கோத்தர்கள்
மாணவர்களுக்குத் தேர்வு முடிந்து விடுமுறை
ஆரம்பித்துவிட்டால் எனக்குக் கொண்டாட்டம்தான். பல இடங்களுக்கு பயணம் செய்யலாமே
அதனால்தான். விடுமுறை நெருங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கேமராவில் சார்ஜ்
போடுவது, மெமரிகார்டை பிரிபண்னுவது போன்ற முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை செய்து வைத்துக்
கொள்வேன். எங்கெல்லாம் இன்னமும் போக வேண்டும் என்ற நீண்ட பட்டியல் எப்போதும்
என்னிடம் இருக்கும். அதில் ஏதாவது ஒரு இடத்தை சூழ்நிலைகளைப் பொருத்து தேர்வு
செய்துக்கொண்டு அவ்விடத்திற்கு கிளம்பிவிடுவேன், பெரும்பாலும்
தனியாகத்தான். பிலோ இருதயநாத் அவர்கள் கூறியதைப்போல் தனியாகப் போவதுதான் சிறந்தது, பாதுகாப்பிற்காக
மேலும் ஒருவரை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டிற்கு மேற்பட்டவர்கள்
மேற்கொள்ளும் பயணங்களில் அவரவர்கள் தங்கள் யோசனைகளை கூறி, பயணத்தின்
நோக்கத்தைச் சிதைத்துவிடவாய்புண்டு.
எப்போதும் எனது வாகனதிலேயே செல்வேன், வாகனத்தில்
காட்டுப் பயணங்கள் மற்றும் ஆய்வுக்கு தேவையான அனைத்துத் தளவாடங்களும் இருக்கும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அடர்த்தியான காடுகளில் நடந்து
செல்லும்போது அதற்கென்று
தயாரிக்கப்பட்ட ரப்பர் காலுறைகள், இது
தரையிலிருந்து பாம்புபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து காக்கும். தேனிக்கள், கதண்டுகள்
உள்ள இடங்களுக்குச் செல்லும்போது போட்டுக் கொள்வதற்காக மழைக்கோட்டு, கையுறைகள்
தலைக்கென்று தனியாக ஒரு உறை ஆகியவை எப்போதும் பயணத்தில் என் கூடவே வரும்.
இவையெல்லாம் மற்றொரு சோடியும் இருக்கும், ஏனெனில்
காடுகளுக்குள் போகவேண்டி யிருந்தால் நம்மைக் கூட்டிப்போக யாராவது வருவார்கள்
அவர்களுக்குத் தேவைப்படுமே.
நீலகிரியில் இருளர்கள், கோத்தர்கள், தோடர்கள், குறும்பர்கள், தொதவர்கள், பனியர்கள், காட்டு நாயக்கர்ள் முதலிய பழங்குடிகள் வாழ்கின்றனர்.இவர்களில் கோத்தர்கள் வாழும் மலை என்ற பொருள்படும்படி
அமைந்தது தான் கோத்தகிரி என்று படித்தபோது அவர்களை நேரில் சந்தித்துவிடவேண்டும்
என்ற ஆவலில் கிளம்பிவிட்டேன்.
முதல்நாளே ஊட்டிக்குச் சென்று இரவுதங்கி,மறுநாள் காலை கோத்தகிரி புறப்பட்டேன். பயணம்
திட்டமிடப்படாதது. எனவே ஆங்காங்கே கிடைக்கும் வாய்ப்புகளைக் கொண்டு பயணத்தைத் தொடர
வேண்டும். கோத்தகிரியை அடைந்தவுடன் ஒரு தேநீர்கடையில் தேநீர் அருந்தியவாரே
கீழ்க்கோத்தகிரி பற்றி
அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன். அப்போது அவர்களில் ஒருவர் தனக்கு அங்கு ஒரு
வேலையிருப்பதாகவும் தானும்கூட வந்து அவ்வூரைக் காட்டுவதாகவும் கூறினார். பிறகென்ன
அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கீழ்க்கோத்தகிரியை நோக்கி
பயணமானோம்.பயணத்தின்போது அவரிடம் பேசியதிலிருந்து அவர் பெயர் அப்துல்மஜீத்
என்பதும்,அவர்ஒரு
ஆடு வியாபாரி என்பதும்,ஆடு
வாங்குவதற்காகத்தான் கீழ்க்கோத்தகிரி வருகிறார் என்றும் தெரிந்தது.
“ஆடுதானே நாளைக்குபோய் வாங்கிக் கொள்கிறேன் இன்று
உங்கள் கூடவே வருகிறேன்” என்றார்.
மேகங்களைப் பார்ப்பது எப்போதும் எனக்குப் பிடிக்கும்.
