"அத்திரப்பாக்கம்"
மனித மூதாதையர் தமிழ்நாட்டில் பூண்டி ஏரிக்கருகில் வாழ்ந்திருக்கின்றனர், அவர்கள் வாழ்ந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் கிளம்ப நம்முடன் தமிழகன் ஐயா, விரராகவன் ஐயா, மங்கை வீரராகவன், சுகவனமுருகன் ஐயா ஆகியோர் இணைந்துகொள்ள மூதாதயரைத்தேடிய நமதுப் பயணம் தொடங்கியது.
ராபட்புரூஸ் பூட் என்ற இங்கிலாந்து நாட்டு நிலவியல் அறிஞர்1863 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி ஏரிக்கருகிலுள்ள அத்திரப்பாக்கம்,பரிக்குளம், வடமதுரை முதலிய பகுதிகளில் மனிதமூதாதையர் வாழ்ந்ததற்கான சுவடுகளைக் கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்தினார். இவரது முதல் ஆய்வு சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இவர், பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகில் அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி , அதன் சுற்றுப் பகுதி முதலிய இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவர் கண்டறிந்த 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில் 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சேர்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தின் சிலபகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளையும் கண்டெடுத்து அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்ததை உறுதிப்படுத்தினார். கற்கருவிகளை அதன் அமைப்பு தொழில் நுட்பங்களைக் கொண்டு வகைப்படுத்தினார். இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இருந்த நீண்ட இடைவெளியை விளக்கினார். தமிழ்நாட்டில் மட்டுல்லாமல் மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இவர் இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இந்திய நாட்டின் கால வரலாற்றை லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனவும், பனியுகக் காலத்திலேயே இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களையும் வெளிக்கொணர்ந்தார்.
இவர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இப்பகுதிகளில் பூமியின் மேற்பரப்பிலேயே நிறைய தென்படுகின்றன. கற்கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு அவை அதிக அளவில் காணப்படும் பகுதியின் பெயராலேயே அழைப்பது மரபு. கற்கருவிகளின் வகைகளுக்கு பெயர்சூட்ட, அத்திரப்பாக்கம், குடியம், பரிக்குளம் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள் ஒரேவிதமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயய்ப்பட்டுள்ளன,மேலும் இப்பகுதிகள் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையின் அன்றைய பெயரான மெட்ராஸ் என்பதைக்கொண்டு ‘மெட்ராஸ் இன்டஸ்ட்ரி’ (சென்னை தொழிற்கூடம்) கருவிகள் என அறிஞர்கள் பெயர்சூட்டினர்.இதனை ‘சென்னைக் கைக் கோடரிப் பண்பாடு எனவும் கூறினர்.
இங்குக் கிடைத்த பழையக் கற்காலக் கருவிகள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் செதுக்கப்படிட்டிருந்தன. இதயவடிவம், வட்டவடிவம், நீள்வட்ட வடிவம், ஈட்டிமுனை வடிவம் உட்பட பல கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் கூர்மையான முனைகளும்,பக்கவாட்டின் முனைகளும் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்காக நுண்ணிய சில்லுகளைப் பெயர்த்துள்ளது நன்கு தெரிகிறது. இவை அனைத்தும் சென்னை கைக்கோடரிமரபைச் சார்ந்தவை.
1964ஆம் ஆண்டு இந்தியப் பரப்பாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் நான்கு மண்ணடுக்குகள் இருப்பதைக் கண்டறிந்தனர். கற்கால மனிதர்களின் எச்சங்கள் இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் உலகப் புகழ்பெற்ற பழைய கற்காலத் தடயங்களைக் கொண்ட பகுதியாக அத்திரம்பாக்கம் திகழ்கிறது. நம்மை இங்கு அழைத்துவந்த இராஜேந்திரனும் ஜெயச்சந்திரனும், தற்போது இப்பகுதியில் ஆய்ந்து வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆய்வாளர் சாந்தி பப்பு அவர்களுக்கு, உதவியிருக்கிறார்கள். ஆய்வு நடந்த இடங்களையும் மேற்பரப்பில் காணப்படும் கல் ஆயுதங்களையும் பார்த்தோம்.
