தோடர்கள்
தோடர்கள், இருளர்கள், பளியர்கள் போன்ற பழங்குடி மக்ககளை அவர்கள் வசிக்குமிடத்திலேயே சந்தித்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கைமுறை சுவாரஸ்யமானது, அவர்கள் நம்பிக்கைககள் வினோதமானவை. அவர்களின் அந்த நேர்மை, எளிமை, தன்னம்பிக்கை என்னை வியக்க வைத்ததது. அவர்களில் சிலர் எனக்கு நண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள். அவர்களைப் பற்றி எழுதிவருகிறேன் அதில் சுவையான சிலவற்றை உங்ளுடன் பகிரலாம் என்றிருக்கிறேன்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் வாழும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் எருமைகளை அதிகளவு வளர்த்து வருகின்றனர்.
முதலில் தோடர்களைப் போய்ப் பார்ப்போம் கூட வருகிறீர்களா?....
நீலகிரி மாவட்டம் முழுவதும், 135 மந்துகளில் வசித்து வந்த தோடரின மக்கள், தற்போது 62 மந்துகளில் தான் வசிக்கின்றனர். பழமையான கலாசாரங்களையும், நடைமுறைகளையும் கொண்ட வர்கள் தோடர்கள். தோடர் இன மக்களின் தலைமையிடமாக ஊட்டி தலைக்குந்தா அருகே உள்ள முத்துநாடு மந்து விளங்குகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா அருகில் இவர்கள் குடியிருப்பு உள்ளது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது இவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
ஊட்டியில் ஒரு நாள் காலை தனியாக நடைப் பயிர்ச்சி சென்றிருந்தேன், அப்போது தாவரவியல் பூங்கா அருகே சென்றபோது தோடர்குடியிருப்பு இப்பகுதியில் உள்ளது எனப் படித்தது நினைவுக்கு வந்தது. பூங்காவின் எதிரே இருந்த டீ கடையில் ,டீ சாப்பிட்டுக் கொண்டே தோடர்கள் வசிப்பிடம் பற்றி கடைக்காரிடம் கேட்டேன்.அது காலை நேரம் மக்கள் நடமாட்டம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. கடைக்காரரும் பாலை கலக்கிக்கொண்டே வலப்புறம் கையைக்காட்டி
"இப்படியே கொஞ்ச தூரம் போனா சின்ன சந்து மாரி வரும் அதுக்குள்ள நொளஞ்சி போயிக்கிட்டே இருந்தா வரும்"
என்று சொன்னவர் ஏதோ நினைத்தவராக தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு
"இல்லாட்டி கொஞ்சம் இருங்க இப்ப ரெண்டு பேரு வருவாங்க அவங்க பின்னாடியே போனா அவுங்க எடம் வந்துரும்"
இன்னொரு டீ சொல்லிவிட்டுக் காத்திருந்தேன்.
கால் மணி நேரம் கழிந்திருக்கும் இடப்பக்கம் எட்டிப் பார்த்தவர்
"அந்தா வர்ராங்க அவங்க பின்னாடி போங்க" என்றார்.
நானும் சுறுசுறுப்பாக தயாராகி யார் அந்த இரண்டுபேர் என்றுத் திரும்பிப் பார்தேன். அதிர்ந்து விட்டேன் காரணம் அங்கே வந்துகொண்டிருந்தது 'இரண்டு எருமைகள்'.
அவை அவர்கள் வளர்க்கும் எருமைகளாம். அவர்களின் குடியிருப்புக்குத்தான் போய்க் கொண்டிருக்கின்றனவாம். பிறகென்ன ...