அழகாக நகர்ந்துகொண்டே உருவம் மாறி மாறி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் அவை
சில நேரங்களில் எனக்கு கதை சொல்வதுபோலத் தெரியும். அத்தகைய மேகங்களை நீலகிரியின்
மலைமுகட்டிலிருந்து கீழே பள்ளத்தாக்குப் பகுதியில் பார்க்கும்போது நமது
கால்களுக்கு கீழே தெரியும் காட்சியைப் பார்த்தவுடன்
‘எப்படி உனக்கு மேலே வந்துவிட்டேன் பார்த்தாயா?’ என்று சொல்லத் தோன்றியது.
ஒரு
'எஸ்'வடவ வளைவில் சாலையின் இடப்புறம் ஒரு சாலை பிரிந்தது
அதில் போகச் சொன்னார் மஜீத்.அது தார்ச்சாலை அல்ல,நான்கு பெண்கள் தலையிலும் இடுப்பிலும் ஏதேதோ சுமந்து
சென்றுக் கொண்டிருந்தனர்.பக்கத்திலுள்ள
ஏதோ ஊருக்குப் போவார்கள்போல,சிறிய சாலையாக இருந்ததால் நம்வண்டியைப் பார்த்ததும்
சுமையை இறக்கி வைத்துவிட்டு வழி விட்டு நின்றனர்.அது அவர்களுக்கும் சற்று ஓய்வளித்திருக்கும். சிறிது
தூரம் போனவுடனேயே கோத்தர்களின் குடியிருப்பு தெரிந்தது. சுமார் 30 வீடுகள் இருக்கும் அனைத்தும் ஒரே மாதிரியான வரிசையான
ஓடு வேயப்பட்ட வீடுகள். ஊரின் நுழைவுவாயில் மூன்று கார்கள் நின்றுக் கொண்டிருந்தன.
ஒரு வாகனத்துக்கு வெளியே இரண்டு பெண்கள் கோத்தர்களுக்கே உரிய வெள்ளை நிற உடையுடன்
வாகனத்துக்குள் இருக்கும் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
நாம் வாகனத்தை விட்டு இறங்கியவுடன் பெண்களிருவரும்
சற்று வியப்பான முகபாவனையுடன் நம்மை நோக்க, வாகனத்திலிருந்து
இறங்கிய ஆண் நேராக நம்மிடம் வந்தார். அவரிடம் நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டோம்.
அவர் பெயர் கௌசிக் என்றும் அவசரமான வேளையாக கோத்தகிரி போவதாகவும், அந்த
இரண்டு பெண்களும் நமக்கு உதவுவார்கள் என்றும் கூறினார். இதுபோன்ற
குடியிருப்புகளுக்குச் செல்லும்போது முதலில் ஊர்ப்பெரியவர்களை முதலில் சந்திக்கு
நாம் வந்த காரணத்தைக் கூறிவிடுவது நல்லது. எனவே அவர்களிடம் விசாரித்ததில் ஊரில்
பூசாரி கவுந்தன் என்பவரும் மாகாளி அம்மாவும் இருப்பதாகக்
கூறினார்கள். முதலில் பூசாரி அவர்களின் வீட்டுக்குப் போனோம். மிகவும் அன்பாக பேசிய
அவர் தங்களைப் பார்க்கத் தொலைவிலிருந்து வந்திப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதாகத்
தெரிவித்துவிட்டு அவர்களின் ஊரைப்பற்றியும்,அவர்களின் பண்பாட்டைப் பற்றியும் விரிவாவாகப் பேச
ஆரம்பித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் வாழும் கோத்தர்கள் என
அழைக்கப்படும் இப்பழங்குடிஇன மக்கள் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும்
தலைகுந்தா, கீழ்க்கோத்தகிரி, திருச்சுக்குடி உட்ப ஏழு பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்களின் தலைமையிடமாக மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி கருதப்படுகிறது.
கோத்தகிரி என்ற பெயரே இவர்களின் பெயரிலிருந்துதான் வந்ததாகக் கூறுகிறார்கள்.
அதாவது கோத்தர்கள் வாழும் மலையின் பெயர் கோத்தகிரி ஆனதாம்.இவர்கள் தாங்கள்
வாழுமிடத்தை ‘கோகால்’ என்றும்
வீட்டை ‘பய்’ என்றும்
தெருவை ‘கேரி' என்றும் அவர்கள் மொழியில் அழைக்கின்றனர். இவர்களின்
மக்கள்தொகை இரண்டாயிரத்து ஐநூறுதான் இருக்கும். கோத்தர்கள் சிறந்த கைவினைஞர்கள்.
இவர்கள் மட்பாண்டங்கள் செய்தல், தங்கம்
வெள்ளி ஆபரணங்களை வடிவமைத்தல், கயிரு
திரித்தல், இரும்புக் கருவிகள் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்களாக
உள்ளனர். ஆனால் இப்போது பல வேலைகளும் செய்கின்றனர்.