"குடியம் குகைககள்"
முதல் நாள் அத்திரப்பாக்கத்தில் நிறைய தூரம் நடந்திருந்தாலும் வெயில் வருவதற்கு முன்பாகவே மலையேறிவிட்டவேண்டும் என்ற எண்ணத்தில் காலை சீக்கிரமாகவே கிளம்பிவிடோம். நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்ல இராஜேந்திரன் அவரது ஊரான கிருஷ்ணாபுத்தில் நமக்காக அவர்கள் வீட்டில் தயாரித்து எடுத்துவந்துள்ள காலை உணவுடன் தயாராக இருந்தார். திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைச் செல்லும் சாலையில் சீத்தஞ்சேரி என்ற இடத்தில் இடப்பக்கம் திரும்பி இரண்டு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து பூண்டி ஏரியை அடைந்து வழியில் இராஜேந்திரனை வண்டியில் ஏற்றிக்கொண்டு குடியம் நோக்கிப் பபயணித்தோம்.
இருபது நிமிட பயணத்தில் 'குடியம்' எனும் சிற்றூரை அடைந்தோம். குடியம் சிறிய ஊர். சுமார் ஐம்பது வீடுகள்தான் இருக்கும். மலைக்குப் போகும் வழியில் இருபது வீடுகளில் இருளர்கள் வசிக்கிறார்கள். எங்களை வரவேற்றுக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். அவர்களின் வீடு அழகாக இருந்தது. சுமார் ஏழு முதல் ஒன்பது அடிவரை விட்டம் கொண்ட வட்டவடிவமான மண்சுவற்றினால் கட்டப்பட்டு மேலே கூம்பு வடிவ கூறை வேயப்பட்டிருந்தது. இதனை குச்சிவீடு என்கின்றனர். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மலையில் ஏறத்தொடங்கினோம்.
லேசான சரிவுடன் கூடிய சிறிய பாதை எங்களை வழிநடத்தியது.
பாதை நெடுகிலும் உருண்டையான கற்கள் கிடந்தன. மலையிலிருந்து உருண்டுவரும் கற்கல் உடைந்து துண்டுகளாக மாறியும், மேலிருந்து கீழே வரும் நீரினால் அடித்தது வரப்படுவதாலும் வழியெங்கும் இதுபோன்ற கற்களைக் காணமுடிகிறது. உயரமான புதர்கள் நிறைந்தக் காடு, ஒற்றையடிப் பாதையில் ஆங்காங்கே இருக்கும் முந்திரி மரங்களின் வழியே நடந்தோம். ஊரிலிருந்துக் கிளம்பும்போதே நம்கூடவே வழிகாட்டியாக 'புரூஸ்' எனும் நாய் வந்துக்கொண்டிருந்தது.
காலைநேரம் என்றாலும் வெயில் கடுமையாகவே இருந்தது., ஆங்காங்கே தென்படும் சிறிய நிழல்களில் இளைப்பாறுவதும், தொடர்வதுமாக நகர்ந்துக் கொண்டிருந்தது எங்கள் பயணம். தலையில் துணியைப் போட்டுக்கொண்டு நடந்த எனக்கு என் நிழலே துணையாக வரவில்லை, கால்களுக்கிடையே மறைந்துகொண்டது.
பாதையெல்லாம் உருண்டையான கூழாங்கற்கள் நம்மை வழிநடத்திச் சென்றன. இக்கற்களுக்கிடையே பழங்கற்கால ஆயுதங்கள் ஆங்காங்கே கிடைக்கின்றன. கற்களைத் தங்களுக்குத் தேவைப்படும் வடிவில் வேறொரு கல்லை வைத்து தொடர்ந்துத் தட்டுவதன் மூலம் உருவாக்கிக் கொள்வார்கள். இத்தகைய ஆயுதங்களை நேரடியாக கையிலேந்தியோ, மரக்கழியின் முனையில் கட்டியோ வேட்டைக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
உலகின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கருவிகள் ஓரேமாதிரியாக உள்ளது வியப்பானது.
