Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை....கம்பைய நல்லூர்- கிருஷ்ணகிரி




.கம்பைய நல்லூர்- கிருஷ்ணகிரி 

                         அடுத்து நான் திரு கே.டி.காந்திராஜனுடன் சமீபத்தில் சென்றுவந்த கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளிலுள்ள தொல்லியல் சார்ந்த இடங்களைப்பற்றி எழுதலாமென்றிருக்கிறேன்.

                        எங்கள் பயணத்திட்டத்தை வகுத்து அனைத்து இடங்களுக்கும் எங்களை அழைத்து சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த திரு சுகவன முருகன் அவர்களை உங்களுக்குத் தெரியும். நமது குழு உறுப்பினர். அவரைப்பற்றி மேலும் சில செய்திகளுடன் நமது பதிவுகளைத் தொடர்வோம். "புது எழுத்து' மனோன்மணி என்று இலக்கிய உலகில் அறியப்படுகிற சுகவன முருகன்,கவிஞர். அவரது "கலவரம்' கவிதைத் தொகுப்பு பரவலாகக் கவனம் பெற்றது.கருவூலத்துறை பணியிலிருந்து விலகி ஆசிரியப்பணியை விரும்பி ஏற்றுள்ளவர்.வடமேற்கு தமிழகத்தின், குறிப்பாக கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள தொல்லியல் வளங்களைத்தேடித்தேடி கண்டடைவதில் பேரார்வம் கொண்டவர்.
           
     கிருஷ்ணகிரி பகுதியில் எங்குத் தடுக்கி விழுந்தாலும் அந்த இடம் ஒரு பெருங்கற்காலநாகரிகப் பகுதியாக இருக்கும். பழைய கற்காலம், புதிய கற்காலம் மற்றும்இரும்புக்காலம் தொடர்ந்து தற்காலம்வரை தொல்லியல் சின்னங்கள் அதிகளவில்இப்பகுதியில்தான் கிடைக்கின்றன. திரு சுகவன முருகன் எங்களை முதலில் கம்பைய நல்லூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு வயல்வெளியில் சிறியதும் பெரியதுமான கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு ஆள் நடந்து செல்வதற்கு இடமிருந்தது. உள்ளே நுழைவதற்கு வழியும் விடப்பட்டிருந்தது. அவ்வழியே நடந்தால் அப்பாதை வளைந்து வளைந்து சென்று கடைசியில் மையத்திற்கு செல்கிறது.ஏதோ ஒரு வகையான விளையாட்டு போல இருந்தது.அதுபற்றி திரு முருகனிடம் கேட்டபோது அதற்கு பெயர் புதிர்நிலை என்றும் இது பெருங்கற்காலத்தைச்(சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய)  சார்ந்தது என்றும் இத்தகைய அமைப்பு உலகின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் அது ஒரு கட்டுமானமாக வேறெங்கிலும் இல்லை.
             புதிர்நிலைகள் என்பது மையத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலைப் பாதைகளுடன் விளங்குபவையாகும். இத்தகைய புதிர்நிலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன என்பதைப் புதிய கற்காலத்தில் இருந்தே தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இதில் வட்டப்புதிர் வழிகள் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  தென்னிந்தியாவில் முதன் முதலில் கிருஷ்ணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சதுரப் புதிர்நிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.



          இந்த புதிர்நிலை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, அரசனால் சிறைபடுத்தப்பட்ட கணவனை உயிருடன் மீட்ட மனைவியின் கதை என்கிறார்கள்.இந்த புதிர்நிலையில் உள்ள ஏழு பட்டை தளப்பாதையில் நடைபயின்று வெற்றி அடைபவர் மனதில் நினைத்ததைப் பெறுவர் என்பதும், கற்களைத் தாண்டிச் செல்பவர்கள் நற்பலன்களை இழப்பர் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்தியாவிலேயே மிக முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பைத் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன், பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தைச் சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தருமபுரி மாவட்டம் கம்பையநல்லூர் அருகே கண்டுபிடித்துள்ளனர். இத்தொல்லியல் சின்னம் இரும்பு காலமான பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகும்.
      இத்தகைய  தொல்லியல் சின்னங்கள்  புதிய கற்காலத்திலிருந்தே உலகெங்கும் இருந்துள்ளதைத் தொல்லியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.  பல்வேறு புத்தகங்களில் எலிக்கு ரொட்டியை எடுக்க உதவுங்கள், அந்தப் பூனைக்கு எலியைப் பிடிக்க உதவுங்கள் என்று வட்டமாக, சதுரமாக புதிர் வழிகள் போடப்பட்டிருக்கும். அவைதான் புதிர் நிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அது சரி இந்தப் புதிர் நிலைகளைக் கண்டறிந்தது யார்? அல்லது எந்த இனத்தவர் என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. ஆனால் வட்டப் புதிர்வழிகள்  ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையானவையாகும். உள்/வெளிச் செல்ல இயலாத பல்வேறு சுழல்நிலைப் பாதைகளுடன் மையத்தே விடையைக் கொண்டு விளங்குபவை புதிர்நிலைகள் எனப்படும்.   உதாரணமாக மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக் கொண்டு உயிரிழந்த சக்கரவியூகம் இவ்வாறான ஒரு புதிர்நிலையே ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக அரிய ஒன்றை அடைய நினைக்கும் மனித மனம் ஏற்படுத்திய சிக்கல் மற்றும் அதற்கான தீர்வை வைத்திருப்பவை இப்புதிர்நிலைகள் எனலாம். கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட புதிர்நிலைகள் கி.மு. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லுசன்னா என்ற புதிர்நிலை கி.மு. 200ம் ஆண்டைச் சேர்ந்தது எனக் காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.   சிரியாவில் புதிர்நிலைகள் வரையப்பட்ட பானைச்சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கி.மு. ஆயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும். முக்கியமான வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய புதிர்நிலைகள் கிரேக்க மற்றும் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்தவை மட்டுமல்ல அவை ஆய்வாளர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டும் உள்ளன. உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிர்நிலைகள் அதிகமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன. அவை சுமார் 300 முதல் 600 ஆண்டுகள் பழமையானவை.   
பெருங்கற்கால சின்னம் என்றால் என்ன?
          புதிய கற்காலத்தை அடுத்த காலகட்டத்தைப் பெருங்கற்காலம் என்று வரையறுக்கிறோம். தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் இரும்புக்காலத்தை ஒட்டியதாகும். இறந்தவர்களின் ஈமப்புதைகுழிகளின் மீது பெரிய பெரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஈமநினைவுச் சின்னங்கள் பெருங்கற் படை சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் உண்டு. கற்பதுக்கைகள் (Cist) கற்கிடை (Dolmen) குத்துக்கல்(Menhir) பரல் உயர் பதுக்கை (Cairn Circle) என்று இதன் எல்லா வகைகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன.