இவர்கள் பேசும் மொழி ‘கோ’, ‘கோத்தா’ முதலான
பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மொழிக்கு எழுத்துகள் கிடையாது. இம்மொழி பல
பண்புகளுடன் தமிழை ஒத்திருந்தாலும் இது கன்னட மொழியின் கிளைமொழியாகக்
கருதப்பட்டது. இம்மொழியை ஆராய்ந்த மொழியியல் அறிஞர் 'எமனோ' இதைத் தனிமொழியாகப் பிரித்துக் கூறி இம்மொழியும்
தொதுவர்கள் பேசும் 'தொத' மொழியும் ஒரே காலகட்டத்தில் தொல்தமிழிலிருந்து தமிழுடன்
சேர்ந்து பிரிந்தவை எனச் சான்றுகளுடன் நிருபித்துள்ளார்.
இம்மொழியில் பத்து உயிரெழுத்துக்களும், இருபத்து
மூன்று மெய்யெழுத்துக்களும் உள்ளன. ஊயர்தினை, அஃறிணை
பாகுபாடும், ஆண்பால், பெண்பால்
வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எண்களில் ஒருமைப்பண்மை பகுப்பும், ஒன்றுமுதல்
பத்துவரை குறிக்கும் சொற்கள் உள்ளன. நூறு, ஆயிரம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் இருந்தாலும்
இலட்சம், கோடி
போன்ற பெரிய எண்களுக்கான சொற்கள் காணப்படவில்லை.
இவர்கள் நூற்றையும், ஆயிரத்தையும் இணைத்து இலட்சம் கோடி ஆகியவற்றைக்
குறிக்கிறார்கள். இம்மொழியில் இலக்கியங்கள் எதுவும் காணப்படவில்லையானாலும் கதைகள்,பாடல்கள் உண்டு. பல்வேறு இசைகருவிகளை இசைத்து இவர்கள்
பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். பாடல்கள் சூலழுக்கு தக்கவாறு அமைக்கின்றனர் கோயில்
திருவிழாவிற்கு, குழந்தை
பிறப்பிற்கு, இறப்பிற்கு
என்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித் தனியே பாடல்கள் அமைத்து பாடி மகிழ்கின்றனர்.
மணவிலக்கும், விதவை மணமும் வழக்கத்திலுள்ளது. இறந்தவர்களைப்
புதைக்கும் வழக்கமும், இறந்ததனால்
ஏற்படும் தீட்டு மூன்று நாட்களுக்குக் கடைபிடிக்கும் வழக்கமும் உள்ளது. இறந்த
அன்று 'பச்தாவ்' என்றழைக்கப்படும் பச்சைச் சாவு என்றும் ஓராண்டு
கழித்து 'வால்தாவ்' என்றழைக்கப்படும் காய்ந்த சாவு என்றும் இரு சடங்குகள்
நடத்துகிறார்கள். இவ்வாறு தீட்டு உள்ளவர்கள் தங்குவதற்கென்று ஊருக்கு வெளியே
தனியாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இயற்கையை வழிபடுகிறார்கள் இவர்களின் ஏழுகுழுக்களில் ஆறு குழுக்களில் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் திறக்கப்படும். தலைமையிடமாக விளங்கும் குந்தா கோத்தகிரி கோயில் மட்டும் ஆண்டுக்கு இரண்டுமறை அறுவடை நேரத்திலும் உழவு நேரத்திலும் திறக்கப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது. குந்தா கோத்தகிரியில் வழிபாட்டுத்தளம் அருகே பிரமாண்ட மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியை குறைந்தது 40 பேர் இணைந்து கைகளைக் கோர்த்து நின்றால் மட்டுமே சுற்றிப் பிடிக்க முடியுமாம்.
இவர்கள் இயற்கையை வழிபடுகிறார்கள் இவர்களின் ஏழுகுழுக்களில் ஆறு குழுக்களில் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் திறக்கப்படும். தலைமையிடமாக விளங்கும் குந்தா கோத்தகிரி கோயில் மட்டும் ஆண்டுக்கு இரண்டுமறை அறுவடை நேரத்திலும் உழவு நேரத்திலும் திறக்கப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது. குந்தா கோத்தகிரியில் வழிபாட்டுத்தளம் அருகே பிரமாண்ட மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியை குறைந்தது 40 பேர் இணைந்து கைகளைக் கோர்த்து நின்றால் மட்டுமே சுற்றிப் பிடிக்க முடியுமாம்.
இம்மரத்தை இவர்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.
இம்மரம் குறித்து கேள்விபட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரிச்சார்டு என்ற
ஆராய்ச்சியாளர், இம்மரத்தின்
வயது ஆயிரம் ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார். இம்மரம் குறித்து தாவரவியல்
ஆராய்ச்சியாளரும் எமரால்டிலுள்ள மத்திய அரசின் மூலிகைப்பண்ணை இயக்குநருமான டாக்டர்
ராஜன் தெரிவித்துள்ள கருத்தாவது:
“நீலகிரிமாவட்டத்தில்
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே இங்குள்ள மரங்களைக் குறித்த ஆவணங்கள் உள்ளன.
