Monday, 17 April 2017

ஆளுருட்டிமலை

"பொங்கு சாமரை யேந்திப்
புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்
சிங்க வாசனத் திருந்து
தெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கள் முக்குடை கவிப்பத்
தேவர்தந் திருந்தவை தெருள
அங்க பூவம தறைந்தாய்
அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா"
அறிஞருள்ளும் சிறந்த அறிஞர்க்கும் மேலான அறிவை உடையோய்! கந்தருவர் உன் இரு பக்கங்களிலும் நின்று கவரிகளை அசைப்பர். நீ அரியணையில் அமர்ந்தருளி, திருஒளி மண்டிலங்கள் மூன்றும் விளங்கி ஒளிரவும், முக்குடைகள் கவிழ்ந்து நிழல் தரவும், மூன்று ஆகமங்களைத் திருவாய் மலர்ந்தருளினாய். ஆகவே, உன் அடியிணை பணிவோம்.
திருச்சி புதுக்கோட்டை சாலையிலுள்ள ஆளுருட்டிமலையின் முகப்பில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அருக தெய்வத்தின் சிற்பம் மேற்க்கண்ட பாடலில் வர்ணிக்கப்பட்டவாறே உள்ளது வியப்பாக இருக்கிறது.
- பாலா பாரதி

கரட்டாம்பட்டி வீரக்கல்

பயணங்கள் முடிவதில்லை: கரட்டாம்பட்டி வீரக்கல்
கரட்டாம்பட்டி வீரக்கல்லை பார்க்கலாம் வாருங்கள் என்ற போஸ் ஐயாவின் அழைப்பை ஏற்று கரட்டாம்ட்டி பயணமானோம்.
திருச்சி – துறையூர் சாலையில் திருச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கரட்டாம்பட்டி என்னும் ஊரில் தனியார் ஒருவரது வயலில் வீரக் கல்தூண் ஒன்று காணப்படுகிறது. 92 X30X20 செ.மீ. அளவுகளுடைய இவ்வீரக்கல், கல்வெட்டு ஆய்வாளர் திரு சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
வலக்கையை மடித்தபடி இடக்கையில் வாளுடன் கூடிய வீரனின் புடைப்புச்சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கல்தூணின் நான்கு புறங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
“ மதிரை கொண்டான் என்ற மெய்கீர்த்தி பெற்ற முதலாம் பராந்தகச் சோழனின் 35 ஆம் ஆட்சியாண்டில் மியமாநாட்டு, வள்ளுவப்பாடி, விரியூர் என்ற ஊரைச்சார்ந்த பசு, ஆட்டுக் கூட்டங்களை ஊட்டத்தூர் நாட்டு பாடாலூர் என்ற ஊரைச் சேர்ந்த ஐஞ்சுருனிமான்கள் கொண்டு சென்றனர். அந்தப் பசுக் கூட்டங்களைப் பின்தொடர்ந்து சென்று அவற்றைத் திரும்பக் கொண்டு வருவதில் வெற்றிபெற்ற நாகன் என்னும் வீரன் அப்போது நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தான். நாகனின் மகளுக்கு விரியூர் மக்கள் ஏகமனதாக முடிவு செய்து வரி நீக்கப்பட்ட நிலத்தை கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் பதிவு செய்யப்ட்டுள்ளது”. என்கிறார் திரு சுபாஸ் சந்திர போஸ் அவர்கள்.
1. ஸ்வஸ்தீ ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பர்மருக்கி யாண்டு ஙயரு
2. ஆவது இவ்வாண்டு, மியமானாட்டு
3. வள்ளுவப்பாடி விரியூர், ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர்ரெஞ்சுருனிமான்கள் நிரை கொண்டுபோக,நிரைப்பின்பு சென்று, ஆடு ஈடு கொண்டுபட்ட கன் வீர
4. ன் மகளு(க்கு) ஓர்(ரோ)ரால், இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஊற்றத்தூர் தற்போதைய 'ஊட்டத்தூர்' எனவும் பாடாவூர் ஊட்டத்தூர் அருகிலுள்ள 'பாடாலூர்' எனவும் கொள்ளலாம்.
இவ்வீரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள நாகன் இடக்கை பழக்கமுடையவனாகக் காட்டப்பட்டுள்ளதைக் கவனித்த நாமும் அங்கே இருந்த வயலுக்குச் சொந்தக்காரர்களிடம்
"உங்களிடம் யாருக்காவது இடக்கை பழக்கம் உள்ளதா" எனக்கேட்க, அங்கிருந்த இரு ஆண்களில் ஒருவர் கையைத் தூக்கினார்.
இதில் குறிப்பாக நிரைகொண்டு போக, நிரைபின் சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட – என்ற செய்தி தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணை இயலில் கூறப்பட்டுள்ள, வெட்சித்திணை – நிரைகொண்டு போக, கரந்தைத் திணை – நிரைபின் சென்று, ஆடு ஈடு கொண்டு பட்ட , என்னும் இருதிணைகள் வழங்குவதைக் காணலாம்.
தொல்காப்பியர் காலத்திலிருந்த திணை ஒழுக்கம் 950 ஆம் ஆண்டிலும் வழக்கில் இருந்ததை எண்ணி வியந்தவாறே வீடுவந்து சேர்ந்தோம்.
- பாலா பாரதி