அந்த இரண்டு எருமைகளையும் பின்தொடர்ந்தேன். போய்க்கொண்டே இருந்தவைகள் திடீரென இடப்புறம் உள்ள ஒரு சிறிய பாதையில் திரும்பி நடக்க ஆரம்பித்தன. பாதை நான்கு அடி அகலம் இருக்கும். இரு புறங்களிலும் கம்பிவேலி அமைத்திருந்தார்கள். மேல்நோக்கிய சாய்வான பாதை, படிக்கட்டுகள் இல்லாமல் சாய்தளமாக, தோடர்கள் குடியிருப்புக்கு செல்வதற்கென்றே
அமைத்திருக்கிறார்கள்.போய்கொண்டிருந்த எருமைகளுள் ஒன்று 'என்ன நம்மை ரொம்ப நேரமா ஒருத்தன் பின்தொடர்கிறானே '
என்று நினைத்ததோ என்னவோ நின்று திரும்பி என்னை முறைத்துப் பார்த்தது. நான் என்ன செய்யிறதுன்னு தெரியாம, எதுக்கும் இருக்கட்டுமேயென்று சிரித்து வைத்தேன்.
அந்த சிரிப்பை அவை ரசிச்ச மாதிரி தெரியவில்லை, மறுபடியும் நடக்க ஆரம்பித்தன. அவ்வப்போது நடப்பதும் பின்பு நின்று திரும்பிப் பார்பதுமாகப் போய்க் கொண்டிருந்தது எங்கள் மூவரின் பயணம்.எனக்கும் அது ஒரு எருமையான மன்னிக்கவும் அருமையான நடைபயிற்ச்சியாக இருந்தது.
ஒருவழியாக ஊர் வந்துவிட்டது. எருமைகள் வந்ததை அறிந்து பால் கறப்பதற்க்காக பாத்திரத்துடன் வந்த ஒருவர், என்னை பார்த்ததும் பாத்திரத்தை வைத்துவிட்டு என்னருகே வந்தார்.அவர் எதுவும் கேட்காமலேயே நான் பேச ஆரம்பித்தேன். ஏனெனில் இந்த மாதிரியான சூழலில் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும். நாம்தான் நம்மை அவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். பேசும்போது அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாவும், நம்மால் அவவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு எதுவும் இருக்காது என்பதை தெளிவுபடுத்தி விடவேண்டும்.திட்டமிடப்படாத தீடீர் பயணமாக அமைந்துவிட்டதால் கையில் கேமரா எடுத்துச் செல்லவில்லை, செல்போனிலேயே படங்கள் எடுத்துக் கொண்டேன்.
ஊரில் உள்ள மற்றறவர்களும் வந்து சேர்ந்துகொள்ள. மகிழ்ச்சியுடன் வரவேற்று அவவ்களுடைய வீடுகளை சுற்றிக் காண்பித்தார்கள்.
இருபது வீடுகள் இருக்கும் அனைத்தும் ஒரேமாதிரியான கான்கிரீட் வீடுகள், அரசு கட்டிக் கொடுத்திருக்கும் என்று புரிந்தது. தோடர் இன மக்கள் இயற்கையில் கிடைக்கும் புற்கள், மூங்கில் பிரம்புகளை கொண்டு குடில் அமைத்து அதில் வாழ்ந்து வந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவினுள் நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இவர்களின் பாரம்பரிய குடில்களின் மாதிரியைப் பார்க்கலாம். பூங்காவின் வலப்புற மேற்பகுதியின் வழியாகக்கூட இவர்ளின் குடியிருப்புக்கு வரலாம். தோடர் இன மக்கள் தற்போது கான்கிரீட் வீடுகள் கட்டி அதில் வசிக்க தொடங்கி உள்ளனர்.

