமியாம் மிதிலைப்பட்டியை மீண்டுமொருமுறை வணங்கிவிட்டு விடைபெற்றோம்.
கிளம்பும்போது மிதிலைப்பட்டித் தொடர்பான மற்றொரு செய்தி நினைவில் வந்தது. அது அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயரைப் பற்றி உ.வே.சா அவர்கள் எழுதிவைத்துள்ளக் குறிப்புதான் அது. இனி உ.வே.சா ஐயா சொல்வதைக் கேளுங்கள்....
....தொடரும்
- பாலா பாரதி

















No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...