அதனால் இம்மரம் குறித்த சரியான வயதை ஆய்வுகளுக்கு பின்னரே கூறமுடியும். இந்த மரம்
அவர்களது வழக்கப்படி ‘சேலமரம்’ என அழைக்கப்பட்டாளும் இதன் தாவரவியலில் 'பைக்கஸ்’ எனும் பிரிவைச் சேர்ந்த இம்மரம் அரச மரக்
குடும்பத்தைச் சோந்ததாகும். கோத்தர்
இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் பொ.ஆ 1200ல் இருந்தே வசித்து வருகின்றனர். இந்நிலையில்1691ல் கள்ளிக் கோட்டையிலிருந்து நீலகிரிக்கு முதலில் வந்த
கிரிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் பெரைரா முதலில் இப்பகுதிக்கே வந்துள்ளார். அப்போது
மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வந்ததாகவும் தனது
குறிப்புகளில் தெரிவித்துள்ளார். எனவே குந்தா கோத்தகிரியிலுள்ள இந்த மரம் பழமையான
மரமாக இருகக்கலாம். ஆனால் 900 ஆண்டுகள் பழமையானதா என்பதை தீர்மானமாக கூறமுடியாது”.
இம்மரத்தைப்
பார்க்க ஆடிப்பெருக்கு தினத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்களாம்.
இவர்கள் வாழும் கோக்காலில் இரண்டு அல்லது மூன்று கேரி
என அழைக்கப்படும் தெருக்கள் இருக்கும். வீடுகள்
வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும்.
நாம் இப்போது இருக்கும் கீழ்க்கோத்தகிரியில் மூன்று கேரிக்கள் உள்ளன. ஒரே கேரியில்
வசிப்பவர்கள் இரத்த உறவினர்களாக அதாவது அண்ணன், தம்பி உறவுமுறையை உடையவர்களாக இருப்பர் ஒரு கேரியில்
உள்ளவர்கள் மற்றொரு கேரியில் உள்ளவர்களுடன் மணமுடிப்பர்.
இவர்கள் 'கம்பெட்ராயன்' எனும் தெய்வத்தை வணங்குகிறார்கள் ஆனால் இத்தெய்வத்தினை
’ஐனோர்’’ என்று அழைக்கின்றன. பெண் தெய்வத்தை 'அம்னோர்' என்றும் அழைக்கின்றனர். இத் தெய்வங்களுக்கு
தனித்தனியான கோயில்கள் உள்ளன. சிறிய அளவில் சதுரமான அடிப்பரப்புடன் காணப்படும்
இக்கோயில்களை சுற்றி இடம்விட்டு அதன் எல்லைகளைக் குறிக்கும் கற்களை வைத்துள்ளனர்.
இப்பகுதி;க்குள்
அதாவது கோயிலின் அருகே வெளியாட்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதுமட்டுமல்ல 12 வயதுகுக்கு குறைவான பெண்களைத்தவிர அவர்கள் இனத்தைச்
சேர்ந்த மற்ற பெண்களுக்கும் கூட அனுமதியில்லை.
நாம் சற்றுத் தொலைவில் நின்றுக் கொண்டே இக்கோயில்களைப் படமெடுத்துக்கொண்டோம்.
கோயிலுக்கு வெளியே தரையில் கிடக்கும் கற்பலகைகளில் சில
கோட்டுருவங்கள் தென்பட்டன. அவை பல இந்துக் கோயில்களில் காணப்படும் ஆடுபுலி ஆட்டம்
போன்ற கட்டங்களைக் கொண்டவையாக உள்ளன. கற்பூரம், பூக்கள், பழங்கள் கொண்டு தெய்வங்களை வழிபடுவார்களாம். திருவிழா
ஆண்டுக்கு இருமுறை ஏர்திருவிழா,அறுவடைத் திருவிழா என்று கொண்டாடுவார்களாம்.
திருவிழாக்கள் பிறைபார்த்தே முடிவுசெய்யப் படுமாம். உயிர்ப் பலிஇடும் வழக்கம்
இவர்களிடம் இல்லையாம். முன்பெல்லாம் சுத்தசைவமாக விளங்கியவர்களில் பலர் இப்போது
அசைவமும் சேர்த்துக் கொள்கிறார்களாம்.
