Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை....மதிகெட்டான் சோலை


மதிகெட்டான் சோலை
             அங்கே போனா அம்புட்டுத்தான்! வழிதெரியாமல் காட்டுக்குள்ளேயே மாட்டிக்கொள்வோம்! மயக்கத்தில் அங்கேயே திரிந்து கொண்டிருப்போம்! எதற்கு வேண்டாத வேலை எனப் பார்ப்பவர்கள் பலரும் அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அந்த மதிகெட்டான் சோலையில்? அங்கே போய்தான் பார்க்கலாமே என்று எண்ணி நானும், விஜயன், ரமேஷ்பாபு, ஜோதி ஆகிய ஆசிரியர்களும் கொடைக்கானல் நோக்கிப் புறப்பட்டோம்.
                     முதல்நாளே வனத்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டோம். எங்களுக்கு வழியைக் காட்டிப் பத்திரமாக அழைத்து வருவதற்க்கு வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும், அந்தக் காட்டுப்பகுதியருகே வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்வரும் சம்மதித்தனர்.

                முதல்நாளே கொடைக்கானலில் தங்கி விடிந்தவுடன் நாங்கள் நால்வரும் போகும் வழியில் அவர்கள் இருவரையும் சேர்த்துக்கொண்டு காட்டை நோக்கி புறப்பட்டோம். மோயர் பள்ளத்தாக்கிலிருந்து பேரிஜம் போகும் வழி எப்போதும் மூடியிருக்கும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே போகமுடியும். எங்கள் அனுமதியைக் காட்டிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
                       அடர்ந்தகாடு, எங்கும் மைதிஎங்கும் மூடுபனி எங்கள் வண்டிக்குப் பத்தடி தூரத்தில் வரும் வண்டிகூட தெரியவில்லை. முகப்பு விளக்கைப் போட்டுக் கொண்டே மெதுவாக வண்டி ஊர்ந்து  சென்றது. சுமார் 15 கி.மீ வந்திருப்போம். அப்போது மணி 9 இருக்கும். வண்டியை நிறுத்தச் சொன்னார்கள். இடப்புறம் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சையாக மரங்களின் மேற்பகுதிகளுடன் கீழே வனம் தெரிந்தது. பச்சை நிறம் மட்டுமின்றி ஆங்காங்கே சிவப்பு வண்ணத்திலும் மரங்களின் மேற்ப்பகுதியைப் பார்க்கமுடிந்தது. இதுதான் "மதிகெட்டான்சோலை" என்றார்கள்.

திக்கென்றிருந்தது. இதற்குள்ளாகவா போகப்போகிறோம்?என்று நினைக்கும்போது இவ்வனத்தைப்பற்றி கேள்விப்பட்டதெல்லாம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தியது.
                வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சாப்பாடு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பால்ராஜ் வழிகாட்ட ,எங்கள் ஆறுபேர் குழு மதிகெட்டான்சோலையில் நுழைந்தது.அடர்ந்த மரங்கள், ஆங்காங்கே ஓடும் சிறு ஓடைகள், கணமான நிசப்தம், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சத்தம் என்று புதிய அனுபவமாகவும் அதேசமயம் பயமாகவும் இருந்தது.
                பால்ராஜ் அக்காட்டைப்பற்றியும், அங்குவாழும் விலங்குகளைப் பற்றியும், அவர்களுக்கு கிடைக்கும் மூலிகைகள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார்.ஒருவருக்கொருவர் அருகருகே சேர்ந்து வரும்படி கூறினார் 20 அடி தொலைவிலிருந்தால்கூட சில இடங்களில் தெரியாது அவ்வளவு அடர்த்தியான மரங்களைக் கொண்டது.


“இங்க காட்டுக்குள்ள ஏதோமூலிகை இருக்காமே அதை மிதிச்சிட்டா நம்ம ஞாபகம் மறந்துபோயி காட்டுலேயே சுத்திக்கிட்டுஇருப்போம்ன்னு சொல்லுறாங்களே?”