பயணங்கள் முடிவதில்லை....

பாலா....





பயணங்கள் முடிவதில்லை....மதிகெட்டான் சோலை


மதிகெட்டான் சோலை
             அங்கே போனா அம்புட்டுத்தான்! வழிதெரியாமல் காட்டுக்குள்ளேயே மாட்டிக்கொள்வோம்! மயக்கத்தில் அங்கேயே திரிந்து கொண்டிருப்போம்! எதற்கு வேண்டாத வேலை எனப் பார்ப்பவர்கள் பலரும் அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அந்த மதிகெட்டான் சோலையில்? அங்கே போய்தான் பார்க்கலாமே என்று எண்ணி நானும், விஜயன், ரமேஷ்பாபு, ஜோதி ஆகிய ஆசிரியர்களும் கொடைக்கானல் நோக்கிப் புறப்பட்டோம்.
                     முதல்நாளே வனத்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டோம். எங்களுக்கு வழியைக் காட்டிப் பத்திரமாக அழைத்து வருவதற்க்கு வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும், அந்தக் காட்டுப்பகுதியருகே வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்வரும் சம்மதித்தனர்.

                முதல்நாளே கொடைக்கானலில் தங்கி விடிந்தவுடன் நாங்கள் நால்வரும் போகும் வழியில் அவர்கள் இருவரையும் சேர்த்துக்கொண்டு காட்டை நோக்கி புறப்பட்டோம். மோயர் பள்ளத்தாக்கிலிருந்து பேரிஜம் போகும் வழி எப்போதும் மூடியிருக்கும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே போகமுடியும். எங்கள் அனுமதியைக் காட்டிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
                       அடர்ந்தகாடு, எங்கும் மைதிஎங்கும் மூடுபனி எங்கள் வண்டிக்குப் பத்தடி தூரத்தில் வரும் வண்டிகூட தெரியவில்லை. முகப்பு விளக்கைப் போட்டுக் கொண்டே மெதுவாக வண்டி ஊர்ந்து  சென்றது. சுமார் 15 கி.மீ வந்திருப்போம். அப்போது மணி 9 இருக்கும். வண்டியை நிறுத்தச் சொன்னார்கள். இடப்புறம் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சையாக மரங்களின் மேற்பகுதிகளுடன் கீழே வனம் தெரிந்தது. பச்சை நிறம் மட்டுமின்றி ஆங்காங்கே சிவப்பு வண்ணத்திலும் மரங்களின் மேற்ப்பகுதியைப் பார்க்கமுடிந்தது. இதுதான் "மதிகெட்டான்சோலை" என்றார்கள்.

திக்கென்றிருந்தது. இதற்குள்ளாகவா போகப்போகிறோம்?என்று நினைக்கும்போது இவ்வனத்தைப்பற்றி கேள்விப்பட்டதெல்லாம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தியது.
                வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சாப்பாடு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பால்ராஜ் வழிகாட்ட ,எங்கள் ஆறுபேர் குழு மதிகெட்டான்சோலையில் நுழைந்தது.அடர்ந்த மரங்கள், ஆங்காங்கே ஓடும் சிறு ஓடைகள், கணமான நிசப்தம், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சத்தம் என்று புதிய அனுபவமாகவும் அதேசமயம் பயமாகவும் இருந்தது.
                பால்ராஜ் அக்காட்டைப்பற்றியும், அங்குவாழும் விலங்குகளைப் பற்றியும், அவர்களுக்கு கிடைக்கும் மூலிகைகள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார்.ஒருவருக்கொருவர் அருகருகே சேர்ந்து வரும்படி கூறினார் 20 அடி தொலைவிலிருந்தால்கூட சில இடங்களில் தெரியாது அவ்வளவு அடர்த்தியான மரங்களைக் கொண்டது.


