Tuesday, 28 August 2018

பயணங்கள் முடிவதில்லை: திருக்கோட்டியூர்

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இந்நாளில் நாம், அவர் வாழ்வில் முக்கிய இடம்பெற்றுள்ள ஒரு ஊருக்குப் பயணம் செல்வோமா?
இம்முறை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்க்க கிளம்பிவிட்டோம். திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிச் சென்று அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக திருக்கோட்டியூர் செல்வதாகத் திட்டமிட்டமிட்டுள்ளோம்.
இராமானுஜர் நமது நாட்டின் புகழ்மிக்க பக்தி இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் சமய‌த்தையும் சமூகத்தையும் சீர்திருத்தம் செய்தவர்.
இதோ... திருக்கோட்டியூர் நெருங்கிவிட்டது...
தொலைவிலிருந்துப் பார்க்கும்போது உயரமான மதில் சுவர்களுடனும் தென்னைமரங்களுடனும் கோயில் அழகாகக் காட்சியளிக்கிறது. நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரத்தின் கம்பீரமாகக் காட்சியைப் பிரமிப்பாகப் பார்த்தவாறே உள்ளே செல்கிறோம்.
நூற்றுஎட்டு வைணவ திருக்கோயில்களில் ஒன்றான திருக்கோட்டியூர் கோயிலின் உள்ளே இருக்கிறோம். இங்குள்ள சௌமியநாராயணப் பெருமாள் சந்நிதிக்கு முதலில் செல்வோம். பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த என முக்கோலங்களும் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். மூலவர் சௌமிய நாராயணன், தாயார் மகாலட்சுமி ஆவர்.
இக்கோயில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்புப் பெற்றது.
அங்குள்ளவர்களிடம் பேசும்போது, இவ்வூரின் பெயர்க்காரணமாகப் புராணக்கதையொன்றில், முக்கடவுளரும், தேவர்களும், ரிசிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் கொல்வது எப்படி என கண்டறிந்த இடம் என்கிறார்கள்.சிலர் வேறு காரணத்தையும் கூறுகிறார்கள், கோஷ்டி (கூட்டம்) சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப் பட்டதாக கூறப்பட்டாலும், திருக்கு + ஓட்டியூர் = திருக்கோட்டியூர் எனப் பெயர்பெற்றதாகக் கூறுவது முன்னதைவிடப் பொருத்தமாகத் தெரிகிறது. திருக்கு என்றால் பாவம் என்றுப் பொருள். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்று பொருள்படும்படி திருக்கோட்டியூர் என அழைக்கப்பட்டதைத் தெரிந்துகொண்டோம். அடுத்து, பிரகாரத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது, இந்தக் கிணற்றை "மகாமக கிணறு' என்று அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்வார்களாம்.
'ஓம் நமோ நாராயணாய' எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளதாம். இராமானுஜர், கோபுரம் மீது ஏறி நின்று உபதேசம் செய்த இடத்தைக்காண கோயிலுக்குள் உள்ள குறுகிய பாதை வழியாக கோபுரத்தின் மேல்தளம் சென்று நாமும் தரிசிக்கலாமா?
பெருமாளை வழிபட்டுவிட்டு வெளியே வரும் நமக்கு அப்போதுதான் நினைவுக்கு வருகிறார் நம்பி அவர்கள். அருகில் இருந்தவர்களிடம் நம்பி அவர்களின் வீடு எங்கேயென வினவ, பழைய காலத்து வீட்டைக் காட்டினார்கள். வீட்டுக்குமுன் சிறிது நேரம் நிற்கிறோம், நமது நினைவுகள் ஆயிரமாண்டுகள் பின்னோக்கி நகர்கின்றன. நம்பி அவர்கள் இங்கு நின்றுக்கொண்டு கோபுரத்தைப் பார்ப்பது போல தெரிகிறதே!
“திருக்கோஷ்டியூர் நம்பிகள் கல்திருமாளிகை” என்று எழுதியிருந்த பழைய காலத்து வீட்டுக்கு வெளியே நின்று,
'திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறோம்'
என்ற நமது குரலுக்கு பதிலாக பெண்மணியொருவர் வெளியே வந்து நம்மை வரவேற்கிறார்.
