லா சலேத் மாதாக் கோயில்
கொடைக்கானல் போவதென்றாலே எனக்கு தனி உற்சாகம்தான். 25 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. அப்போது எனது மாணவார்கள் 10 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றேன். அப்போது சலேத் மாதா தேவாலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு போனோம். அதன் பிறகு பலமுறை இவ்வாலயத்திற்க்குச் சென்றுள்ளேன்.

பேருந்து நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு நடந்துதான் போய்க்கொண்டிருக்கிறோம். கூடவே வந்துக்கொண்டிருங்கள்இதமான குளிரும், லேசானத் தூறலில் நடந்து செல்வது ரம்மியமானது. நடந்து செல்லும்போது நம்மை கடந்து செல்லும் மேகங்கள். குளிருக்காக போட்டிருக்கும் ஸ்வெட்டர் , மங்க்கி கேப் என்று நம்மை பார்க்க நமக்கே வேடிக்கையாக இருக்கு. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில்தான் இத்தேவாலயம் உள்ளது.
ஒரு சிறிய மேடான பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான் , ஆனால் மிகவும் அழகானது. வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே நீல நிறக் கோடுகளுடன் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் லாசலேத் என்ற சிற்றூரில் இது போன்ற கோயில் உள்ளது.
முற்றத்தில் சமாதி ஒன்று இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. வழக்கமாக அப்படி இருக்காதே யாரோ ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யார் அவர்?
அவரை ஏன் இங்கு அடக்கம் செய்திருக்கிறார்கள்? இந்த கோயிலின் வரலாறு என்ன?
என்று பல கேள்விகள் மனத்தில் எழ அங்குள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தேன்.....
அவர்களிடம் பேசியபோது கிடைத்த சுவையான செய்திகள் என்னை வியக்க வைத்தது.
பிரான்ஸ் நாட்டில் லா சலேத் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு 1846ம் ஆண்டு மெலானி, மாக்சிமின் என்ற இரு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மேரிமாதா காட்சித் தந்துள்ளார். மேரிமாதா எங்கெல்லாம் காட்சி கொடுத்தாரோ, எங்கெல்லாம் அற்புதங்கள் செய்தாரோ அங்கெல்லாம் அந்தந்த இடங்களின் பெயராலே அழைக்கப்படுகிறார். வேளாங்கன்னி மாதா, வாடிப்பட்டி மாதா, லூர்து மாதா, லொரேத் மாதா, சலேத் மாதா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சான்ட் சீர் என்ற பாதிரியார் ஒரு முறை ரோம் நகரில் போப் ஆண்டவரை சந்தித்து விட்டு செல்லும் போது, மடகாஸ்கர் தீவில் தங்கினார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, சலேத் மாதாவை வேண்டிக் கொண்டால், காய்ச்சல் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். வேண்டிய சில மணி நேரத்திலே காய்ச்சலும் சரியானது. அப்போது அவர் ,"திரும்பவும் பணி செய்வதற்காக நான் இந்தியா சென்றால், அங்கு இதே போன்று புனித சலேத் மாதா கோயில் கட்டுவேன், என்றார்.
இதற்கிடையே பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த திருமதி கௌண்டஸ் டிவோட் ரீமோன்ட் அம்மையார் தனது மகள் உடல் நலம் குன்றியதைக் கண்டு சலேத் அன்னையிடம் வேண்டிக் கொண்டார். அவர் மகளும் குணமடையவே சலேத் அன்னைக்கு சான்ட் சீர் அடிகளார் இந்தியாவில் ஆலயம் கட்ட இருப்பதைக் கேள்விப்பட்டு அவ்வாலயம் கட்ட நிதியுதவி செய்துள்ளார்.