“இங்க காட்டுக்குள்ள ஏதோமூலிகை இருக்காமே அதை மிதிச்சிட்டா நம்ம ஞாபகம் மறந்துபோயி காட்டுலேயே சுத்திக்கிட்டுஇருப்போம்ன்னு சொல்லுறாங்களே?”

“ஆமாய்யா அப்படித்தான் சொல்லுதாங்க ஆனா அப்படி ஏதும் மூலிகை இங்க இல்ல. ஆனா பாக்கிறதுக்கு எல்லா தெசையும் ஒரே மாதிரி இருக்குல்ல அதுனால எங்குட்டு போறதுன்னு புதுசா வந்தவங்களுக்கு தெச தெரியாதுல்ல”

ஆமாம் அவர் சொல்வது சரிதான் மரங்கள் மிகவும் உயரமாகவும அடர்த்தியாகவும் இருப்பதால் சூரிய ஒளியே அரிதாகத்தான் உள்ளே வருகிறது. எனவே நடுக்காட்டில் வானத்தைப் பார்க்க முடியாது. நம்மைச்சுற்றி இருக்கும் பகுதிகள் ஒரேமாதிரியாகவும் ஏற்கனவே வந்தமாதிரியும் ஒரேகுழப்பமாகத்தான் இருந்தது. திசைகள் சரியாக தெரியாததாலும், பார்ப்பதற்கு எல்லா பகுதிகளும் ஒரே மாதிரியாக இருப்பதாலும் இப்பகுதிக்குள் வரும் புதியவர்கள் வழிதெரியாமல் மாட்டிக் கொண்டுவிடுவார்கள்.


          வழியில் ஒரு சிறிய ருவி  வந்தது அங்கே பாறைப்பகுதியில் உட்கார்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வெடுத்தோம். பாறையில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதுதான் தெரிந்தது, எங்களை அட்டை பூச்சிகள் கடித்துக்கொண்டிருந்தன. கடித்துக்கொண்டிருந்தன என்றால் அவை இருப்பதையே நம்மால் உணரமுடியாது. பார்த்தால்தான் தெரியும் அவற்றை எடுக்கமுடியாது. தேவையான இரத்தத்தை உறிஞ்சியபின் அதுவே அகன்றுவிடும. அவற்றால் வேறு ஆபத்தில்லை. ஆவற்றை அகற்ற ஒரே வழி அவற்றின்மேல் உப்புத் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
          சிறது ஓய்வுக்குபின் பயணத்தைத் தொடர்ந்தோம். ஒரு சிறிய வழிபாட்டுத்தளம் வந்தது. இக்காட்டை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழிபடும் இடம் என்று தெரிந்தது. இக்காட்டை ஒட்டிய பகுதிகளில் இருளர் குறும்பர் கி மக்கள் வசிக்கிறார்கள். இக்காட்டில் கிடைக்கும் தேன் போன்ற பொருள்களைச் சேகரிக்கிறார்கள்.ஒரு இடத்தில் மூங்கில்செடிகள் அடர்ந்த ஒரு பகுதியைப் பார்த்தோம், பால்ராஜ் திடீரென,

“இங்க வந்து பாருங்க இந்த மூங்கி செடிய யானை இப்பத்தான் சாப்புட்டுட்டு போயிருக்கு, அதுனால அந்தப் பாதைல போகாம வேற பாதைல போலாம் வாங்க”

என்று கூறி எங்களை வேறு பாதையில் அழைத்துச் சென்றார்.


“சரிங்க திடீர்ன்னு யானை வந்துட்டா என்ன செய்யறது”

எனக்கு அப்பத்தான் ஒரு சந்தேகம் வந்தது.


“நம்ம ஒடம்புலேந்து வீசுற வாசனை ரொம்ப தூரத்துக்கு முன்னாடியே யானைக்கு தெரியும். அதுவா வெலகிப்போய்ட்டா தேவலாம் இல்லன்னா நாம வெலகிப்போயிரனும். யான ஒடம்புலேந்து ஒரு மாதிரியான கவுச்சி வாசம் காத்துல கலந்து வரும் அதவச்சி நாங்க வெலகிப் போயிடுவோம். அத தொல்ல பன்னலைனா அது நம்ம ஒன்றும் பன்னாது. ஆனா ஒத்த யானைதான் ரொம்ப பொல்லாதது. அதப்பாத்துட்டா அது பாதையிலேந்து வெலகிப் போயிட்டா பிரச்சனையில்ல”

பால்ராஜ் சொல்லச் சொல்ல அப்போதுதான் எங்களுக்கு நாங்கள் எவ்வளவு ஆபத்தின் நடுவில் இருக்கிறோம் என்று புரிந்தது.பாதுகாப்பு இல்லாம இதுபோன்ற காட்டுபகுதியில் சாகசப் பயணம் செய்தால் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