பொற்பனைக்கோட்டை

பயணங்கள் முடிவதில்லை: பொற்பனைக்கோட்டை
...தொடர்ச்சி
பொற்பனைக்கோட்டை குளக்கரையில்தான் 2012 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் தங்கதுரை அவர்களால் முக்கோண வடிவிலான பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நடுகல் தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இக்கல் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனும் கொண்டுள்ளது.
இக்கல்வெட்டைப் படித்த முனைவர் இராசவேலு அவர்கள் இதன் காலத்தைக் குறிக்கும்போது, எழுத்தமைதி அடிப்படையில் அரச்சலூர் கல்வெட்டுக்கு முற்பட்டது, புகலூர் கல்வெட்டுகளுக்குப் பிற்பட்டது எனவும் இதன் காலம் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கூறுகிறார். மேலும் அவர் இக்கல்வெட்டைப் பின்வருமாறுப் படிக்கிறார்
1. கோ வென்கட்டிற் நெதிர-
2. ணாறு பொன்கொங்கர் விண்ணக்கோன்
3. ஆ எறிஇத்து ஏவ அதவ்வனாரு
4. அங்கப்படைத் தாணையன் கணங்-
5. குமாரன்கல்
கோ வெண்கட்டி என்பவர் காலத்தில் பொன் கொங்கர் விண்ணக் கோன் என்பார் பசுக் கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்காவல் படைத்தலைவனும் கோட்டையின் காவலனுமாகிய கணங்குமரன் என்பவர் அவற்றை மீட்க நடந்த சண்டையில் இறந்துபட்டமைக்காக எடுக்கப்பட்ட கல்.
சங்க இலக்கியங்களில் வெட்சித்திணை, கரந்தைத்திணை ஆகிய திணைகள் நிரைகவர்தல், நீரை மீட்டல் போன்ற போர்முறைகளை கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீரமரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. இதில் குறிப்பிடப்படும் வீரன் வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்கவேண்டும் என்றுதெரிகிறது.
இந்தக் கல்வெட்டு "பொன்கொங்கர் விண்ணக்கோன்" என்ற சங்ககால அரசனின் ஆட்சியின்போது நடந்த சண்டையில் இறந்த கணங்குமரன் என்ற படைவீரனுக்காக எழுப்பப்பட்டது. இந்த விண்ணக்கோன் என்ற அரசன் கோ வெண்கட்டி என்ற அரசனுக்குப் பின்ஆண்டவன். அதனால் இந்த இரண்டு அரசர்களின் காலத்தை கணிப்பதற்கும் இக்கல்வெட்டு உதவியாய் அமைகிறது.
கோட்டைச் சுவருக்கு வெளியே சற்றுத் தொலைவிலுள்ள பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் பல குழிகள் காணப்படுகின்றன. இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டனவாம். இக்குழிகளுக்கு அருகாமையில் காணப்படும் குளத்திற்குப் ‘பனிநாளம்’ என்றும் பெயராம். நீராவிக்குளம், பனிநாளம் குளம் போன்ற பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துவதாக உள்ளது.
இக்குழி அமைப்புகள் அங்குள்ளவர்களால் செந்நாக்குழி என்று அழைக்கப்படுவதும் நோக்கத்தக்கது. சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின் நிறப்பண்பைக் குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச் சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன் மூலம் இதுசங்ககாலத்தை சேர்ந்த தொல்பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப் பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காணமுடிகிறது.
மேலும், திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரையுள்ள பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்தநிலையிலும் , இரும்புக் கழிவுகளைப் பிரித்தெடுக்க ப் பயன்படுத்தப்பட்ட கலன்களும் , இரும்பு வார்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்குக்குழாய்கள் . உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. பயணத்திற்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினோம்.
- பாலா பாரதி


No automatic alt text available.









Image may contain: plant and outdoor




















Image may contain: outdoor

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...