'என் பெயர் செண்பகம் எங்க வீட்டுக்காரர் நாராயணன், நாங்கள் நம்பியின் வம்சா வழியினர்'.
அறிமுகத்துடன் உள்ளே அழைத்துச் சென்றவர், வீட்டைச் சுற்றிக் காண்பிக்கிறார். கல்தூண்களுடன் சிறிய மண்டபம் போன்றிருந்த அவ்வீட்டின் ஓர் அறையில் நம்பி அவர்கள் வழிபட்ட படத்தை வைத்திருந்தனர். இன்றும் வழிபாட்டிலிருந்ததை நாமும் வணங்கிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வருகிறோம்...
சரி... யார் இந்த திருக்கோட்டியூர் நம்பி அவருக்கும் இராமானுஜருக்கும் என்ன தொடர்பு? எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெரியவரிடம் கேட்போமா?
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். திருவரங்கம் பெரிய நம்பியின் உபதேசத்தின்படி இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியைக் காண வருகிறார். சௌம்ய நாராயணப் பெருமாளை வணங்கிவிட்டு, நம்பியின் வீடு எங்கே என்று வினவி அவர் வீட்டையும் அடைகிறார். வீட்டிற்குள் இருந்தபடியே யார் எனக் கேட்க, நான் இராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி "நான் செத்து வா!" என்கிறார்.
திருவரங்கம் திரும்பிய இராமானுஜர், நம்பி அவர்கள் கூறியதன் பொருள் அறியாமல் மீண்டும், மீண்டும் அதேபோல் கூற அதே பதில் கிடைக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பலமுறை இராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைச் சொல்லி அத்தனை முறையும் நம்பி அவருக்கு உபதேசிக்க மறுத்துவிட்டார். கடைசியில், நான் செத்து வா என்றால் நான் என்ற அகந்தையை விட்டுவிட்டு வா என்று பொருளறிந்து, அடுத்தமுறை சென்றபோது இராமானுஜர் 'அடியேன் வந்திருக்கிறேன்' என்கிறார். உடனே, உள்ளே அழைத்த நம்பி இராமானுஜருக்கு "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை உபதேசிக்கிறார்.
“இந்த இரகசியம் தெரிந்தவன் வைகுந்தம் செல்வான். நான் இப்போது உனக்கு உபதேசிக்கிறேன். நீ யாருக்கும் உபதேசிக்க கூடாது மீறினால் நரகம் புகுவாய்!”
என்ற சத்தியம் வாங்கிக்கொண்டு இராமானுஜருக்கு அம்மந்திரத்தை உபதேசிக்கிறார். ஆச்சாரியரிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற இராமானுஜர் திருவரங்கத்துக்குப் புறப்பட்டார். புறப்படுமுன் திருக்கோட்டியூர் கோயிலின் கோபுரத்தின் மீது ஏறி கீழே இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு உரத்த குரலில் கூட்டத்தை நோக்கி,
“நீங்கள் இந்த உலகத்துத் துயரங்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுபட்டு மோட்சம் பெற விரும்பினால், நான் கூறும் இந்த மந்திரத்தை என்னுடன் சேர்ந்து மூன்று முறை உச்சரியுங்கள்!”
“ஓம் நமோ நாராயணாய”
என்று கூட்டதை பார்த்து மூன்று முறை சொல்ல, கூட்டமும் மொத்தமாக அந்த மந்திரத்தை உச்சரித்தது.இராமானுஜர் செய்ததை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த கோபம் கொண்டவராக
“உனக்கு நரகம் கிட்டும் என்று தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்க
“தங்கள் வாக்கை மீறினால் நரகம் கிட்டும் என்பதை நான் அறிவேன். நான் ஒருவன் நரகம் போனாலும், மற்றவர்களுக்கு உங்களுடைய உபதேசத்தால் மோட்சம் கிடைக்குமே”
என்று இராமானுஜர் பதில் கூற,
இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணி “எம்பெருமானாரே!” என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி. எம்பெருமானாரே என்றால் எனக்கே பெருமான் ஆனீர் என்று பொருள்.
நம்பி அவர்களின் வீட்டுமுற்றத்திலிருந்துப் பார்த்தால் கோயில் கோபுரத்தில் ஒரு இடத்தில் இராமானுஜரின் உருவச்சிலைத் தெரிகிறது. இங்கிருந்துதான் அவர் அந்த மந்திரத்தை மக்களுக்கு போதித்தாராம். அனைத்து மக்களும் உய்திருக்க வேண்டிய இராமானுஜரை மனத்தில் இருத்தி வீடு திரும்புவோமா...
(திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவிலும் திருக்கோட்டியூர் உள்ளது. அமைவிடம் 10°04′N 78°34′E)
- பாலா பாரதி






பயணங்கள் முடிவதில்லை: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி, தஞ்சாவூர் சாலையில், திருவெறும்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஜங்சன் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இங்குச் செல்கின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் தொடர்வண்டிகளும் திருவெறும்பூரில் நின்று செல்கின்றன. நகரப்பேருந்தில் செல்வோர் மலைக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தொல்லியல்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில், தமிழகத்தில் உள்ள, 275 பாடல் பெற்ற தலங்களில் 124 ஆவது தலமாக விளங்குகிறது. இத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும். கட்டி முடிக்கப்படாத அல்லது சிதிலமடைந்தக் கட்டுமானங்கள் கோயிலின் வடக்கேக் காணப்படுகின்றன.
இக்கோயிலில் சோழர், பாண்டியர், நாயக்கர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் திருவெறும்பியூர் எனவும், இறைவன் ஆதிசண்டேசுவரர் எனவும் குறிக்கப்பட்டுள்ளன. முதலாம் ஆதித்தன், இராசராசன், மூன்றாம் இராசராசன், முதல் இராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், மாறவர்மன் சுந்தர பாண்டியன், விருப்பன உடையார் முதலியோர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிவன் சன்னதியின் இடப்புறம் நவகிரகங்கள் சன்னதியும், வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன. நாங்கள் போயிருந்தபோது சிவனடியார்கள் தவமிருந்து சிறப்பு பூசைகள் செய்துக்கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பூசைப்பொருள்களுள் பாதரசத்தைக்கொண்டு கட்டப்பட்ட மூலிகைகளாலான ருத்திராட்சம் காணப்பட்டது.
இம்மலையில் எழுந்தருளியுள்ள ஈசனை திருநாவுக்கரசர்
"எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை..."
"விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!..."
என்று மணமுருகி அழைக்கிறார்.
எறும்பியூர் ஈசனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
- பாலா பாரதி





பயணங்கள் முடிவதில்லை...குமரப்பட்டி

நமது அடுத்தப் பயணம் குமரப்பட்டியை நோக்கி...
குமரப்பட்டியில் அப்படி என்ன இருக்கிறது? 
வீரபாண்டிய கட்டபொம்மனை பிடித்துக்கொடுத்த ஊர் என்ற அவப்பெயரை தாங்கிய அவ்வூர் மக்கள், அவர் மறைந்து வாழ்ந்த காட்டை பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கிறார்களாம். அவ்வூர் மக்கள் இக்காட்டிலிருந்து ஒரு சிறு குச்சியைக் கூட ஒடிப்பதோ, எடுத்துச் செல்வதோ இல்லையாம் பிறறையும் எடுத்துச் செல்ல அனுமதிப்பதிப்பதும் இல்லையாம். கட்டபொம்மன் வாழ்ந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் இருப்பதாக அவ்வூர்காரர்கள் கூறுகிறார்கள்.
ஓய்வு பெற்ற தமிழாசிரியர் முனைவர் சுப்பிரமணியன் ஐயா அவர்களின் அழைப்பை ஏற்று, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள திருக்களம்பூர் - வேந்தன்பட்டி சாலையின் கிழக்கே உள்ள குமரப்பட்டி சென்றோம். ஊருக்கு வடக்கே ஊமையன் கோரை என்றழைக்கப்படும் இக்காடு உள்ளது. நம்மை திருக்களம்பூர் ஊர்த்தலைவர் திரு பழனிச்சாமி அவர்கள் அன்புடன் வரவேற்று அக்காட்டைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த முடியாது என்று புரட்சி செய்தார். சுதந்திர தாகத்திற்கு வித்திட்ட கட்டபொம்மன் மீது ஆங்கிலேயர்கள் போர்தொடுக்க, பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மன், சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்த்தானத்திற்கும் இடையிலிருந்த குமரபட்டிக்கு அருகிலுள்ள காட்டில் மறைந்து வாழ்ந்திருக்கிறார். புதுக்கோட்டை அரசரின் ஆணைப்படி, அருகிலுள்ள திருக்களம்பூர் எனும் ஊரிலிருந்த சிலர் சூழ்ச்சி செய்து, விருந்துக்கு அழைப்பது போல அழைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தார்களாம்.