இவர்கள் விரும்பி உண்ணும் உணவு ’இராகிப்புட்டு’ ஆகும். நமக்கும் இராகிப்புட்டு கொடுத்து
உபசரித்தர்.இரண்டு கோயில்களுக்கும் இடையே அமைந்திருக்கும் ஒரு வீட்டில்தான் ஊர்
பூசாரி கவுந்தன் ஐயா தனது குடும்பத்துடன் வசிக்கிறார். பூசாரியாக உள்ளவர் மிகவும்
கடுமையான நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமாம். பூசாரிக்குக் கொடுக்கப்படும்
மரியாதைகள் அனைத்தும் அவர் மனைவிக்கும் கொடுக்கப்படுமாம். பூசாரி ஊரில் இல்லாத
காலங்களில் அவர் மனைவி பூசாரினியாகச் செயல்படுவாராம்.
" எனக்கு வயசாயிருச்சில்ல அதனால ஏதாவது சொல்லாம
விட்டுருப்பேன், நீங்க
இங்க உள்ள படிச்ச புள்ளங்ககிட்ட பேசினிங்கன்னா இன்னும் நெறைய சொல்லுவாங்க"
என்று
கவுந்தன் அவர்கள் கூற,நாமும்
நம் அருகிலிருந்த இரண்டு பெண்களிடம் பேச ஆரம்பித்தோம். அவர்கள் தங்கள் பெயரை
சிவப்பிரியா என்றும் விஷ்னுப்பிரியா என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
”சிவப்பிரியா
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்”
ஏதாவது
ஒரு பள்ளிப்படிப்பைக் கூறுவார் என்று எதிர்பாத்த எனக்கு அவர்கூறிய பதில்
வியப்பளித்தது.
“நான் எம்.பில்
படித்திருக்கிறேன்”
விஷ்ஷ்னுபிரியா
நீங்கள்
“நான்
எம்.எஸ்.சி படித்திருக்கிறேன்”
அவர்கள்
அதிகம் படித்ததைக் கேட்டு வியப்பாக இருந்தது என்றால் அவர்களை குறைவாக
மதிப்பிட்டுவிட்டேன் என்று பொருளல்ல, எதிர்பார்க்கவில்லை என்பதுதான் காரணம்.
சிவப்பிரியாவும், விஷ்னுபிரியாவும் பள்ளிப்படிப்பை இங்கேயே முடித்தபின்
கல்லூரிப் படிப்பிற்காக ‘கோவை' சென்றார்களாம்.
‘சார் எங்களோட மாகாளி
அம்மாவைப்பார்ப்போம் வாங்க’
என்று
அவர்கள் அழைக்க, நாம்
மாகாளி அம்மாவைப் பார்க்க மூன்றாவது கேரிக்கு நடந்தோம்.
ஊரில் இரண்டு கோயில்கள் இருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் நினைவிலுள்ளதா? ஐனோர் கோயிலுக்கு கவுந்தன் அவர்களும் அம்னோர் கோயிலுக்கு மாகாளியம்மாவும் பூசாரிகளாகச் செயல்படுகிறார்கள்.
ஊரில் இரண்டு கோயில்கள் இருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் நினைவிலுள்ளதா? ஐனோர் கோயிலுக்கு கவுந்தன் அவர்களும் அம்னோர் கோயிலுக்கு மாகாளியம்மாவும் பூசாரிகளாகச் செயல்படுகிறார்கள்.
மாகாளியம்மாவின் இயற்பெயர் தெரியவில்லை, எல்லோரும் மாகாளி அம்மா என்றுதான் மரியாதையாக
அழைக்கிறார்கள். அவர் வீட்டை நோக்கி நடந்து செல்லும்போதே இவருக்கு
கோத்தர் சமுதாயத்திற்கே உரித்தான
பாடல்கள் நிறைய தெரியும், மிகவும்
நன்றாகப் பாடுவார்கள் என்றும் அவரைப் பற்றி அறிமுகம் செய்துவிட்டார்கள். அவருக்கு
வணக்கம் தெரிவித்துவிட்டு அவரிடமுள்ள பாடல்களில் ஒன்றைப்பாட சொன்னபோது
மறுத்துவிட்டார். மேலும் வேறு வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டது எனக்கு
ஏமாற்றமாக இருந்தது. இருந்தும் நாம் மணம் தளராமல் அவருக்காக காத்திருந்தோம்.
இடைப்பட்ட நேரத்தில் அவர்களின் பாரம்பரிய உணவான இராகிபுட்டும், சுவையான தேநீரும் மீண்டும் வந்தது. அவற்றை
சாப்பிட்டுவிட்டு அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பாட ஆரம்பித்தார்.
பாடியது மட்டுமல்லாமல் அதற்கான விளக்கமும் கொடுத்து நம்மை வியப்பின் உச்சத்திற்கே
அழைத்துச் சென்றார்.
