Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை....குந்தானி மலை


      குந்தானி மலை

                          முந்தையநாள் மல்லசந்திரம் மலை ஏறிய அலுப்பில் இரவில் நன்றாக உறங்கிய நாங்கள்அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே கிளம்பிவிட்டோம்.எங்கள் பயணம் குந்தானி மலையை நோக்கி.....கிருஷ்ணகிரியிலிருந்து 17 கி.மீ தொலைவிலுள்ள குமரபள்ளியை அடைந்து அங்கிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள எட்ரபள்ளி எனும் ஊருக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் ஏறவேண்டிய மலை தொலைவிலிருந்தே எங்களை வரவேற்றது. சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு தண்ணீர், சாப்பாடு ஆகியவற்றுடன் கூடிய கட்டைப்பைகளையும் கேமராவையும் தூக்கிக்கொண்டு மலையேற ஆரம்பித்தோம். திரு சுகவன முருகன் வழி காட்டிஅழைத்துச் சென்றார்.
              குந்தானிமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் விவசாயிகள் நெல், மிளகாய், நிலக்கடலை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இவர்களுக்குப் பிரச்சனையே காட்டுப்பன்றிகள்தான். இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளி வரும் காட்டுப்பன்றிகள், இந்தப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.மலையேறும் வழியெங்கும் பெருங்கற்கால மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான எச்சங்கள் நிறைய இருந்ததைப் பார்க்க முடிந்தது. மலையில் ஆங்காங்கே பெரிய பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட DOLMENS என்றழைக்கப்படும் கற்கிடைகள் நிறைய இருந்தன. ஒரு பெரிய பாறைப் பலகையை கீழே மூன்று அல்லது நான்கு கற்களை முட்டுகொடுப்பது போலக் கொடுத்து வைத்துள்ளனர். இது இறந்த அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்ளாகும். சில இடங்களில் பாறையில் இரும்பு உருக்கிய தடங்களும் தெரிந்தது. தமிழத்தில் இரும்பு காலம் பெருங்கற்காலத்தையொட்டி அமைந்ததாகச்  சொல்வார்கள்.
                    ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குச்  சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு சென்றோம். அங்கு ஓரிடத்தில் ஒரு நீர்நிலைக்கருகில் கற்களைக் கொண்டு வட்டவடிவமான ஒரு அமைப்பை ஏற்ப்படுத்தியிருந்தார்கள். இது நாம் ஏற்கனவே கம்பையநல்லூரில் சதுர வடிவில்ப் பார்த்த புதிர்நிலையின் வட்டவடிவம் என்று முருகன் அவர்கள் விளக்கினார். அவற்றை அளவெடுத்துக்கொண்டோம்.
               இந்தியாவிலேயே மிக முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பைத் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் அவர்கள் கண்டுபிடித்து அதை எங்களுக்கும் கூட்டிபோய் காண்பித்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இத்தொல்லியல் சின்னம் இரும்பு காலமான பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகும்.
மகாபாரதத்தில் இவ்வாறான யுத்தப் புதிர்நிலை ஒன்றில் அபிமன்யூ சிக்கிக் கொள்கிறான் என்பதிலிருந்து புதிர்நிலைகள் பற்றி இந்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர் எனவும் சொல்ல இயலும்.  வரலாற்று காலத்திற்கு முந்தையதான புதிர்நிலைகள் இந்தியாவில் வெகு அரிதாகவே உள்ளன. பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை ஒன்று தெற்கு கோவாவில் செங்கும் வட்டத்தில் ரிவோனா கிராமத்தினருகே உள்ள பன்சாய்மோல் என்றழைக்கப்படும் உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. 
                பெருங்கற்கால பண்பாடு பற்றிய ஆய்வுகள் சிந்துவெளி எழுத்துகளைப் படித்தறிவது போன்ற ஒரு புதிர் அவிழ்ப்பு முயற்சியாகவே இன்னும் இருக்கின்ற நிலையில் கிடைக்கும் ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை. இந்நிலையில் அகழாய்வு தவிர்த்த ஆய்வுகளில் நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாகத் தொல் மானுடவியல் உள்ளிட்ட பிற துறை ஆய்வுகளும் அவசியப்படுகின்றன. இங்கு இது போன்ற புதிர்நிலைகளின் கண்டுபிடிப்புகள் இவற்றுக்கு விடைகாண உதவக் கூடும். பொங்கல் பண்டிகையின் போது மைலார் நாளில் கால்நடைகள் இப்புதிர்நிலை முன் கொணரப்படுவதும் அன்று இப்பகுதிப் பெண்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு படைப்பதும் இப்புதிர்நிலையின் விரிவாய்வை வேண்டி நிற்கின்றன.
Lat:12.702306N
Lon:78.123778E



..

No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...