Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை....கம்பைய நல்லூர்- கிருஷ்ணகிரி




.கம்பைய நல்லூர்- கிருஷ்ணகிரி 

                         அடுத்து நான் திரு கே.டி.காந்திராஜனுடன் சமீபத்தில் சென்றுவந்த கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளிலுள்ள தொல்லியல் சார்ந்த இடங்களைப்பற்றி எழுதலாமென்றிருக்கிறேன்.

                        எங்கள் பயணத்திட்டத்தை வகுத்து அனைத்து இடங்களுக்கும் எங்களை அழைத்து சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த திரு சுகவன முருகன் அவர்களை உங்களுக்குத் தெரியும். நமது குழு உறுப்பினர். அவரைப்பற்றி மேலும் சில செய்திகளுடன் நமது பதிவுகளைத் தொடர்வோம். "புது எழுத்து' மனோன்மணி என்று இலக்கிய உலகில் அறியப்படுகிற சுகவன முருகன்,கவிஞர். அவரது "கலவரம்' கவிதைத் தொகுப்பு பரவலாகக் கவனம் பெற்றது.கருவூலத்துறை பணியிலிருந்து விலகி ஆசிரியப்பணியை விரும்பி ஏற்றுள்ளவர்.வடமேற்கு தமிழகத்தின், குறிப்பாக கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள தொல்லியல் வளங்களைத்தேடித்தேடி கண்டடைவதில் பேரார்வம் கொண்டவர்.
           
     கிருஷ்ணகிரி பகுதியில் எங்குத் தடுக்கி விழுந்தாலும் அந்த இடம் ஒரு பெருங்கற்காலநாகரிகப் பகுதியாக இருக்கும். பழைய கற்காலம், புதிய கற்காலம் மற்றும்இரும்புக்காலம் தொடர்ந்து தற்காலம்வரை தொல்லியல் சின்னங்கள் அதிகளவில்இப்பகுதியில்தான் கிடைக்கின்றன. திரு சுகவன முருகன் எங்களை முதலில் கம்பைய நல்லூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு வயல்வெளியில் சிறியதும் பெரியதுமான கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு ஆள் நடந்து செல்வதற்கு இடமிருந்தது. உள்ளே நுழைவதற்கு வழியும் விடப்பட்டிருந்தது. அவ்வழியே நடந்தால் அப்பாதை வளைந்து வளைந்து சென்று கடைசியில் மையத்திற்கு செல்கிறது.ஏதோ ஒரு வகையான விளையாட்டு போல இருந்தது.அதுபற்றி திரு முருகனிடம் கேட்டபோது அதற்கு பெயர் புதிர்நிலை என்றும் இது பெருங்கற்காலத்தைச்(சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய)  சார்ந்தது என்றும் இத்தகைய அமைப்பு உலகின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் அது ஒரு கட்டுமானமாக வேறெங்கிலும் இல்லை.
             புதிர்நிலைகள் என்பது மையத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலைப் பாதைகளுடன் விளங்குபவையாகும். இத்தகைய புதிர்நிலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன என்பதைப் புதிய கற்காலத்தில் இருந்தே தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இதில் வட்டப்புதிர் வழிகள் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  தென்னிந்தியாவில் முதன் முதலில் கிருஷ்ணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சதுரப் புதிர்நிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.



          இந்த புதிர்நிலை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, அரசனால் சிறைபடுத்தப்பட்ட கணவனை உயிருடன் மீட்ட மனைவியின் கதை என்கிறார்கள்.இந்த புதிர்நிலையில் உள்ள ஏழு பட்டை தளப்பாதையில் நடைபயின்று வெற்றி அடைபவர் மனதில் நினைத்ததைப் பெறுவர் என்பதும், கற்களைத் தாண்டிச் செல்பவர்கள் நற்பலன்களை இழப்பர் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்தியாவிலேயே மிக முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பைத் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன், பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தைச் சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தருமபுரி மாவட்டம் கம்பையநல்லூர் அருகே கண்டுபிடித்துள்ளனர். இத்தொல்லியல் சின்னம் இரும்பு காலமான பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகும்.
      இத்தகைய  தொல்லியல் சின்னங்கள்  புதிய கற்காலத்திலிருந்தே உலகெங்கும் இருந்துள்ளதைத் தொல்லியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.  பல்வேறு புத்தகங்களில் எலிக்கு ரொட்டியை எடுக்க உதவுங்கள், அந்தப் பூனைக்கு எலியைப் பிடிக்க உதவுங்கள் என்று வட்டமாக, சதுரமாக புதிர் வழிகள் போடப்பட்டிருக்கும். அவைதான் புதிர் நிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அது சரி இந்தப் புதிர் நிலைகளைக் கண்டறிந்தது யார்? அல்லது எந்த இனத்தவர் என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. ஆனால் வட்டப் புதிர்வழிகள்  ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையானவையாகும். உள்/வெளிச் செல்ல இயலாத பல்வேறு சுழல்நிலைப் பாதைகளுடன் மையத்தே விடையைக் கொண்டு விளங்குபவை புதிர்நிலைகள் எனப்படும்.   உதாரணமாக மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக் கொண்டு உயிரிழந்த சக்கரவியூகம் இவ்வாறான ஒரு புதிர்நிலையே ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக அரிய ஒன்றை அடைய நினைக்கும் மனித மனம் ஏற்படுத்திய சிக்கல் மற்றும் அதற்கான தீர்வை வைத்திருப்பவை இப்புதிர்நிலைகள் எனலாம். கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட புதிர்நிலைகள் கி.மு. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லுசன்னா என்ற புதிர்நிலை கி.மு. 200ம் ஆண்டைச் சேர்ந்தது எனக் காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.   சிரியாவில் புதிர்நிலைகள் வரையப்பட்ட பானைச்சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கி.மு. ஆயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும். முக்கியமான வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய புதிர்நிலைகள் கிரேக்க மற்றும் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்தவை மட்டுமல்ல அவை ஆய்வாளர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டும் உள்ளன. உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிர்நிலைகள் அதிகமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன. அவை சுமார் 300 முதல் 600 ஆண்டுகள் பழமையானவை.   
பெருங்கற்கால சின்னம் என்றால் என்ன?
          புதிய கற்காலத்தை அடுத்த காலகட்டத்தைப் பெருங்கற்காலம் என்று வரையறுக்கிறோம். தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் இரும்புக்காலத்தை ஒட்டியதாகும். இறந்தவர்களின் ஈமப்புதைகுழிகளின் மீது பெரிய பெரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஈமநினைவுச் சின்னங்கள் பெருங்கற் படை சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் உண்டு. கற்பதுக்கைகள் (Cist) கற்கிடை (Dolmen) குத்துக்கல்(Menhir) பரல் உயர் பதுக்கை (Cairn Circle) என்று இதன் எல்லா வகைகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன.

பயணங்கள் முடிவதில்லை....

பாலா....





No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...