                 காட்டிலேயே வசிப்பவர்களுக்கு இதல்லாம் இயல்பான விசயங்களாகும். காட்டில் வசிப்பவர்கள் இயற்க்கையை நன்கு புரிந்து வைத்துள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றனர், அவற்றை மதிக்கின்றனர். காடுகளைப்பற்றியும், விலங்குகளைப் பற்றியும் அவர்கள் புரிதல் அளவிடமுடியாதவை. அவர்களின் நம்பிக்கைகளும் வினோதமானவை. நாம் காலையில் கிளம்பும்போது கூட நம்ம பால்ராஜ் காட்டினுள் நுழைவதற்க்கு முன்பாக சாலையின் ஓரத்திலிருந்த ஒரு சிறிய வழிபாட்டுத் தளத்தில் சாமி கும்பிட்டுவிட்டு, தான் கையில் வைத்திருந்த அரிவாளையும் அங்கு வைத்து வணங்கிவிட்டுத்தான் எங்ளுடன் கிளம்பினார். இதுபோலக் காட்டிற்குள் போகும்போது சாமி கும்பிட்டுவிட்டு செல்வதையும் கையில் அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்.பேசிக்கொண்டே நடந்து ஒரு மலையின் முகட்டை அடைந்தபோது தொலைவில் ஒரு மலையைக் காட்டிய பால்ராஜ்.

"தோ பாருங்க அங்க தெரியிதே அந்தமலையத் தாண்டிதான் இந்தமலைக்கு வந்திருக்கோம்"

என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. மிக அதிகமான தொலைவாகத் தெரிந்த தூரம் காட்டுக்குள்ளேயே நடப்பதாலும், பேசிக் கொண்டே நடப்பதாலும் நாம் நடந்த தொலைவை நம்மால் கணக்கிட முடியவதில்லை.
மலைக்காடுகள் எப்போதும் தொலைவிலிருந்து பார்க்க ஒரு மாதிரியும் உள்ளே சென்று பாக்கும்போது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட வேறு மாதிரியுமாகத்தான் இருக்கும். நான் ஒவ்வொரு மலைக்கு போகும்போதும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
பால்ராஜ் தொலைவில் ஒரு மலையைக் காட்டி

"அங்க தெரியிதா மல அந்த மலக்கி பின்னாடிதான் நாம வண்டியை நிறுத்தி வச்சிருக்கோம்"

என்றபோது எனக்கு அதிர்சியாக இருந்தது. ஏனெனில் திசையைக் கணக்கிட்டு நான் ஊகித்து வைத்திருந்தற்கு நேர் எதிர் திசையை அவர் காட்டியதுதான்.
மாலைக்குள் திரும்பி விடும்படிதான் எங்கள் பயணத் திட்டத்தை அமைத்திருந்தோம் அதனால் எங்கள் வழியை ஒரு வட்டவடிவமாக அமைத்துக் கொண்டு வந்த வழியே செல்லாமல் புறப்பட்ட இடத்தை வந்து சேர்ந்தோம். அப்போது மாலை 5 மணி. ஒரு பகற்பொழுது முழுவதும் வனத்திலேயே கழித்ததாலோ என்னவோ வனம் நமக்கு ரொம்ப பழக்கமானதைப் போல ஒரு எண்ணம் தோன்றியது. ஆனால் நாங்கள் வனம் முழுவதையும் சுற்றிவந்து விடவில்லை. அவ்வாறு முழுமையும் அவ்வளவு எளிதில் பார்த்துவிடவும் முடியாது. அவ்வனத்தின் ஒரு சிறு பகுதியைமட்டும் பார்த்துள்ளோம் என்றுதான் கூறவேண்டும். கூட வந்தவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் சொன்ன இடத்தில் அவர்களை இறக்கிவிட்டபின் இரவு நாங்கள் தங்கியிருந்த அறையை நோக்கி பயணமானோம்.

           இக்சோலைக்கு இந்த வழியில்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. மறுபுறம் கேரளப்பகுதியிலிருந்தும் உள்ளே வரலாம்.


                 இத்தகைய மலைக்காட்டுப் பகுதிக்கு தமிழ்பெயர் சோலை. இந்த சொல் ஆங்கிலத்தில் SHOLA என்று எடுத்தாளப்பட்டு அகராதியிலிலும் இடம்பெற்றுவிட்டது. 1854 ஆங்கில ராணுவ மேஜர் ஹாமில்டன் இப்பகுதி மதிப்பாய்வு செய்த அறிக்கையில் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தியதாக தெரிகிறது. பொதுவாக பூமத்திய ரேகையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள நாடுகளில் உள்ள மலைகளில் இத்தகைய சோலைகள் அமைந்திருக்கும்.

               குருட்டுசெண்பகம், பத்தாச்சி, முல்லைகடம்பு கிவை சோலைகாட்டு மரங்கள். இத்தகைய சோலைகளுக்கு பாரம்ரியமான பெயர்களும் உண்டு. தோகமுத்திசோலை, பானைகுந்திசோலை, கரியன் சோலை, தாய்சோலை, மதிகெட்டான் சோலை .

             சில ஊர் பெயர்களைக் கேட்க்கும்போதே அவ்வூரைப் பற்றி பல விசயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் .ஊர் பெயர்களைப் பற்றி படிக்கும் துறைக்கு  TOPONAMY என்று பெயர் நம் நாட்டு கல்வி முறையில் இன்னும் இது பிரபலமடையவில்லை.