கட்டபொம்மனை பிடித்துக்கொடுத்த ஊர் என்ற அவப்பெயரை தாங்கிய அவ்வூர்மக்கள், அவர் மறைந்து வாழ்ந்த இக்காட்டை பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கிறார்களாம். குமரப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பர் வழிகாட்டி அழைத்துச் செல்ல அவ்வூர் சிறுவர்கள் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். எதையும் எடுக்காதீர்கள் என்ற நிபந்தனையுடன் விடுதலைப் போராட்டக் களத்தின் சிறு அங்கமாகத் திகழும் இக்காட்டினுள் ஒருவித படபடப்புடனேயே நுழைந்தோம். சிறிய காடுதான் வேங்கை மரங்களும், காட்டுப்புளிய மரங்களும், உயரமான கள்ளிச் செடிகளும், காட்டுச் செடிகளும் அடர்ந்திருந்த அந்தக் காட்டில் உள்ள ஒத்தையடிப் பாதையிலேயே நடந்து சென்றோம்.
பாதை இரண்டாகப்பிரியுமிடத்தில் வலப்புறமாக உள்ள பாதையில் கூட்டிப் போனார்கள். காட்டுக்குள் நுழையும் முன்பாகவே காலிலுள்ள செருப்புகளை கழற்றிவைத்துவிட்டு வரும்படி கூறியிருந்தனர் எனவே வெறும் காலுடனேயே அக்காட்டுக்குள் உலவினோம்.
நடுக்காட்டினுள் காட்டுக்கோயில் இருந்தது. அதை அவர்கள் "ஊமையன் கருப்பர் கோயில்" என்று அழைக்கின்றனர். அங்குப் பெரிய பெரிய ஈட்டிகளும் அரிவாள்களும் நடப்பட்டிருந்தன. நிறைய மணிகளும் கட்டப்பட்டிருந்தன. நேர்த்திக்கடனுக்காகப் பல நிறங்களில் பட்டுத்துணிகள் கட்டப்பட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. கட்டபொம்மன் பிடிபட்டவுடன் அவர் தம்பி ஊமைத்துரை தப்பி வந்து இந்தக் கருப்பர் கோயிலில் மறைந்து வாழ்ந்ததாக அவ்வூர்காரர்கள் கூறுகிறார்கள். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்குமாம், அத்திருவிழாவில் கட்டபொம்மன் நாடகம் நடத்தப்படுமாம்.
அங்கிருந்து சிறிது தொலைவிலுள்ள இடத்தில் கட்டபொம்மன் மறைந்திருந்ததாக கூறப்படும் ஒரு பாறையைக் காட்டினார்கள்.பெரியப் பாறை, மனிதர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. விளக்கு ஏற்றுவதற்காகப் போடப்பட்டிருந்த ஒரு சிறுகுழியைத் தவிர வேறு எந்தத் தடயமும் காணமுடியவில்லை.
நம்மை இக்காட்டிற்கு அழைத்துச் சென்றவரும், திருக்களம்பூர் ஊரைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டை மாவட்ட குலதெய்வங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான முனைவர் திரு சுப்பிரமணியன் ஐயா அவர்கள்,
"பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி வந்த கட்டபொம்மன், ஊமைத்துரை, கட்டபொம்மனின் மைத்துனர்கள் இருவர், மெய்க்காப்பாளர்கள் மூவர் என மொத்தம் ஏழு பேர் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கும் இடையில் புதுக்கோட்டை மகாராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தக் காட்டில் மறைந்திருந்தனர். புதுக்கோட்டை மகாராஜாவின் அனுமதி பெறாமல் தங்கியிருந்த காரணத்தினால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார் மன்னர். திருக்களம்பூர் சர்தார் முத்துவீரவைரவ அம்பலக்காரர் என்பவரிடம் பணி ஒப்படைக்கப்படுகிறது. அம்பலக்காரரும் தாரை தப்பட்டை முழங்க காட்டிற்குச் சென்று கட்டபொம்மனையும் மற்றவர்களையும் தன்வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். அவரின் நோக்கத்தைத் தெரிந்துக்கொள்ளாத கட்டபொம்மன் விருந்துக்கு சம்மதிக்கிறார். வீட்டினுள் தூணிற்கு அருகிலிருந்து சாப்பிட்ட கட்டபொம்மன் சாப்பிட்டு முடியும் தருவாயில் அத்தூணிலேயே தீடீரெனக் கட்டப்பட, இந்நிகழ்வைச் சற்றும் எதிர்பார்க்காத மற்றவர்களும் பிடிபடுகிறார்கள்.