“ஆமாய்யா அப்படித்தான் சொல்லுதாங்க ஆனா அப்படி ஏதும் மூலிகை இங்க இல்ல. ஆனா பாக்கிறதுக்கு எல்லா தெசையும் ஒரே மாதிரி இருக்குல்ல அதுனால எங்குட்டு போறதுன்னு புதுசா வந்தவங்களுக்கு தெச தெரியாதுல்ல”

ஆமாம் அவர் சொல்வது சரிதான் மரங்கள் மிகவும் உயரமாகவும அடர்த்தியாகவும் இருப்பதால் சூரிய ஒளியே அரிதாகத்தான் உள்ளே வருகிறது. எனவே நடுக்காட்டில் வானத்தைப் பார்க்க முடியாது. நம்மைச்சுற்றி இருக்கும் பகுதிகள் ஒரேமாதிரியாகவும் ஏற்கனவே வந்தமாதிரியும் ஒரேகுழப்பமாகத்தான் இருந்தது. திசைகள் சரியாக தெரியாததாலும், பார்ப்பதற்கு எல்லா பகுதிகளும் ஒரே மாதிரியாக இருப்பதாலும் இப்பகுதிக்குள் வரும் புதியவர்கள் வழிதெரியாமல் மாட்டிக் கொண்டுவிடுவார்கள்.


          வழியில் ஒரு சிறிய ருவி  வந்தது அங்கே பாறைப்பகுதியில் உட்கார்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வெடுத்தோம். பாறையில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதுதான் தெரிந்தது, எங்களை அட்டை பூச்சிகள் கடித்துக்கொண்டிருந்தன. கடித்துக்கொண்டிருந்தன என்றால் அவை இருப்பதையே நம்மால் உணரமுடியாது. பார்த்தால்தான் தெரியும் அவற்றை எடுக்கமுடியாது. தேவையான இரத்தத்தை உறிஞ்சியபின் அதுவே அகன்றுவிடும. அவற்றால் வேறு ஆபத்தில்லை. ஆவற்றை அகற்ற ஒரே வழி அவற்றின்மேல் உப்புத் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
          சிறது ஓய்வுக்குபின் பயணத்தைத் தொடர்ந்தோம். ஒரு சிறிய வழிபாட்டுத்தளம் வந்தது. இக்காட்டை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழிபடும் இடம் என்று தெரிந்தது. இக்காட்டை ஒட்டிய பகுதிகளில் இருளர் குறும்பர் கி மக்கள் வசிக்கிறார்கள். இக்காட்டில் கிடைக்கும் தேன் போன்ற பொருள்களைச் சேகரிக்கிறார்கள்.ஒரு இடத்தில் மூங்கில்செடிகள் அடர்ந்த ஒரு பகுதியைப் பார்த்தோம், பால்ராஜ் திடீரென,

“இங்க வந்து பாருங்க இந்த மூங்கி செடிய யானை இப்பத்தான் சாப்புட்டுட்டு போயிருக்கு, அதுனால அந்தப் பாதைல போகாம வேற பாதைல போலாம் வாங்க”

என்று கூறி எங்களை வேறு பாதையில் அழைத்துச் சென்றார்.


“சரிங்க திடீர்ன்னு யானை வந்துட்டா என்ன செய்யறது”

எனக்கு அப்பத்தான் ஒரு சந்தேகம் வந்தது.


“நம்ம ஒடம்புலேந்து வீசுற வாசனை ரொம்ப தூரத்துக்கு முன்னாடியே யானைக்கு தெரியும். அதுவா வெலகிப்போய்ட்டா தேவலாம் இல்லன்னா நாம வெலகிப்போயிரனும். யான ஒடம்புலேந்து ஒரு மாதிரியான கவுச்சி வாசம் காத்துல கலந்து வரும் அதவச்சி நாங்க வெலகிப் போயிடுவோம். அத தொல்ல பன்னலைனா அது நம்ம ஒன்றும் பன்னாது. ஆனா ஒத்த யானைதான் ரொம்ப பொல்லாதது. அதப்பாத்துட்டா அது பாதையிலேந்து வெலகிப் போயிட்டா பிரச்சனையில்ல”

பால்ராஜ் சொல்லச் சொல்ல அப்போதுதான் எங்களுக்கு நாங்கள் எவ்வளவு ஆபத்தின் நடுவில் இருக்கிறோம் என்று புரிந்தது.பாதுகாப்பு இல்லாம இதுபோன்ற காட்டுபகுதியில் சாகசப் பயணம் செய்தால் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