நிறைமாதக் கர்பிணியாக இருக்கும் பெண் ஒருத்தி தன்
தாய்வீட்டிற்கு செல்கிறாள். தாயின் வீடு அடுத்த காட்டில் உள்ளது, காட்டைக் கடந்து செல்லவேண்டும், மாலைநேரமாக இருப்பது அவளை சங்கடப்படுத்தியதைவிட
இம்மாதிரியான கடினமான காலகட்டத்தில் தன் கணவன் தன்னுடன் இல்லையே என்ற எண்ணம்தான்
அவளை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். பெண்குயில் ஒன்று தனியாக கூவியது தன்நிலையைச்
சொல்வதுபோலிருக்கவும், இவளும்
அக்குயிலின் பாட்டிற்கு எதிர்பாட்டு பாடுகிறாள்.
" ஆளாடாதே
......... அதவனக்காடே.....அண்ணே
கணவீட்டாச்சே....கண்ணுறக்கெட்டோ
.......
லாலாலே...லாலாலே...லல்லே
லாலாலே...லாலாலே...லல்லே
ஓட்டேமிங்கே
....... நீரேதாகே ........அண்ணே
கணவீட்டாச்சே....கண்ணுறக்கெட்டோ
.......
லாலாலே...லாலாலே...லல்லே
லாலாலே...லாலாலே...லல்லே
............. ...........
............. ........... "
அவர்
பாடப்பாட மொழிப் புரியாவிட்டாலும் அவர்பாடியவிதமும் அந்த ராகமும் தனியாக காட்டில்
நடந்து சென்ற அப்பெண்ணின் மனநிலையை துல்லியமாக பிரதிபலித்ததைக் கண்டோம்.அப்பெண்
பாடியதைக் கேட்ட அவளுடைய அண்ணன் அங்கே வருகிறான். அவள் தனக்கு தண்ணீர் தாகம்
எடுப்பதாகக் பாடியதைக் கேட்ட அவனும் தன் கையில் உள்ள வில்லை எடுத்து அருகிலிருந்த
வீட்டாச் மலையை நோக்கி அம்பெய்கிறான். அம்புவிழுந்த இடத்திலிருந்து நீர் பெருகிவர
அவளும் நீரைப்பருகி தாகத்தைத் தணிக்கிறாள்.
அண்ணன் தங்கை பாசத்தை இப்பாடல் நமக்கு கூறுகிறது
என்றால் மற்றொரு பாடல் கணவன் ஒருவன் தன் மனைவியை இழந்த சோகத்தை பாடலாக பாடுவதைக்
கேட்டீர்களானால் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்க இயலாது.அவ்வூரில்
யாராவது இறந்துவிட்டால் இப்பாடலைப் பாடுவார்களாம். மனைவி இறந்துவிடுகிறாள் , அளை உடல் கட்டிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
அருகில் அவர்கள் குழந்தை
இறப்பைப் பற்றி எதுவும் தெரியாததால் அவ்வுடலின் மீது ஏறி விளையாடுவதைப் பார்த்த
கணவனுக்கு துக்கம் மேலும் அதிகமாக, மனைவியின் நினைவு அவனைவாட்ட அவன் அவளை நினைத்து தான்
வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாடுகிறான்.
லாலே
.....லாலே....லாலே
எனத்
தாலாட்டுபோல ஆரம்பிக்கிறது இப்பாடல்
"லாலே.....லாலே....லாலே......
லாலே .....லாலே....லாலே......
என்னோ
அவ்வா ஆன மாதி ........
லாலே
.....லாலே....லாலே .............
ஐயோ
.......... பெட்டே
.... மாதி .......
ஆளளாமேளே
ஒருகுட் பெற்கு ........ மாதி .....
மீயேனே
.... ஈடுகுட் ....பெறகே ..... மாதி ....
....
........
.......... .........."
அறுவடைக்குப்
போய்விட்டு வரும் பெண்கள் ஆளுக்கு ஒரு மூட்டை சாமை கொண்டு வந்தால் இவள் இரண்டு
மூட்டை கொண்டு வருவாளாம். இவ்வாறு அவள் சிறப்புகளைப்பாடி அவள் இல்லாமல்தான் எப்படி காலந்
தள்ளப்போவதாக தன்னையே கேட்கும்படியாக இப்பாடல் அமைந்துள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு பாட்டு
வைத்திருக்கிறார்கள். அவற்றில் சில இவரிடம் மட்டுமே உள்ளதாம், வேறு யாருக்கும் இப்பாடல்கள் தெரியாதாம். பாடல்களை
இவர்கள் எழுதிவைத்துக் கொள்வதில்லை, ஒருவர் பாடும்போது அதைக்கேட்டு திருப்பிப்பாடி மனதில்
பதியவைத்துக் கொள்கிறார்கள்.