1863ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வாலயத்தின் கட்டுமாணப்பணி 1866 ஆம் ஆண்டு முடிவுற்றது. இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்யும்பொருட்டு 1885 ஆம் ஆண்டு பக்கவாட்டில் 5 மீட்டர் நீளமுடைய பகுதி கட்டப்பட்டது. இங்கு தங்கி இறைதொண்டாற்றிய சான்ட் சீர் அடிகளார் 1887 ஆம் ஆண்டு இறந்துவிட, அவர் உடல் அவர் கட்டிய இக்கோயிலின் முன்மண்டபத்திலேயே புதைக்கப்பட்டது. கொடைக்கானலின் முதல்தேவாலயம் தூய சலேத் அன்னை திருத்தலம்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சலேத் அன்னையின் சொரூபமும், சூசையப்பர் சிலையும் காண்பவர்களை பரவசப்படுத்தக் கூடியது. ஆலயம் சற்று மேடான பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதனால் மேலே செல்லப்படிக்கட்டுகள் உள்ளன. இப்படிக்கட்டுகளின் வழியே சென்று ஆலயத்தினுள் நுழைந்த உடனேயே முற்றத்தின் தரையில் சமாதி இருக்கிறது.
நோயிலிருந்து விடுபட்டதன் சான்றாக இக்கோயில் கட்டப்பட்டதால் இங்கு உடற்கோளாறு மற்றும் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து போவதைப் பார்க்கலாம். நாங்கள் போயிருந்தபோது கூட வெளியூரிலிருந்து சிலர் வேண்டுதலுக்காக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இங்குள்ள மக்கள் ஜாதி, சமய, இன, மத வேறுபாடுகளைத் தாண்டி இவ்வாலயத்திற்ககு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இக்கோயிலின் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அருகிலுள்ள ஊர்களிலிருந்து வேண்டுதலுக்காக பாதயாத்திரையாக வருபவர்களும் உண்டு.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சலேத் மாதா கோயிலுக்கு வருவதற்கு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக உள்ளன.
தூய சலேத் மாதாவை நோக்கி ஜெபம்
"அருள்மிகப் பெற்ற சலேத் நாயகியே எங்கள் பாவங்களுக்காகக் கண்ணீர் சிந்தி புதுவாழ்வுக்கு எங்களை அழைக்க சலேத் மலையில் காட்சி தந்தவரே, எங்களையும் எங்கள் குடும்பங்களையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்கள் குடும்பங்களிலுள்ள முதியோருக்கும் நோயுற்றோருக்கும் ஆறதலும் தேறுதலுமாய் இருப்பீராக! உம்மை நினைவு கூறும் ஒவ்வொருவருக்கும் இறையேசுவிடம் பரிந்து பேசி எமக்கு இறையருளைப் பெற்றுத் தருவீராக - ஆமென்.."
திருப்பலி அட்டவணை
நாள்தோறும் - காலை 11.30 மணி திருப்பலி
ஞாயிற்றுக் கிழமைகளில் - காலை 7.30 மணி
திருப்பலி - தமிழ். காலை 10.30 மணி
திருப்பலி - ஆங்கிலம்.
மாதத்தின் முதல் சனி - மாலை 5.30 - அன்னையின் திருத்தேர் உலா, செபமாலை, திருப்பலி.
இக்கோயிலை சினிமாவில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.
எந்த படங்களில்?
ஒரு 'க்ளு' இரண்டு படங்களிளும் சிவாஜி நடித்திருப்பார்.
வெள்ளை ரோஜா
ஞானஒளி
சத்யாமூவீஸின் வெள்ளை ரோஜா படத்தில் சிவாஜி இருவேடங்களில் நடித்திருப்பார். ஒருவேடத்தில் பாதிரியாராகவும் மற்றொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார். பாதிரியாரான சிவாஜியைக் கொன்று அந்த கோயிலிலேயே புதைத்திருப்பார்கள். கொலை செய்தவர்களை மற்றொரு போலீஸ் சிவாஜி கண்டுபிடிப்பதுதான் கதை. சர்ச்சில் சாமாதி இருப்பதை தத்ரூபமாக காட்டுவதற்குத்தான் இப்படத்தை இங்கு எடுத்திருக்கிறார்கள்.
