அண்மையில் கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடியில் இருக்கும் சூரியனார் கோயிலுக்குப் போயிருந்தேன்.
சூரியனார் கோயில் கும்பகோணத்திருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே சூரிய பகவானுக்கு கோயில்கள் உண்டு. ஒன்று வடக்கே ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் கோயில். மற்றொன்று கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி சூரியனார் கோயில் ஆகும். இப்போது புதுச்சேரியில் ஒன்று கட்டிவருகிறார்கள். கோனார்க் கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. ஆனால் இங்கு உண்டு.
நமது சூரிய குடும்பத்தின் மையத்தில் இருப்பது சூரியன். இச்சூரியன்தான் அனைத்துக் கிரகங்களையும் இயக்குகிறது. இப்பூமியிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் சக்தியளிக்கிறது. எட்டுக் கோள்களிளும் பெரியது வியாழன் எனும் குருவாகும். ஆற்றல் மிகுந்த சூரியனின் உக்கிரத்தை குறைத்து சாந்தப்படுத்துவதுபோல மேற்கு நோக்கிய சூரியனாரை கிழக்கு நோக்கியபடி குருபகவான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இக்கோயிலைப்பற்றி இங்கு இருப்பவர்களிடம் கேட்டோம். சங்ககாலத்தில் பூம்புகாரில் ஒரு சூரியனார் கோயில், உச்சிக்கிழான் கோட்டம் என்ற பெயரில் இருந்ததாம். அது கடலின் சீற்றத்தால் அழிந்து போனதாம். அக்காலத்தில் இத்தலம் எருக்கங்காடாக இருந்ததாம், பின்னர் காடுகள் அழிந்து பிராணநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ள மேற்குப் பகுதி திருமங்கலக்குடி என்றும் சூரியன் நவநாயகர்களுடன் அமைந்துள்ள வடகிழக்குப் பகுதி சூரியனார் கோயில் என்றும் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.
இக்கோயிலுக்குத் தொடர்புடைய மேலும் ஒரு புராணக் கதையைக் கூறுகிறார்கள். தொழுநோய் தோஷத்தைப் போக்கிக் கொள்ள நவநாயகர்கள் தவம் செய்ய வந்தபோது இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில் அவர்கள் நீராடித் தவம் புரிந்ததால், அத்தீர்த்தங்கள் நவநாயகர்களின் பெயர் பெற்றனவாம். அவற்றுள் ஒன்றான “சூரிய புஷ்கரணி” சூரியன் நீராடிய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறதாம்.
நவக்கிரக கடவுள்கள் இத்தலத்தில் தவம் செய்யத் தொடங்கும்போது, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்களாம். அவர்களின் தோஷத்தை இவ்விநாயகர் தீர்த்ததால் இவருக்கு கோள் தீர்த்த விநாயகர் என்று பெயர் வந்ததாம்.
கோயிலின் கருவறையில் மேற்கு முகமாக, நின்ற கோலத்தில் சூரியபகவான் காட்சியளிக்கிறார். இவருக்கு இடதுபுறத்தில் உஷா தேவியும், வலதுபுறத்தில் சாயா தேவியும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தி முகத்தில் புன்முருவலோடுக் காட்சி தரும் சூரியபகவானை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளதே!
சூரியனுக்கு வாகனம் குதிரை எனவே அவருக்கு எதிரே சிவனுக்கு முன்பாக நந்தி உள்ளதைப்போல குதிரை உள்ளது. சூரியனாருக்கு அர்ச்சனை செய்யும்போது அவருக்குப் பிடித்தமான சர்கரைப் பொங்கலையும் படைக்கிறார்கள். சிலர் தங்கள் வயலில் விளைந்தவற்றைக் காணிக்கையாக அளிப்பதையும், குழந்தை வரம் வேண்டுவோர் தூளிக்கட்டியும் வேண்டிக் கொள்கின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சூரியனாருக்கு விசேஷ ஆராதனைகள் நடக்கிறது.
நாங்கள் போயிருந்தபோது உற்சவருக்கு சிறப்புபூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்குமாம். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த விசேஷ நாள். எனவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், ஞாயிறுதோறும் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
சூரியனின் உக்கிரத்தைத் தணிக்க சூரியனை நோக்கியபடி கிழக்கு முகமாக மகா மண்டபத்தில் குரு காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே தென் மேற்கில் சனீஸ்வரனும், தெற்கில் புதனும், வடகிழக்கில் கேதுவும். வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும், தென் கிழக்கில் செவ்வாயும், கிழக்கில் சந்திரனும், தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் ஏனைய எட்டு கிரகக் கோயில்கள் அமைந்துள்ளமை இத்தலத்தின் சிறப்பாகும்.
இக்கோயிலில் எப்படி சாமி கும்பிட வேண்டும் என்று எழுதிப் போட்டிருக்கிறார்கள். முதலில் ராஜ கோபுரத்துக்கு வெளியே உள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் கோபுர தரிசனம் செய்துவிட்டு, கோள்தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டுமாம். அதன் பின்னர் நவக்கிரக உற்சவ மூர்த்திகளைத் தரிசனம் செய்ய வேண்டுமாம். அதற்குப் பின்னர் காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மனை வழிபட வேண்டுமாம். பின்னர் சூரியனாரைத் தரிசிக்க வேண்டுமாம். அடுத்து பின் திரும்பி நின்று குரு பகவானை வழிபட வேண்டுமாம். அடுத்து கிழக்கு முகமாக சனீஸ்வரர் உள்பட கிரக நாயகர்களை வழிபட வேண்டுமாம். பின்னர் கொடி மரத்தை விழுந்து வணங்கி, பின் அங்கிருந்து வடகிழக்கு தெற்குப் பிரகாரம் வழியாக ஒன்பது முறை வலம் வரவேண்டுமாம்.
இக்கோயிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலசங்களையும் கொண்டிருக்கிறது. இக்கோயிலின் முன் புஷ்கரனித் தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன. கோயில் கோபுரம் முழுவதும் அழகழகான சிற்பங்கள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோயில் குலோத்துங்கச் சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி. 118) கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. முதலில் இக்கோயில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோயில் என்று மாறியதாம்.
நன்றி
...பாலா
(சூரியனார் படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)
(SUN TEMPLE near Kumbakonam)




No comments:
Post a Comment