தாண்டிக்குடியிலிருக்கும் பெருங்கற்கால கற்திட்டைகளையும் கோம்பைக்காட்டிலிருக்கும் பாறை ஓவியங்களையும் பார்த்துவிடுவோமேயென்று தாண்டிக்குடி போயிருந்தேன்.
பெருங்கற்கால மக்கள் என்றால் யார்?
தங்களது இனத்தில் இறந்த முன்னோர்களின் நினைவாக பெரியக் கற்களைக்கொண்டு சடங்குககள் செய்வதற்காக ஏற்படுத்தப்படும் நினைவிடங்கள் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் எனப்படுகின்றன. இது பெருங்கற்காலப் பண்பாடு என்றும் இக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பெருங்கற்கால மக்கள் எனவும் அழைப்பர். இத்தகைய அமைப்புகள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனவும் அழைப்பர். இக்காலம் பொ.ஆ.மு 2000 இலிருந்து பொ.ஆ.மு 500 வரையிலான ஒரு பகுதியாக வரையறுக்கின்றனர்.
இக் காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புகள் கற்பதுக்கைகள் (cist), கல்திட்டைகள் (dolmen), கற்குவை (cairn), பரல் உயர் பதுக்கை (cairn circle), தொப்பிக்கல் (hood stone), குடைக்கல் (umbrella stone), நெடுநிலை நடுகல் (menhir) எனப் பல வகைகளாக உள்ளன.
இங்கு இருப்பவைக் கல்திட்டைகள் ஆகும்.
கல்திட்டைகள் எவ்வாறு இருக்கும்?
கல்திட்டைகள் பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தானக் கல்பலகைகளையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரியத் தட்டையானக் கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும்.
கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறுப் பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் காணப்பட்டதினால் இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.
இதேபோல மல்லச்சந்திரத்தில் இயற்கையாக அமைந்த விரிந்த கல்பாறையின் மேல் நான்குப் பக்கங்களிலும் நான்கு பெரியக் கல்பலகைகளை ஒன்றுடன் ஒன்று தாங்கி நிற்கின்ற அமைப்பில் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவற்றில் இடுதுளைகளும் காணப்படுவது சிறப்பானதாகும்.
எதற்கு இந்த இடுதுளை?
இறந்தவர்களின் ஆன்மா உள்ளேயிருந்து வெளியே போவதற்கும் வெளியே சென்று விட்டு உள்ளே திரும்புவதற்குமான வழியே அந்த இடுதுளை என்ற ஒரு கருத்தும் அறிஞர்களிடம் உள்ளது. உடல் அழியக்கூடியது, ஆன்மா அழியாதது என்கிற நம்பிக்கை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களிடையே நிலவியிருந்ததை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
இறந்தவர்களுக்கான சடங்குககள் செய்யும்போது சடங்குகளுக்கு தேவையானப் பொருட்களை வைப்பதற்கான ஏற்பாடு என்றும் கருத்து உள்ளது.
இது போன்ற கல்திட்டைகள் நம் நாட்டில் மட்டுமன்றி மேலை நாடுகளிலும் உள்ளன. இவை பற்றி விரிவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த மானிடவியல் ஆய்வார் ப்ரேசர் என்பவர் பன்னிரண்டு தொகுதிகளாகப் புத்தகங்களை எழுதிக் குவித்துள்ளார் .
மல்லசந்திரம் கற்கிடைப்பகுதி ஒரு மலைமீது அமைந்துள்ளது. இது பண்டைய ஈமச்சின்னங்களின் காடு என்றே சொல்லலாம். தாழிகள், ஈமப்பேழைகள் எனப் பண்டைய மட்பாண்டங்களில் எத்தனை விதங்கள் உண்டோ அத்தனையும் இந்தப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கிடைக்கின்றன. எகிப்து பிரமிடுகள் போன்றுக் காப்பாற்றப்பட வேண்டிய முக்கியமான பகுதி இது.
இம்மலையில் மட்டுமல்லாது அடுத்தடுத்த மலைகளிலும் இதேபோன்ற சிதைக்கப்பட்ட கல்திட்டைகள் பரிதாபமாக நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவை கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையிலேயே உள்ளன. இருப்பதையாவது நமது வருங்காலச் சந்ததிகளுக்குப் பாதுகாக்கவேண்டிய கடமை நமக்குள்ளது. இல்லையெனில் அயல்நாட்டினரால் நமக்கு அடையாளம் காட்டப்பட்டு, நம்மாலேயே அழிக்கப்பட்டு, அதனால் நாம், வரலாற்றில் இடமின்றி நிற்கும் பரிதாப நிலையைச் சந்திக்க வேண்டிவரும் என்பதில் ஐயமில்லை.
அடுத்து கோம்பைக்காடு பாறைஓவியங்களைப் பார்க்க கிளம்பினோம்.
நன்றி
பாலா



No comments:
Post a Comment