இக்கருவிகள் செய்யப்படும் முறையை வைத்து அவற்றின் வகைகளைப் பிரிக்கிறார்கள். இங்குக் கிடைக்கும் கருவிகள் "சென்னை மரபை"ச் சேர்ந்தவை. இதுபோல் சோன் பள்ளத்தாக்கில் கிடைப்பவை "சோன் மரபை"ச் சேர்ந்தவை. இப்பகுதியில் இக்ககருவிகள் அதிக அளவில் கண்டெடுக்கப்படுவதால் இது கற்கருவிகள் செய்யப்படும் தொழிற்க்கூடமாக இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இக்கருவிகளைச் செய்வதற்கு இவர்கள் குவார்ட்சைட் வகை கற்களை பயன்படுத்ததியிருக்கிறார்கள். அதனால் இவர்களை "குவார்ட்சைட் மக்கள்" அதாவதுப் "படிகக்கல் மனிதர்கள்" என்றும் அழைப்பர்."
போகும் வழியில் ஒரு இடத்தில் பெரிய உருண்டையான பாறை கடலை உருண்டை வடிவில், கடலை உருண்டையில் எவ்வாறு கடலை ஒட்டிக்கொண்டிருக்குமோ அவ்வாறு உருண்டையான கற்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.
( இது CONGLOMERATE எனப்படும் படிவப்பாறை. (SEDIMENTARY ROCK) .தீக்குழம்பாய் சுழன்று கொண்டிருந்த புவிப்பந்து, குளிரத் தொடங்கியது. கெட்டிப் பட்டது. பாறைகள் தோன்றின. இவைகளே தீப் பாறைகள் அல்லது அழற் பாறைகள்- ஆங்கிலத்தில் IGNEOUS ROCKS.
தொடர்ந்து நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களால், பூமியின் மேற்பரபில்லுள்ள பாறைகள் சிதைவுறுகின்றன. இப்படித்தான் மண் உருவாகிறது. இந்த சிதைவுகள் காற்று, மழை மற்றும் ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்டு பெரிய ஏரி – கடல் போன்ற நீர் நிலைகளில் படிகின்றன. இந்த நிகழ்வு லட்சக்கணக்கான-கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்போது பல நூறு மீட்டர்கள் கனத்திற்கு படிவங்கள் படிந்துவிடுகின்றன. இதனால் அடிப்பகுதியில் உள்ள படிவங்களில் அழுத்தமும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவும் இன்ன பிற புவியியல் மாற்றங்களாலும் படிவங்கள் பாறைகளாகக் கெட்டிப்பட்டு “படிவப் பாறைகள்” ( SEDIMENTARY ROCKS) உருவாகின்றன. படிவப் பாறைகள் உருவாகும் போது அந்த நீர்நிலைகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்களும் (சிப்பிகள்-மீன்கள்-நண்டுகள்–நீ ர்வாழ் தாவரங்கள் போன்றவை), ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரினங்கள் மற்றும் மரம் செடி கொடிகளின் மிச்சங்களும் படிவங்களோடு சேர்ந்து படிந்து மடிந்து கல்லாய் சமைந்து விடுகின்றன. இப்படிக் கல்லாய்ச்சமைந்த பழங்காலத்து உயிரினங்களின் மிச்சங்களும்-எச்சங்களுமே ஆங்கிலத்தில் ‘பாசில்ஸ்’(fossils) என்று அழைக்கப்படுகின்றன—தமிழில் “தொல்லுயிரெச்சங்கள்”. இவை பற்றிய கல்வி- ‘தொல்லுயிரியல்’- ‘Palaeontology.’