சிவாஜிகணேசன் நடித்த மற்றொரு படமான ஞானஒளி படத்திலும் இக்கோயில் கதைக்களமாகக் காட்டப்பட்டிருக்கும். இதன் கதை மேடையில் வெற்றிகரமான நாடகமாகவும், சினிமாவாகவும் வெற்றிநடைபோட்டது. 1972 – ல் வெளியான இப்படம் அப்போது அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகிவிட்ட ஒருவன், கடமையே பெரிதெனக் கருதி அவனைக் கைது செய்யத் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் பாதிரியார் என்று இவர்களைப்பற்றி கதை அமைக்கப் பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன் (குற்றவாளி), மேஜர் சுந்தரராஜன் (இன்ஸ்பெக்டர்), கோகுல் நாத் (பாதிரியார்) ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.
இப்போது இடையில் ஒரு வரலாற்று தகவலையும் பார்த்துவிடுவோம்.
பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் கியூகோ.கியூகோ தான் வாழும் காலத்திலே மிகுந்த புகழும் பெயரும் பெற்றவர். அக்காலத்தில் அவரது லே மிசரபிள்ஸ் (Le Miserable) நாவலை வெளியிடுவதற்காக பதிப்பகங்களுக்குள் பலத்த போட்டி நடைபெற்றது. முடிவில் மூன்று லட்சம் பிராங்குகள் கொடுத்து அதன் உரிமையைப் பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பதிப்பகம் விலைக்கு வாங்கியது. 1862ல் லே மிசரபிள்ஸ் நாவல் வெளியாக போகிறதென்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பாரீஸ் நகரத் தெருக்கள் எங்கும் பெரிய பெரிய விளம்பரங்கள் வைக்கபட்டிருந்தன என்றால் அந்த நாவலை மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் என்று புரியும். லே மிசரபிளின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜீன்வால் ஜீனும், பிஷப் மைரிலும் காவல்துறை அதிகாரியான ஜாவெர்த்தும் வாசகர்களிடம் மிகுந்த புகழ் பெற்றபாத்திரங்களாக திகழ்ந்தனர்.
கியூகோவின் இந்த லே மிசரபிள்ஸ் நாவல் தமிழில் "ஏழை படும்பாடு" என்ற பெயரில் நாகையா அவர்கள் நடித்து ராம்நாத் இயக்கி நாடகமாக வெளியாகியிருக்கிறது. இந்தியில் குந்தன் என்ற பெயரில் சேராப் மோடி இயக்கியிருக்கிறார். தமிழிலே இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் "ஞான ஒளி ". தமிழில் இந்த நாவலை ச.து.சு யோகியார் மொழியாக்கம் செய்திருந்தார்.
"தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
oh my Lord, pardon me உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே
தாய் மடியிலே மழலைகள் ஊமையோ சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ காய் உடலிலா மனதிலா தேவனே நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே
மான்களும் சொந்தம் தேடுமே இம்மனிதன் செய்த பாவம் என்னவோ காவலே தந்த வெளியே உன் பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ
செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது சேவை புரிந்திட சேவகர் ஆயிரம் தேடி கொண்டாட நண்பர்கள் வந்தனர் ஆயிரம் இருந்தும் வசதிகள் குவிந்தும் no peace of mind
கேள் தருகிறேன் என்றதே நீர் அன்றோ நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை என் கருணையே திறக்குமா சந்நிதி என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி oh Lord please answer my prayer
கண்களில் கண்ணீர் இல்லையே இந்த உள்ளமும் இதை தாங்க வில்லையே கொண்டு வா இல்லை கொண்டு போ உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் உன்னை வளைத்து மக்கள் அடித்தது ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது...."
சலேத் அன்னையில் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!
நன்றி
பாலா









No comments:
Post a Comment