                 காட்டிலேயே வசிப்பவர்களுக்கு இதல்லாம் இயல்பான விசயங்களாகும். காட்டில் வசிப்பவர்கள் இயற்க்கையை நன்கு புரிந்து வைத்துள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றனர், அவற்றை மதிக்கின்றனர். காடுகளைப்பற்றியும், விலங்குகளைப் பற்றியும் அவர்கள் புரிதல் அளவிடமுடியாதவை. அவர்களின் நம்பிக்கைகளும் வினோதமானவை. நாம் காலையில் கிளம்பும்போது கூட நம்ம பால்ராஜ் காட்டினுள் நுழைவதற்க்கு முன்பாக சாலையின் ஓரத்திலிருந்த ஒரு சிறிய வழிபாட்டுத் தளத்தில் சாமி கும்பிட்டுவிட்டு, தான் கையில் வைத்திருந்த அரிவாளையும் அங்கு வைத்து வணங்கிவிட்டுத்தான் எங்ளுடன் கிளம்பினார். இதுபோலக் காட்டிற்குள் போகும்போது சாமி கும்பிட்டுவிட்டு செல்வதையும் கையில் அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்.பேசிக்கொண்டே நடந்து ஒரு மலையின் முகட்டை அடைந்தபோது தொலைவில் ஒரு மலையைக் காட்டிய பால்ராஜ்.

"தோ பாருங்க அங்க தெரியிதே அந்தமலையத் தாண்டிதான் இந்தமலைக்கு வந்திருக்கோம்"

என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. மிக அதிகமான தொலைவாகத் தெரிந்த தூரம் காட்டுக்குள்ளேயே நடப்பதாலும், பேசிக் கொண்டே நடப்பதாலும் நாம் நடந்த தொலைவை நம்மால் கணக்கிட முடியவதில்லை.
மலைக்காடுகள் எப்போதும் தொலைவிலிருந்து பார்க்க ஒரு மாதிரியும் உள்ளே சென்று பாக்கும்போது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட வேறு மாதிரியுமாகத்தான் இருக்கும். நான் ஒவ்வொரு மலைக்கு போகும்போதும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
பால்ராஜ் தொலைவில் ஒரு மலையைக் காட்டி

"அங்க தெரியிதா மல அந்த மலக்கி பின்னாடிதான் நாம வண்டியை நிறுத்தி வச்சிருக்கோம்"

என்றபோது எனக்கு அதிர்சியாக இருந்தது. ஏனெனில் திசையைக் கணக்கிட்டு நான் ஊகித்து வைத்திருந்தற்கு நேர் எதிர் திசையை அவர் காட்டியதுதான்.
மாலைக்குள் திரும்பி விடும்படிதான் எங்கள் பயணத் திட்டத்தை அமைத்திருந்தோம் அதனால் எங்கள் வழியை ஒரு வட்டவடிவமாக அமைத்துக் கொண்டு வந்த வழியே செல்லாமல் புறப்பட்ட இடத்தை வந்து சேர்ந்தோம். அப்போது மாலை 5 மணி. ஒரு பகற்பொழுது முழுவதும் வனத்திலேயே கழித்ததாலோ என்னவோ வனம் நமக்கு ரொம்ப பழக்கமானதைப் போல ஒரு எண்ணம் தோன்றியது. ஆனால் நாங்கள் வனம் முழுவதையும் சுற்றிவந்து விடவில்லை. அவ்வாறு முழுமையும் அவ்வளவு எளிதில் பார்த்துவிடவும் முடியாது. அவ்வனத்தின் ஒரு சிறு பகுதியைமட்டும் பார்த்துள்ளோம் என்றுதான் கூறவேண்டும். கூட வந்தவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் சொன்ன இடத்தில் அவர்களை இறக்கிவிட்டபின் இரவு நாங்கள் தங்கியிருந்த அறையை நோக்கி பயணமானோம்.

           இக்சோலைக்கு இந்த வழியில்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. மறுபுறம் கேரளப்பகுதியிலிருந்தும் உள்ளே வரலாம்.