              நீலகிரி மலையின் கிராமங்களுக்கு மந்து என்று பெயர் இதில் ஒத்தக்கல் மந்து என்ற இடத்தைச் சுற்றி ஆங்கிகேலயர்கள் குடியேறினர். எனவே இப்பகுதியை ஒத்தக்கல்மந்து Ottachamandhu என்றழைத்து அது Ottachamandalam என்று மருவி இன்று Ooty ஆக சுருங்கிவிட்டது. இப்போது ஊட்டி உதகமண்டலமாக மாற்றப்பட்டு அதன் வரலாற்று பெயரிலிருந்து வெகு தொலைவு சென்றுவிட்டது.

                 சோலைக் காடுகளில் மட்டுமே வாழும் பல பறவைகளும், ஊர்வனவும், பாலூட்டிகளும் பல உண்டு. இருவாசி எனும் Horn bill  பறவை இன்று மழைக்காடுகளின் குறியீடாக ஆகிவிட்டது. ஒரு வான்கோழி அளவுள்ள இந்தப் பறவை நெடிய மரத்தின் பொந்துகளில் வாழ்பவை. இது பறக்கும்போது உ‘;, உ‘; என சத்தமெழுப்புவதால் இதற்க்கு மலை முழக்க என்பார். இப்பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் எனவே தரைப்பகுதி ஈரப்பதமாகவே இருக்கும். இதில் பலவகையான பாம்புகள் வாழ்கின்றன. மரங்களில் மலை அணில்களும் உள்ளன, சிங்கவால் குரங்கு இதை சோலைமந்தி என்றும் கூறுவர். பாரம்ரியமான  தமிழ் பெயரிலேயே அவ்விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் அழைக்கிறேனென்று பெயரை மாற்றி குழப்பிவிட்டார்கள். காட்டு எருது என்ற பெயரைக்கேட்டவுடன் நமக்கு காட்டில் வாழும் எருது எனப்புரிகிறது. அதையே Bison என்றால் என்ன புரிகிறது.

              இச்சோலையில் வேட்டில், பைன் தைலமரஙகள் உள்ளன. இவை நீர் ஆதாரத்திற்க்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இம்மரங்கள் சோலை காடுகள் மறுஉற்பத்தி திட்டத்தின்கீழ் வெட்டி அப்புறப்படுத்தப்படுகின்றன. நம்மூர் கருவேல அழிப்பு மாதிரி. இந்தமரங்களை சோலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விலையில்லா விறகுகளாக வழங்கப்படுகின்றன. சமைப்பதற்கு காடுகளில் கிடைக்கும் விறகுகளையே நம்பியுள்ளனர். இங்கு 200 முதல் 300 மலைக்கிராமத்தினர் சராசரியாக வந்து விறகு எடுத்துச் செல்கின்றனர். மலை கிராம மக்களுக்கு ரேசன் கார்டுபோல வனத்துறை அட்டையும் வழங்கப்படுகிறது.


TO WATCH VIDEO OF MATHIKETTAN CHOLAI PLEASE GO TO:





பயணங்கள் முடிவதில்லை....பூம்பாறை


                              கொடைக்கானல் என்றதுமே மணதுக்குள் சில்லென சாரல் அடித்தது போல இருக்கும். அந்த குளிர் , நம்மை கடந்து செல்லும் மேகங்கள், ஆரஞ்சு நிறத்தில் ஆழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் கேரட்டுகள், ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், ஏரியில் மெதுவாக நகர்ந்து செல்லும் படகுகள், ஏரியைச் சுற்றி சைக்கிள் சவாரி என்று எப்போது நினைத்தாலும் மணதில் அழகிய ஓவியமாக வந்துபோகும் காட்சிகள்.
                   நான் அடிக்கடிச் செல்லும் ஊர்களில் ஒன்று கொடைக்கானல். ஆனால் எப்போதும் ஒரேமாதிரியான இடங்களுக்குச் செல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான இடங்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பதால் கிடைத்த அனுபங்களும் வித்தியாசமானவைதான்.


என்னுடன் பயணத்திற்க்கு தயாரா?...

நாம் இப்போ முதலில் போக போற இடம்.......
"பூம்பாறை கிராமம்"

இயற்க்கை எழில் கொஞ்சி விளையாடும் மிக அற்புதமான கிராமம்....
இங்க அழகு மட்டும் இல்லைங்க.....
பல ஆச்சர்யமான தகவல்களும் நெறைஞ்சி இருக்குங்....

எல்லோரும் ரெடியா........ வாங்க போகலாம்........

                       கொடைக்கானலில் இருந்து 30 கி.மீ தொலைவில் மேல்மலைப் பகுதியில் பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. சுற்றி மலைகள் நடுவில் இவ்வூர். மலையிலிருந்து வளைந்து செல்லும் சாலையில் இறங்கும்போது தொலைவில் தெரியும் இவ்வூரின் காட்சியை தவறவிட்டுவிடாதீர்கள். அடுக்கடுக்கா நிலங்கள் பெட்டிபெட்டியா வீடுகள் சுற்றிலும் பசேலென போர்த்திய புல்வெளிகள் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.
நான் போனபோது மழை தூறிக்கொண்டிருந்தது.
                          அருகில் ஒரு நிலத்தில் காரட் அறுவடை செய்து கொண்டிருந்தனர்.அவர்கள் செய்யும் வேலைகளை நான் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்... 
எனக்கு இது மிக வித்தியாசமான அனுபவம்.... குவியல் குவிலாக ஆரஞ்சு நிறத்தில் கொட்டி கிடக்கும் அந்த காரட்களை பார்க்கும் போதே ஆசையாக இருந்தது....
                        ஊருக்குள் நுழைந்ததுமே முதல் தெரிவது அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில், இது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலின் உபகோவிலாகும். 
பூம்பாறை முருகன் கோயில்...... 
சிறிய கோவில் தான்.... ஆனால் மிகவும் பழமையானது....  இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், பழங்கால சிலை அழகும் சான்று.