குழந்தை பிறந்து பேர்வைக்கும் சடங்கில் ஆண்குழந்தையாக
இருந்தால் கம்பெட்ராயன் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் ‘மாதி’ என்றும் பெயர்வைத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். பிறகு
வேறு பெயர் வைத்துக்கொள்ளலாம். ஆண்கள் பெயர்கள் கட்டன், பெல்லன், தேத்தன், தெக்கன், மனக்காளன், முன்டன், கவுந்தன், மெட்டன் .... என்றும் பெண்கள் பெயர்கள் மாதி, மாங்கி, நீஜி, தேதி, புய்யி, பென்னிஜி, தன்தி என்றும் அமைகின்றன.
ஆனால் இதெல்லாம் போன
தலைமுறைவரைதான் இப்போது பெயர்கள் நீங்கள்தான் கவனித்திருப்பீர்களே, கௌசிக், சிவப்பிhpயா, விஷ்னுபிhpயா, ...என்றுதான் வைக்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாக பெயர்கள் மாற மாற அவர்களின் தனித் தன்மையான
அடையாளங்களும் மாறிவரத்தானே செய்யும்.
ஆண்கள் இடுப்பில் வேட்டியைக் கட்டிக்கொண்டும் போர்வை
போன்ற துணியால் உடலின் மேற்பகுதியை மூடிக்கொள்கின்றனர். வேட்டியை ‘முண்டு’ என்று அழைக்கின்றனர். பெண்கள் உடல்முழுவதுக்கும்
வெள்ளைத் துணியால் மூடி மேல்உடை இடுப்பிலிருந்து நழுவாமல் இருக்க கயிறு கட்டிக்
கொள்கின்றனர். ஆண்கள் கடுக்கண் அணிந்து கொள்கின்றனர். பெண்கள் பச்சைக் குத்திக்
கொள்கின்றனர். வெளியில் போகும்போது பலர் பேண்ட், சட்டை ,சேலைப் போன்ற உடைகளை அணிகிறார்கள். ஆண்களும், பெண்களும் போர்த்திக் கொள்ளும் வெள்ளை துணி
பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அதிலுள்ள நுணுக்கமான வேறுபாட்டைக் காண்பித்தார்கள்.
இவர்கள் மேலே போர்த்திக் கொள்ளும் துணிக்கு ‘வராடு’ என்று பெயராம், இந்தவராடில் கோடு போடப்பட்டிருக்கும். அதில் ஒரு கோடு
இருந்தால் அது ஆண்களுக்கானதாம்,இரண்டுகோடுகள் இருந்தால் அது பெண்களுக்கானதாம்.
தினசரி வேலைகளில் மூழ்கி வேலைபளுவில் சிக்கித் தவிக்கும்போது இத்தகைய பயணங்கள் நமக்கு உற்சாகமூட்டுபவைகளாக அமைகின்றன. அதுதவிர வெந்ததைத் தின்போம் விதிவந்தால் வீழ்வோம் என்று ஒரே இடத்தில் இருந்து கொண்டு காலத்தை வீணாக்க எனக்கும் விருப்பமில்லை!.
பயணம் என்ற ஒற்றைச் சொல்லில்தான் இவ்வுலகமே
இயங்குகிறது. இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி பயணம்
செய்கிறது. இவ்வுலகத்திலிருக்கும் நாமோ அதனுள்ளேயே பயணம் செய்கிறோம். ஆக நாம்
எல்லோரும் எப்போதும் பயணம் செய்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்த தெருவுக்குப்
போவதுகூட பயணம்தான்.
இந்த உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பயணங்களின் மூலமாக
நடந்தவையே.
ஊலகில் எங்கோ தோன்றிய மனத இனம் பயணங்களால்தான் உலகம் முழுவதும் விரவமுடிந்தது. அத்தகைய பயணங்களின்போது ஏற்பட்ட சவால்களினால்தான் பரிணாம வளர்ச்சியடைந்து இன்று நாகரீக மனிதனாக வலம்வர முடிகிறது.
ஊலகில் எங்கோ தோன்றிய மனத இனம் பயணங்களால்தான் உலகம் முழுவதும் விரவமுடிந்தது. அத்தகைய பயணங்களின்போது ஏற்பட்ட சவால்களினால்தான் பரிணாம வளர்ச்சியடைந்து இன்று நாகரீக மனிதனாக வலம்வர முடிகிறது.
உங்கள்
கருத்துகள் மற்றும் கேள்விகள் வரவேற்க்கப் படுகின்றன.
பயணங்கள்
முடிவதில்லை...
