ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், பழமங்கலத்தில் உள்ள நடுகல் ஒன்றைப் பார்க்க நண்பர்கள் மாணிக்கராஜ், கருப்பையா, பாவேந்தன், செல்வம் ஆகியோருடன் போயிருந்தோம். கரூரிலிருந்து கொடுமுடி வந்து அங்கிருந்து ஒத்தக்கடை வழியாக நடுப்பாளையம் சாலையில் வந்து, நடுப்பாளையத்திற்கு முன்பாகவே இடப்புறம் திரும்பினால் பழமங்கலம் வரும். ஊரை ஒட்டிய வயற்புறம் வீரன் ஒருவனின் நடுகல் ஒன்று மூன்று புறமும், மேற்புறமும் பலகைக் கற்களால் அடைக்கப்பட்டு வழிபடப்படும் நிலையில் உள்ளது.
நாம் போயிருந்தபோது பழமங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜ், முருகேசன், கோபால் ஆகியோர் இருந்தார்கள். நடுகல் வீரனை வேடர்சாமி என்கிறார்கள். வேடர்சாமியைப் பற்றி அவர்கள் கூறிக்கொண்டிருந்தபோதே மேலும் இரு பெண்களும், ஒரு சிறுவனும் இணைந்துக் கொண்டனர். இவ்வூரைச் சேர்ந்த விஸ்வநாதன் அவர்களும் அலைபேசி வழியே வேடர்சாமியைப் பற்றிப் பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார்.
வயற்புறமாக நடப்பட்டுள்ள இந்த நடுகல்லைச் சுற்றிப் பலகைக் கற்களைக்கொண்டு சிறிய கோயில் போல அமைத்து விளக்கிட்டு வழிபடுகிறார்கள். அவ்வூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அருகில் மற்ற ஊர்களிலில் இருந்தும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வேடர்சாமியை தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாகக் கருதி அமாவாசை அன்று பொங்கலிட்டு வழிபடுகிறார்கள்.
அண்மையில் பெண் ஒருவரின் மேல் அருள் வந்து குறிசொல்லும்போது சாமி 'அடிக்கு ஒரு கிடா' கேட்டதாம். இக்கோயிலைச் சுற்றி வரும்போது பாதங்களை ஒட்டி, ஒட்டி வைத்து நடந்தால் எத்தனை அடி எடுத்து வைக்கிறோமோ அத்தனை கிடா பலி கொடுக்குமாறுக் கேட்டதாம். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 'அடிக்கு ஒரு கிடா' என்பதற்கு பதிலாக 'ஆடிக்கு ஒரு கிடா' கொடுக்கலாமா என ஆலோசித்து வருகிறார்களாம்.
சிற்ப அமைப்பு : இந்நடுகல்லில் வீரன் ஒருவன் ஆலீடாசனம் எனும் நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கிறான். தனது வலதுகையில் கடகம் எனும் போர்வாளை முஷ்டி ஹஸ்தம் அமைதியில் பிடித்துத் தனக்குப் பக்கவாட்டில் உள்ள எதிரியைக் குத்துவதற்கு நீட்டியவாறு காட்டப்பட்டிருக்கிறான். இவ்வீரனின் இடதுகை மடக்கப்பட்டவாறுள்ளது. கூந்தலை அள்ளி வீரனுக்கு வலப்பக்கமாகப் பெரிய கொண்டையாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கழுத்தணிகள் இன்றியும் காதுகள் வடிகாதுகளாகவும் வடிக்கப்பட்டிருக்கிறான். கீழாடையாக மரவுரி ஆடையும், இவ்வாடையின் கொசுவங்கள் பக்கவாட்டிலும் இரு கால்களுக்கு இடையில் தொங்கியவண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான அலங்காரங்கள் உடைய அரைப்பட்டிகை எனும் இடையணி இடையில் உள்ள ஆடை இறுக்க கட்டப்பட்டு, அதில் வாளின் உறை ஒன்று வலப்பக்கமாகத் தொங்கியபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (சிற்ப அமைப்பு விளக்கம்: திரு.மாணிக்கராஜ்)
இதுவரை கிடைத்த நடுகற்களில் பழமங்கலத்தில்தான் பாடல் கல்வெட்டாக உள்ளது. வெண்பா வடிவில் பாடல் கல்வெட்டாக நடுகல்லில் கிடைப்பது சிறப்பு.
"வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
சாய்த்தமருள் வென்ற சயம்பெருக - சீர்த்தபுகழ்
நிக்குவணம் கற்பொறிக்கப் பட்டான் கரையகுலச்
சொக்கனெந் தய்வுலகில் தான்.
இக்கற்பொறி இரக்ஷிப்பான் ஶ்ரீபாதம் எந்தலைமேலே"
(முதலில் வாசித்துக் காட்டியவர் புலவர் செ. ராசு அவர்கள்)
விளக்கம் : புகழ்வாய்ந்த பழமங்கலத்தில் போர் நடைபெற்றது. எதிரிகளை வாட்போரில் எதிர்த்தான் சொக்கன். அப்போரில் வெற்றி பெருக வென்று, அவன் புகழ் நிலைக்கும் வண்ணம் அவன் வீரம் கல்லில் பொறிக்கப்பட்டது. அவன் கரைய குலத்தில் பிறந்த சொக்கன் எனப்பட்ட என் தந்தையாவான். இக்கல்லை காப்பவன் பாதம் என் தலைமேல் வைக்கப்படுவதாக. எனச் சொக்கனின் மகன் இக்கல்லை நாட்டினான். சொக்கன் மகன் வேண்டியபடி இக்கல்லைக் காத்துவரும் பழமங்கலத்தாருக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
- பாலா பாரதி
Vedar samy you tube : https://youtu.be/dYpb97hV-Tg?
si=hFHt8jc7M2qIkE3j




No comments:
Post a Comment