                       பழனியில் இருக்கும் போகர் உருவாக்கிய,நவபாஷான முருகர் சிலை, முதலில் இந்த கோவிலில் தான் போகரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது..... பிறகு தான் பழனிக்கு கொண்டு செல்லப் பட்டது......என்று கூறுகிறார்கள். இந்த கோவிலும் பழனி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது... ஒவ்வொரு வருடமும்,தை பூசத்திற்கு அடுத்து வரும் கேட்டை நட்சத்திரத்தில் இங்க தேர் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது...... அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் பூம்பறை முருகனை பாடி உள்ளார்....

         போகர் சித்தர்வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றவர் இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல,இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் என்று அறியப்படுகிறார்.
நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார் என்றும், ஒன்று பழனிமலையிலும் மற்றொன்று பூம்பாறையிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மூன்றாவது இந்த பூம்பாறை கிராமத்தில் எங்கோ மறைக்கப் பட்டதாகவும் அதை குறிப்பிட்ட மக்கள் இன்றும் வழிபட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.போகர் மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். சதுரகிரி மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும்உறுதிப்படுத்த முடியாத செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.


                                    
 ப‌ழ‌னி ம‌லைக் கோயிலின் தென்மேற்கு திசையில் உள்ளது“போகரின் ஜீவ சமாதி” இங்கு அவ‌ர் பூசித்த‌“புவ‌னேசுவ‌ரி அம்ம‌ன் சிலையும்,ம‌ர‌க‌த‌ லிங்க‌மும் இன்றும் பூசையில் உள்ளது இந்த‌ ச‌ன்னிதியில் இருந்து முருக‌னின் திருவ‌டி நிலைக்கு உள்ள சுர‌ங்க‌ பாதையில் சென்ற‌ போகர் திரும்ப‌வில்லை என்று கூறுகிறார்கள்.
இத்தகைய பல சிறப்புக்கள் மிக்க, பூம்பாறை முருகனை நாம் தரிசிக்க செல்வோமா.........
மூலவர் சந்நிதி உள்ளேயே தேன் கூடு கட்டி இருந்தது.... அதிலிருந்து பெறப்படும் தேனை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்களாம்..... தரிசனம் முடித்து கிளம்ப மனம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்......


                சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன்.பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான் கி.பி.1821ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார்.1845ல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். 

                   போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக1914ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

கொடைக்கானல் செல்ல உகந்த நேரம் -ஏப்ரல் முதல் ஜூன் வரை

எப்படி செல்வது?
·                    கொடைக்கானலுக்கு திண்டுக்கல்,பெரியகுளம்,மதுரை,கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
·                    அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80கி.மீ தொலைவில்
·                    அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121கி.மீ தொலைவில். 
சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில்,திண்டுக்கல் மற்றும் மதுரைக்குஇடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து80கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். 

                        திண்டுக்கல்,மதுரை,தேனி,ஒட்டன்சத்திரம் பழனிஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும்,பழனி மலை வழியாகவும்,பாச்சலூர்,தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம். 

              இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது.தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம்,தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்.

அருகில் உள்ள வானூர்தி(Airport) நிலையங்கள்
மதுரை135கிலோமீட்டர்
கோயம்புத்தூர்170கிலோமீட்டர்
திருச்சி195கிலோமீட்டர்
சென்னை465கிலோமீட்டர்

   














பயணங்கள் முடிவதில்லை....லா சலேத் மாதாக்கோயில்

                                                    லா சலேத் மாதாக் கோயில்

 கொடைக்கானல் போவதென்றாலே எனக்கு தனி உற்சாகம்தான். 25 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. அப்போது எனது மாணவார்கள் 10 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றேன். அப்போது சலேத் மாதா தேவாலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு போனோம். அதன் பிறகு பலமுறை இவ்வாலயத்திற்க்குச் சென்றுள்ளேன்.


பேருந்து நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு நடந்துதான் போய்க்கொண்டிருக்கிறோம். கூடவே வந்துக்கொண்டிருங்கள்இதமான குளிரும்,  லேசானத் தூறலில் நடந்து செல்வது ரம்மியமானது. நடந்து செல்லும்போது நம்மை கடந்து செல்லும் மேகங்கள். குளிருக்காக போட்டிருக்கும் ஸ்வெட்டர் , மங்க்கி கேப் என்று நம்மை பார்க்க நமக்கே வேடிக்கையாக இருக்கு. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில்தான் இத்தேவாலயம் உள்ளது.


ஒரு சிறிய மேடான பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான் , ஆனால் மிகவும் அழகானது. வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே நீல நிறக் கோடுகளுடன் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் லாசலேத் என்ற சிற்றூரில் இது போன்ற கோயில் உள்ளது. 