பாலா
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் வாழும் கோத்தர்கள் என அழைக்கப்படும் இப்பழங்குடி இன மக்கள் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும் குந்தா கோத்தகிரி, கீழ்க்கோத்தகிரி, திருச்சுக்கடி கோத்தகிரி, சோலூர் கோத்தகிரி, புதுக்கோத்தகிரி, கூடலூர் கோத்தகிரி, கொல்லிமலை கோத்தகிரி ஆகிய ஏழு பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றை ஏழு நாடுகள் என்றும் குந்தா கோத்தகிரியை மேல்நாடு என்றும் கீழ்கோத்தகிரியை கீழ்நாடு என்றும் அழைக்கிறார்கள். இவர்களின் தலைமையிடமாக மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி கருதப்படுகிறது. கோத்தகிரி என்ற பெயரே இவர்களின் பெயரிலிருந்துதான் வந்ததாகக் கூறுகிறார்கள், அதாவது கோத்தர்கள் வாழும் மலையின் பெயர் கோத்தகிரி ஆனதாம்.இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை ‘கோகால்’ என்றும் வீட்டை ‘பய்’ என்றும் தெருவை ‘கேரி' என்றும் அவர்களின் 'கோ' மொழியில் அழைக்கின்றனர். இவர்களின் மக்கள்தொகை இரண்டாயிரத்து ஐநூறுதான் இருக்கும். கோத்தர்கள் சிறந்த கைவினைஞர்கள். இவர்கள் மட்பாண்டங்கள் செய்தல், தங்கம் வெள்ளி ஆபரணங்களை வடிவமைத்தல், கயிரு திரித்தல், இரும்புக் கருவிகள் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்களாக உள்ளனர். ஆனால் இப்போது பல வேலைகளும் செய்கின்றனர்.
இவர்கள் இயற்கையை வழிபடுகிறார்கள் இவர்களின் ஏழுகுழுக்களில் ஆறு குழுக்களில் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் திறக்கப்படும். தலைமையிடமாக விளங்கும் குந்தா கோத்தகிரி கோயில் மட்டும் ஆண்டுக்கு இரண்டுமறை அறுவடை நேரத்திலும் உழவு நேரத்திலும் திறக்கப்பட்டு திருவிழா நடத்தப்படுகிறது.
குந்தா கோத்தகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் "சேலமரம்" என அழைக்கப்படும் பெரிய மரம் உள்ளது.
இந்த சேலமரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர். இம்மரத்தின் அடிவேரை ஒட்டிய தண்டுப்பகுதி மட்டும் சுமார் 40 மீட்டர் அகலம் இருக்கிறது. இவ்வூரை இவர்களின் முன்னோர்கள் அமைத்தபோது முதலில் கோயில் அமைப்பதற்காக மண்ணை தோண்டியபோது முதலில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் என பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் பத்துத் தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளதால் இம்மரத்தின் வயது பல நூறு ஆண்டுகள் இருக்குமென கூறுகிறார்கள். இம்மரத்தை வெளிநாட்டினர்களும் வந்து ஆய்வு செய்திருக்கிறார்களாம்.
இந்த சேலமரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர். இம்மரத்தின் அடிவேரை ஒட்டிய தண்டுப்பகுதி மட்டும் சுமார் 40 மீட்டர் அகலம் இருக்கிறது. இவ்வூரை இவர்களின் முன்னோர்கள் அமைத்தபோது முதலில் கோயில் அமைப்பதற்காக மண்ணை தோண்டியபோது முதலில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் என பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் பத்துத் தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளதால் இம்மரத்தின் வயது பல நூறு ஆண்டுகள் இருக்குமென கூறுகிறார்கள். இம்மரத்தை வெளிநாட்டினர்களும் வந்து ஆய்வு செய்திருக்கிறார்களாம்.
இவர்களின் குல தெய்வமான அய்னோர் அம்னோர் பண்டிகையின், ஒரு பகுதியாக, கிராம பெண்கள், அவர்களின் குல தெய்வ நிலத்தில் இருந்து மட்டும், களி மண்ணை எடுத்து வந்து, பானைகளை செய்வர். ஆண்கள் மட்டும் அங்குள்ள ஆற்றில் குளித்து, குல தெய்வ கோவிலில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்பின்பு, புதிய மண்பானையில் சாமை தானியத்தில் பொங்கல் செய்து, குல தெய்வத்திற்கு படையல் வைப்பது வழிப்பாட்டின் சிறப்பு அம்சமாகும்.
பல நாட்கள் நடக்கும் திருவிழாவில், சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் நடனமாடுவர். இதன், இசை மற்றும் நடனம் வியக்க வைப்பதாக இருக்கும். இதில், சிறப்பம்சமாக, ஆண்கள் சிலர் மட்டும் ஆட்குபஸ் என்ற உடையை அணிந்து நடனமாடுவர்.
இதனை பார்க்க வரும் உள்ளூர் மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியப்படையாமல் திரும்ப முடியாது. அய்யனோர்அம்மனோர் பண்டிகையின் தொடர்ச்சியாக, கோத்தரின மக்களால் அழைக்கப்படும் கில்லி பண்டிகையை மிகவும் குதூகலமாக நடப்பது வழக்கம். இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோத்தரின மக்களும், இதனை பார்ப்பதற்காக உள்ளூர் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோக்கால் கிராமத்துக்கு வருவர்.



No comments:
Post a Comment