எருமையை, எமனின் வாகனமாக நாம் கருதும் நிலையில், தோடர்கள் அவற்றை இறைவனுக்கு சமமாக கருதுகின்றனர். அவர்களின் கோயில்களில் எருமையின் கொம்பு அல்து எருமையின் தலை வடிவம் இடம்பெற்றிருக்கும்.தோடர் இனத்தில் ஒவ்வொன்றிர்க்கும் எருமைகளையே பரிசாக கொடுப்பது வழக்கம். அதே போன்று, யாரேனும் தவறு செய்தால் அபராதமாக எருமையைத்தான் கொடுக்க வேண்டும். எருமையை இழந்தால் பேரிழப்பாக தோடரின மக்கள் கருதுவதால், இந்த தண்டனையால் தவறுகள் குறையும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஊருக்கு நடுவே அவர்களின் கோயில் உள்ளது. வட்ட வடிவமான தரை
மட்டத்திலிருந்து சற்று கீழாகவும் உள்ளது. நுழைவு வாயில் அரைவட்ட வடிவிலும், கோயில் முழுமைக்கும் அரை உருளை(SEMI CYLINDER) வடிவிலும் இருக்கிறது.
கோயில் சாத்தித்தான் இருந்தது. உள்ளே போவதற்க்கு ஒரு ஆள் நுழையுமளவிற்க்கு இடம் மட்டுமே விடப்பட்டுள்ளது. அதுவும் உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோதான் செல்ல முடியும்.
கோயில் அருகே செல்வதற்க்கு கூட வெளியாட்களுக்கு அனுமதியில்லை. அதை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியே எழுதிப் போட்டிருந்தார்கள். பெண்களுக்கு இதன் அகில் வரக்கூட அனுமதியில்லை.
கல் ஒன்றை மேடைமீது அமைத்து வைத்துள்னரே அதுவரைதான் பெண்களுக்கு அனுமதி.
தோடரின மக்கள் சுத்த சைவர்கள். இவர்களின் பாரம்பரிய உணவான பால்சாதம், நெய் சாதம், ஓட்வியதோர் எனப்படும் உருண்டை சாதம் பாலை சார்ந்தே உள்ளது. உலகிலேயே புலால் உண்ணாத பழங்குடியினம் தோடர்கள் தான்.ஒவ்வொரு தோடரின மக்களின் வீட்டிலும் எருமை குடும்ப உறுப்பினர்போல பாவிக்கப்படுகிறது. இந்த எருமைகள் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதும், தோடர்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை என்பதும் இவர்களின் ஐதீகம்.
தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார் .
தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர்.
உப்பு சாஸ்திர விழா: இந்த மக்களின் மிகவும் முக்கியமான ‘உப்பொட்டித்’ எனப்படும் உப்பு சாஸ்திர விழா ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகிறது. காட்டில் இரு சிறிய குழி வெட்டி, அதில் பூசாரி தண்ணீர் ஊற்றி உப்பினை போட்டு, எருமைகள் பெருகவும், தங்களுக்காக எப்போதும் உழைக்கவும், அவற்றின் நலனுக்காக இயற்கையை வணங்கி அந்த நீரை எருமைகளை பருகச் செய்வார். இதனால் எருமைகள் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை
. இந்தியாவில் உள்ள 12 எருமை இனங்களில் தோடர் எருமை தனித்தன்மை வாய்ந்து அதிகமான பகுதியிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே இந்த இனம் உள்ளது.17-வது நூற்றாண்டுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கில் இருந்த எருமைகள், 1994-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 3531 எருமைகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து தற்போது 1500-க்கும் குறைவான எருமைகளே உள்ளன என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இவற்றுக்காக வட்டமான கற்கள் அடுக்கி எருமைப்பட்டி (தொளா) செய்து அதில் அடைத்து வைப்பார்கள்.
ஓர் எருமை 5 லிட்டருக்கும் குறைவாகவே பால் தரும். ஆனால், பால் மிகவும் அடர்த்தியாகவும், திடமாகவும் இருக்கும்.
இவர்களின் இப்போதைய பிரச்சனை எருமைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான்.
சக மனிதர்களைப் பற்றிக்கூட சிந்திக்காதவர்கள் உள்ள இந்தக் காலத்தில், தங்களை வாழ வைக்கும் தெய்வங்களான எருமை மாடுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் தோடர் குலத்து பட்டதாரியான வாசமல்லி.