முற்றத்தில் சமாதி ஒன்று இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. வழக்கமாக அப்படி இருக்காதே யாரோ ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.



யார் அவர்?

அவரை ஏன் இங்கு அடக்கம் செய்திருக்கிறார்கள்?                    இந்த கோயிலின் வரலாறு என்ன?

என்று பல கேள்விகள் மனத்தில் எழ அங்குள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தேன்.....

அவர்களிடம் பேசியபோது கிடைத்த சுவையான செய்திகள் என்னை வியக்க வைத்தது.

பிரான்ஸ் நாட்டில் லா சலேத் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு 1846ம் ஆண்டு மெலானி, மாக்சிமின் என்ற இரு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மேரிமாதா காட்சித் தந்துள்ளார். மேரிமாதா எங்கெல்லாம் காட்சி கொடுத்தாரோ, எங்கெல்லாம் அற்புதங்கள் செய்தாரோ அங்கெல்லாம் அந்தந்த இடங்களின் பெயராலே அழைக்கப்படுகிறார். வேளாங்கன்னி மாதா, வாடிப்பட்டி மாதா, லூர்து மாதா, லொரேத் மாதா, சலேத் மாதா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சான்ட் சீர் என்ற பாதிரியார் ஒரு முறை ரோம் நகரில் போப் ஆண்டவரை சந்தித்து விட்டு செல்லும் போது, மடகாஸ்கர் தீவில் தங்கினார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, சலேத் மாதாவை வேண்டிக் கொண்டால், காய்ச்சல் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். வேண்டிய சில மணி நேரத்திலே காய்ச்சலும் சரியானது. அப்போது அவர் ,"திரும்பவும் பணி செய்வதற்காக நான் இந்தியா சென்றால், அங்கு இதே போன்று புனித சலேத் மாதா கோயில் கட்டுவேன், என்றார். 


இதற்கிடையே பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த திருமதி கௌண்டஸ் டிவோட் ரீமோன்ட் அம்மையார் தனது மகள் உடல் நலம் குன்றியதைக் கண்டு சலேத் அன்னையிடம் வேண்டிக் கொண்டார். அவர் மகளும் குணமடையவே சலேத் அன்னைக்கு சான்ட் சீர் அடிகளார் இந்தியாவில் ஆலயம் கட்ட இருப்பதைக் கேள்விப்பட்டு அவ்வாலயம் கட்ட நிதியுதவி செய்துள்ளார்.


1863ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வாலயத்தின் கட்டுமாணப்பணி 1866 ஆம் ஆண்டு முடிவுற்றது. இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்யும்பொருட்டு 1885 ஆம் ஆண்டு பக்கவாட்டில் 5 மீட்டர் நீளமுடைய பகுதி கட்டப்பட்டது. இங்கு தங்கி இறைதொண்டாற்றிய சான்ட் சீர் அடிகளார் 1887 ஆம் ஆண்டு இறந்துவிட, அவர் உடல் அவர் கட்டிய இக்கோயிலின் முன்மண்டபத்திலேயே புதைக்கப்பட்டது. கொடைக்கானலின் முதல்தேவாலயம் தூய சலேத் அன்னை திருத்தலம்.


பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சலேத் அன்னையின் சொரூபமும், சூசையப்பர் சிலையும் காண்பவர்களை பரவசப்படுத்தக் கூடியது. ஆலயம் சற்று மேடான பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதனால் மேலே செல்லப்படிக்கட்டுகள் உள்ளன. இப்படிக்கட்டுகளின் வழியே சென்று ஆலயத்தினுள் நுழைந்த உடனேயே முற்றத்தின் தரையில் சமாதி இருக்கிறது. 

நோயிலிருந்து விடுபட்டதன் சான்றாக இக்கோயில் கட்டப்பட்டதால் இங்கு உடற்கோளாறு மற்றும் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து போவதைப் பார்க்கலாம். நாங்கள் போயிருந்தபோது கூட வெளியூரிலிருந்து சிலர் வேண்டுதலுக்காக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

இங்குள்ள மக்கள் ஜாதி, சமய, இன, மத வேறுபாடுகளைத் தாண்டி இவ்வாலயத்திற்ககு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இக்கோயிலின் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அருகிலுள்ள ஊர்களிலிருந்து வேண்டுதலுக்காக பாதயாத்திரையாக வருபவர்களும் உண்டு.

                    கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சலேத் மாதா கோயிலுக்கு வருவதற்கு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக உள்ளன.

தூய சலேத் மாதாவை நோக்கி ஜெபம்

"அருள்மிகப் பெற்ற சலேத் நாயகியே எங்கள் பாவங்களுக்காகக் கண்ணீர் சிந்தி புதுவாழ்வுக்கு எங்களை அழைக்க சலேத் மலையில் காட்சி தந்தவரே, எங்களையும் எங்கள் குடும்பங்களையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்கள் குடும்பங்களிலுள்ள முதியோருக்கும் நோயுற்றோருக்கும் ஆறதலும் தேறுதலுமாய் இருப்பீராக! உம்மை நினைவு கூறும் ஒவ்வொருவருக்கும் இறையேசுவிடம் பரிந்து பேசி எமக்கு இறையருளைப் பெற்றுத் தருவீராக - ஆமென்.."