இதற்கிடையில் ஆங்கிலேயர்களிடமிருந்து கட்டபொம்மனைப் பிடித்துக்கொடுக்கும்படி ஆணை வர, ஆங்கிலேயர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துவரும் தனது ஆட்சியில் தன் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் துன்பம் வந்துவிடக்கூடாதே என்ற நோக்கத்துடனும் கட்டபொம்மனையும் மற்றவர்களையும் ஆங்கிலேர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார் மன்னர். கைது செய்யப்பட்டவர்களை புதுக்கோட்டைக்கு அழைத்து வராமல் அங்கிருந்தே மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு ஊமைத்துரையும் மற்றவர்களும் தப்பிக்க , கட்டபொம்மன் மட்டும் கயத்தாற்றிலுள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்படுகிறார்.
இந்த நிகழ்வு தொடர்பான செய்திகள் 'முத்துவீரவைரவ அம்பலக்காரர் கும்மிமெட்டில்' உள்ளது. இந்தக் கும்மிப் பாட்டு எனது ஆய்வுப் பணியின்போது எனக்குக் கிடைத்தது. எனது கருத்துப்படி புதுக்கோட்டை மகாராஜா கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தார் என்று சொல்லலாமே தவிர காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது பொருத்தமற்றது, ஏனெனில் பிடித்துக்கொடுப்பதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது."
ஆங்கிலேயர்கள் , வீரபாண்டிய கட்டபொம்மனை ஒரு கொள்ளைக் கும்பலின் தலைவன் என்றவாறு சித்தரித்து வைத்திருந்தனர். இவர் வரலாறை பாமர மக்களுக்கும் தெரிந்துகொள்ளும் வண்ணம் அனைவருக்கும் கொண்டு சேர்த்த பெருமை "ம.பொ.சி " அவர்களைச் சேரும். இவர் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் புத்தகத்தால் கவரப்பட்டே பீம்சிங்-பந்துலு ஆகியோர் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை எடுத்தனர். சிவாஜிகணேசனின் நடிப்பும், அரு.இராமனாதன் அவர்களின் வசனமும் அப்படத்தை வெற்றிப் படமாக்கியது. கட்டபொம்மன் என்றாலே சிவாஜியின் தோற்றம்தான் நினைவுக்கு வருமளவிற்கு அப்படத்தின் தாக்கம் இருந்தது.
கட்டபொம்மனின் வரலாற்றை மறைக்க முற்பட்ட ஆங்கிலேயர்கள், கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட புளிய மரத்தை மக்கள் வணங்குவதைக் கண்டு அப்புளியமரத்தை எரித்துவிட்டனர். பின்னர் சிவாஜி கணேசன் அவ்விடத்தை அடையாளம் கண்டு அதைத் தன் சொந்த செலவில் வாங்கி கட்டபொம்மனுக்கு நினைவிடம் கட்டினார். இந்த நினைவிடம் கண்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை NH7 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும் மணியாச்சிக்கும் இடையில் கயத்தாறு எனும் ஊரில் அமைந்துள்ளது.
எங்கெங்கோ அயல்நாடுகளிலுள்ள இடங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு நம் அருகிலுள்ள இவ்வூரைப்பற்றித் தெரிவதில்லை. வரலாறு என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துகளாகவே நாம் நினைக்கிறோம், ஆனால் அவை நமக்கு வாழ்க்கைப் பாடங்கள். பின்னாளில் நிகழ இருப்பனவற்றை கட்டியங்கூறும் பதிவுகள்.
மீண்டும் அடுத்தப் பயணத்தில் சந்திப்போம்...
பயணங்கள் தொடரும்...
- பாலா பாரதி




அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...