" எங்கள் சமூகத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை எருமை மாடுகள் கூடவே வரும். பெண்களுக்கு எருமைகளை சீதனமாக கொடுப்போம். குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கும் தாய் மாமனுக்கும் மாடு கொடுப்போம். எருமை நெய் இல்லாமல் கோயில்களில் விளக்கு ஏற்ற மாட்டோம். நாங்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே தோடா எருமைகள்தான். மூலிகைச் செடிகளை தின்று வளர்வதால் அவை தரும் பாலை குடிக்கும் எங்களை நோய்கள் அண்டுவதில்லை ".
வாசமல்லி தொடர்கிறார்.
" எங்கள் சமூகத்தில் யாராவது இறந்துவிட்டால் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களது வீட்டில் உள்ள எருமைகளில் ஒன்றை மேற்கு திசை நோக்கி துரத்தி விடுவர். அது இயற்கையாக மரணமடைந்து, இறந்தவர்களுக்கு இன்னொரு உலகத்திலும் பால் கொடுக்கும் என்பது எங்கள் முன்னோர்களின் நம்பிக்கை. காலப்போக்கில், மாடுகளை மேற்கு திசை நோக்கி துரத்துவதற்கு பதிலாக இறந்தவர்களின் சவக்குழிக்கு அருகிலேயே கொன்று புதைக்க ஆரம்பித்துவிட்டனர்.இதைத்தான் எட்டு ஆண்டுகளாக தீவிர பிரச்சாரம் செய்து தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இப்போது பெரும்பாலும் எருமைகளை யாரும் கொல்வதில்லை. என்றா லும் எங்காவது ஒரு சிலர் இன்னும் பழமையிலிருந்து விடுபடமுடியாமல் எருமைகளை கொன்றுவிடுகிறார்கள். அவர்களையும் நெறிப்படுத்த தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.அடுத்தகட்டமாக, மிக தொன்மையான தோடர் மொழிக்கு அகராதியை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறேன். இது முழுமை பெற்றால் தோடர் மொழிக்கும் எழுத்து வடிவம் கொடுத்துவிடலாம். இதேபோல், எங்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பழைய தோடர் பாடல்களை தேடிப்பிடித்து ஆவணப்படுத்தும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். அந்த ஆவணம் தோடர்களின் வாழ்க்கை முறையை காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும்…"
பூரிப்புடன் சொல்லி முடித்தார் வாசமல்லி.
சங்கால இலக்கிய வாழ்வு:பழங்குடிகள் பெரும்பாலும் சங்க கால வாழ்வியலை பிரதிபலிக்கிறார் என உறுதிப்படுத்தப்படுகிறது. அதாவது அவர்களின் வாழ்க்கை சங்க கால வாழ்வியலை
ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
களவு – கற்பு வாழ்க்கை இருளர் இன மக்களும், நீலகிரி தோடர் மக்களும் தங்களது வாழ்வியலில் களவு கற்பு வாழ்வை மேற்கொள்கிறார்கள். அதாவது அவர்கள் களவு வாழ்க்கையான காதலில் தலைவனும் தலைவியும் உச்சமடைந்து தலைவி தாய்மை நிலையை அடைந்தவுடன் கற்பத்தில் வளரும் குழந்தைக்கு இவர்தான் தகப்பன் என அறிவுக்கும், நிகழ்வும் பின் கற்பு நிலையை உறுதி படுத்துவதும் நிகழ்கிறது.

கோநாடு போனால் கோடநாடு காட்ச்சிமுனைக்கு 5 கி.மீ முன்பாக சாலையின் இடப்புறமாகப் பார்தீர்களென்றால் இவர்களின் கோயிலைக் காணலாம். இக்கோயிலில் இருந்து கோடநாடு எஸ்டேட்டையும், முதல்வரின் கோடநாடு வீட்டையும் பார்க்கலாம்.
...பாலா






No comments:
Post a Comment