Thursday, 31 August 2017

தலையில்லாத் துறவி

தலையில்லாத் துறவி
அன்னவாசல் அருகேயுள்ள தலையில்லா சிற்பத்தின் தலை சிற்பம் வடிக்கும்போதே தலையில்லாமல் வடிக்கப்பட்டதா அல்லது பின்னாட்களில் தலை சிதைக்கப்பட்டதா என எனக்கிருந்த ஐயம் தீர்ந்தது.

விழுப்புரத்திலிருந்து கல்வெட்டறிஞர்கள் வீரராகவன் ஐயா, மங்கை வீரராகவன், கிருஷ்ணகிரி திரு சுகவன முருகன், திருச்சி முனைவர் தமிழகன் ஐயா, திரு வீரசேகரன் ஆகியோருடன் ஒரு குழுவாகச் சென்று இச்சிற்பத்தை ஆய்வு செய்தோம். இச்சிற்பத்தின் தலை சிதைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
பிண்டி மரத்தின் கீழ் தலையில்லா நிலையிலுள்ள சமணத்துறவியின் சிற்பம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சாலையோரத்தில் உள்ளது. அன்னவாசல் - விராலிமலை சாலையின் வடபுறம் ஒர் ஊருணியின் மேல்புறம் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது என்ற அறிவிப்புடன் கிழக்கு நோக்கிய நிலையிலுள்ள இச்சிலை தற்போது ஒரு மேடையின்மீது அமைக்கப்பட்டுள்ளது.
சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தலை நீக்கப்பட்ட நிலையிலுள்ள தீர்த்தங்கரரின் தலைக்கு மேலே ஒளிவட்டம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. முக்குடையின் கீழ் அமர்ந்தவடிவிலுள்ள தீர்த்தங்கரருக்கு இருபுறமும் இயக்கர்கள் வெண்சாமரம் வீசியவாறுள்ளனர். பத்மாசன நிலையில் தவக்கோலத்தில் வாளிப்பான மார்புடன் காட்சியளிக்கும் தீர்த்தங்கரரின் ஆசனத்தில் திண்டு காட்டப்பட்டுள்ளது.
சிம்மாசனத்தின் இருபுறங்களிலும் யாழிகள் தங்கள் வாலை சுருட்டியவாறுள்ளன. பீடத்தில் ஐந்து சிம்மங்கள் குத்திட்டு அமர்ந்தவாறு பீடத்தைத் தாங்கி நிற்கின்றன. பிண்டி மரம் வழக்கமாகக் காட்டப்படுவதுபோல இல்லாமல், கொடியுடன் கூடிய இலைகளில் மணி வடிவிலான மலர்களுடன் காட்டப்பட்டுள்ளது. பிண்டிக்கொடியினூடே காந்தர்வர்களும் காட்டப்பட்டுள்ளமை மேலும் சிறப்பைக் கூட்டுகிறது. இதன் காலம் 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என மதிப்பிடுகிறார் கல்வெட்டு, தொல்லியல் அறிஞர் திரு வீரராகவன் அவர்கள்.
- பாலா பாரதி





No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...