திருப்பலி அட்டவணை

நாள்தோறும் - காலை 11.30 மணி திருப்பலி 

ஞாயிற்றுக் கிழமைகளில் - காலை 7.30 மணி

திருப்பலி - தமிழ். காலை 10.30 மணி 

திருப்பலி - ஆங்கிலம்.

மாதத்தின் முதல் சனி - மாலை 5.30 - அன்னையின் திருத்தேர் உலா, செபமாலை, திருப்பலி.

இக்கோயிலை சினிமாவில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

எந்த படங்களில்?

 ஒரு 'க்ளு' இரண்டு படங்களிளும் சிவாஜி நடித்திருப்பார்.

வெள்ளை ரோஜா   
                                                                                                                    ஞானஒளி

சத்யாமூவீஸின் வெள்ளை ரோஜா படத்தில் சிவாஜி இருவேடங்களில் நடித்திருப்பார். ஒருவேடத்தில் பாதிரியாராகவும் மற்றொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார். பாதிரியாரான சிவாஜியைக் கொன்று அந்த கோயிலிலேயே புதைத்திருப்பார்கள். கொலை செய்தவர்களை மற்றொரு போலீஸ் சிவாஜி கண்டுபிடிப்பதுதான் கதை. சர்ச்சில் சாமாதி இருப்பதை தத்ரூபமாக காட்டுவதற்குத்தான் இப்படத்தை இங்கு எடுத்திருக்கிறார்கள்.

               
சிவாஜிகணேசன் நடித்த மற்றொரு படமான ஞானஒளி படத்திலும் இக்கோயில் கதைக்களமாகக் காட்டப்பட்டிருக்கும். இதன் கதை மேடையில் வெற்றிகரமான நாடகமாகவும், சினிமாவாகவும் வெற்றிநடைபோட்டது. 1972 – ல் வெளியான இப்படம் அப்போது அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகிவிட்ட ஒருவன், கடமையே பெரிதெனக் கருதி அவனைக் கைது செய்யத் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் பாதிரியார் என்று இவர்களைப்பற்றி கதை அமைக்கப் பட்டிருக்கும்.

                             
சிவாஜி கணேசன் (குற்றவாளி), மேஜர் சுந்தரராஜன் (இன்ஸ்பெக்டர்), கோகுல் நாத் (பாதிரியார்) ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.  

                 இப்போது இடையில் ஒரு வரலாற்று தகவலையும் பார்த்துவிடுவோம். 

                  பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் கியூகோ.கியூகோ தான் வாழும் காலத்திலே மிகுந்த புகழும் பெயரும் பெற்றவர். அக்காலத்தில் அவரது லே மிசரபிள்ஸ் (Le Miserable) நாவலை வெளியிடுவதற்காக பதிப்பகங்களுக்குள் பலத்த போட்டி நடைபெற்றது. முடிவில் மூன்று லட்சம் பிராங்குகள் கொடுத்து அதன் உரிமையைப் பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பதிப்பகம் விலைக்கு வாங்கியது. 1862ல் லே மிசரபிள்ஸ் நாவல் வெளியாக போகிறதென்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பாரீஸ் நகரத் தெருக்கள் எங்கும் பெரிய பெரிய விளம்பரங்கள் வைக்கபட்டிருந்தன என்றால் அந்த நாவலை மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் என்று புரியும். லே மிசரபிளின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜீன்வால் ஜீனும், பிஷப் மைரிலும் காவல்துறை அதிகாரியான ஜாவெர்த்தும் வாசகர்களிடம் மிகுந்த புகழ் பெற்றபாத்திரங்களாக திகழ்ந்தனர்.

                              கியூகோவின்  இந்த லே மிசரபிள்ஸ் நாவல் தமிழில் "ஏழை படும்பாடு" என்ற பெயரில் நாகையா அவர்கள் நடித்து ராம்நாத் இயக்கி நாடகமாக வெளியாகியிருக்கிறது. இந்தியில் குந்தன் என்ற பெயரில் சேராப் மோடி இயக்கியிருக்கிறார். தமிழிலே இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் "ஞான ஒளி ". தமிழில் இந்த நாவலை ச.து.சு யோகியார் மொழியாக்கம் செய்திருந்தார்.


"தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர் 

oh my Lord, pardon me உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே 

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ காய் உடலிலா மனதிலா தேவனே நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே 

மான்களும் சொந்தம் தேடுமே இம்மனிதன் செய்த பாவம் என்னவோ காவலே தந்த வெளியே உன் பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ 

செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது சேவை புரிந்திட சேவகர் ஆயிரம் தேடி கொண்டாட நண்பர்கள் வந்தனர் ஆயிரம் இருந்தும் வசதிகள் குவிந்தும் no peace of mind 

கேள் தருகிறேன் என்றதே நீர் அன்றோ நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை என் கருணையே திறக்குமா சந்நிதி என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி oh Lord please answer my prayer 

கண்களில் கண்ணீர் இல்லையே இந்த உள்ளமும் இதை தாங்க வில்லையே கொண்டு வா இல்லை கொண்டு போ உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் உன்னை வளைத்து மக்கள் அடித்தது ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது...."

                             சலேத் அன்னையில் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!

நன்றி

பாலா

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...