                 இத்தகைய மலைக்காட்டுப் பகுதிக்கு தமிழ்பெயர் சோலை. இந்த சொல் ஆங்கிலத்தில் SHOLA என்று எடுத்தாளப்பட்டு அகராதியிலிலும் இடம்பெற்றுவிட்டது. 1854 ஆங்கில ராணுவ மேஜர் ஹாமில்டன் இப்பகுதி மதிப்பாய்வு செய்த அறிக்கையில் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தியதாக தெரிகிறது. பொதுவாக பூமத்திய ரேகையின் இருபுறங்களிலும் அமைந்துள்ள நாடுகளில் உள்ள மலைகளில் இத்தகைய சோலைகள் அமைந்திருக்கும்.

               குருட்டுசெண்பகம், பத்தாச்சி, முல்லைகடம்பு கிவை சோலைகாட்டு மரங்கள். இத்தகைய சோலைகளுக்கு பாரம்ரியமான பெயர்களும் உண்டு. தோகமுத்திசோலை, பானைகுந்திசோலை, கரியன் சோலை, தாய்சோலை, மதிகெட்டான் சோலை .

             சில ஊர் பெயர்களைக் கேட்க்கும்போதே அவ்வூரைப் பற்றி பல விசயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் .ஊர் பெயர்களைப் பற்றி படிக்கும் துறைக்கு  TOPONAMY என்று பெயர் நம் நாட்டு கல்வி முறையில் இன்னும் இது பிரபலமடையவில்லை.

              நீலகிரி மலையின் கிராமங்களுக்கு மந்து என்று பெயர் இதில் ஒத்தக்கல் மந்து என்ற இடத்தைச் சுற்றி ஆங்கிகேலயர்கள் குடியேறினர். எனவே இப்பகுதியை ஒத்தக்கல்மந்து Ottachamandhu என்றழைத்து அது Ottachamandalam என்று மருவி இன்று Ooty ஆக சுருங்கிவிட்டது. இப்போது ஊட்டி உதகமண்டலமாக மாற்றப்பட்டு அதன் வரலாற்று பெயரிலிருந்து வெகு தொலைவு சென்றுவிட்டது.

                 சோலைக் காடுகளில் மட்டுமே வாழும் பல பறவைகளும், ஊர்வனவும், பாலூட்டிகளும் பல உண்டு. இருவாசி எனும் Horn bill  பறவை இன்று மழைக்காடுகளின் குறியீடாக ஆகிவிட்டது. ஒரு வான்கோழி அளவுள்ள இந்தப் பறவை நெடிய மரத்தின் பொந்துகளில் வாழ்பவை. இது பறக்கும்போது உ‘;, உ‘; என சத்தமெழுப்புவதால் இதற்க்கு மலை முழக்க என்பார். இப்பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் எனவே தரைப்பகுதி ஈரப்பதமாகவே இருக்கும். இதில் பலவகையான பாம்புகள் வாழ்கின்றன. மரங்களில் மலை அணில்களும் உள்ளன, சிங்கவால் குரங்கு இதை சோலைமந்தி என்றும் கூறுவர். பாரம்ரியமான  தமிழ் பெயரிலேயே அவ்விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் அழைக்கிறேனென்று பெயரை மாற்றி குழப்பிவிட்டார்கள். காட்டு எருது என்ற பெயரைக்கேட்டவுடன் நமக்கு காட்டில் வாழும் எருது எனப்புரிகிறது. அதையே Bison என்றால் என்ன புரிகிறது.

              இச்சோலையில் வேட்டில், பைன் தைலமரஙகள் உள்ளன. இவை நீர் ஆதாரத்திற்க்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இம்மரங்கள் சோலை காடுகள் மறுஉற்பத்தி திட்டத்தின்கீழ் வெட்டி அப்புறப்படுத்தப்படுகின்றன. நம்மூர் கருவேல அழிப்பு மாதிரி. இந்தமரங்களை சோலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விலையில்லா விறகுகளாக வழங்கப்படுகின்றன. சமைப்பதற்கு காடுகளில் கிடைக்கும் விறகுகளையே நம்பியுள்ளனர். இங்கு 200 முதல் 300 மலைக்கிராமத்தினர் சராசரியாக வந்து விறகு எடுத்துச் செல்கின்றனர். மலை கிராம மக்களுக்கு ரேசன் கார்டுபோல வனத்துறை அட்டையும் வழங்கப்படுகிறது.


TO WATCH VIDEO OF MATHIKETTAN CHOLAI PLEASE GO TO:





No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...