பொதுவாகத் தொல்லுயிரெச்சங்கள் படிவப் பாறைகளிலேயே காணப்படுகின்றன. தமிழகத்தின் கிழக்குப் பகுதிகளில் படிவப் பாறைகள் உள்ளன. தொல்மர எச்சங்கள் திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல்இலை எச்சங்கள் திருப்பெரும்புதூர், அரியலூர், சிவகங்கை பகுதிகளிலும், கடல்வாழ் மெல்லுயிரிகளின் எச்சங்கள் அரியலூர் பகுதிகளிலும், டைனோசார் எச்சங்கள் அரியலூர் பகுதியிலும் கிடைக்கின்றன.
தொடர்ந்து நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களால், பூமியின் மேற்பரபில்லுள்ள பாறைகள் சிதைவுறுகின்றன. இப்படித்தான் மண் உருவாகிறது. இந்த சிதைவுகள் காற்று, மழை மற்றும் ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்டு பெரிய ஏரி – கடல் போன்ற நீர் நிலைகளில் படிகின்றன. இந்த நிகழ்வு லட்சக்கணக்கான-கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்போது பல நூறு மீட்டர்கள் கனத்திற்கு படிவங்கள் படிந்துவிடுகின்றன. இதனால் அடிப்பகுதியில் உள்ள படிவங்களில் அழுத்தமும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவும் இன்ன பிற புவியியல் மாற்றங்களாலும் படிவங்கள் பாறைகளாகக் கெட்டிப்பட்டு “படிவப் பாறைகள்” ( SEDIMENTARY ROCKS) உருவாகின்றன. படிவப் பாறைகள் உருவாகும் போது அந்த நீர்நிலைகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்களும் (சிப்பிகள்-மீன்கள்-நண்டுகள்–நீ
பொதுவாகத் தொல்லுயிரெச்சங்கள் படிவப் பாறைகளிலேயே காணப்படுகின்றன. தமிழகத்தின் கிழக்குப் பகுதிகளில் படிவப் பாறைகள் உள்ளன. தொல்மர எச்சங்கள் திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல்இலை எச்சங்கள் திருப்பெரும்புதூர், அரியலூர், சிவகங்கை பகுதிகளிலும், கடல்வாழ் மெல்லுயிரிகளின் எச்சங்கள் அரியலூர் பகுதிகளிலும், டைனோசார் எச்சங்கள் அரியலூர் பகுதியிலும் கிடைக்கின்றன.
_ சிங்கநெஞ்சம் சம்மந்தம்)
நேராகச் செல்லும் பாதையில் பிரிந்தது இடப்புறம் செல்லும் பாதையில் சிறியக் குகையும் நேராகச்சென்றால் பெரியக் குகையும் இருக்கிறது. நாங்கள் நேராக பெரியகுகைக்குச் செல்லும் பாதையில் சென்றோம். ஒரு வளைவில் திரும்பினால் திடீரென கண்முன்னே விரிகிறது அந்தப்பெரிய குகை. இலட்சக்கணக்கான ஆண்டுகளை கடந்த அந்தக்குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. மனித இனத்தின் முன்னோடிககள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, ஒரு இனம் புரியாத பரவசம். ஒரு கணம் கண்முன் நம் மூதாதையர்கள் நிழலாடினார்கள். அவர்கள் வரவேற்பது போலவும்,
'வாங்கடா ... பேராண்டிகளா! என்ன இப்பத்தான் இங்கவர நேரங்கெடச்சதா?'
எனக் கேட்பது போலவும் தோன்றியது.
குகையை நெருங்கும்போது இதமான குளிர்ந்த காற்று களைப்புகளை மறக்கடித்தது. கண்களை மூடி ஒரு கணம் இலட்சம் ஆண்டுகள் வேகமாகப் பின்னோக்கிப் பயணித்தேன். வேட்டையாடுவதையே தொழிலாக கொண்ட அவர்கள் வேட்டைக்காக கற்கருவிகளைப் செய்துப் பயண்படுத்தியிருக்கிறார்கள்.
மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்து குளிரிலிருந்துத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.
குகையின் பாறைகளில் ஒட்டிக்கொண்டிருந்த உருண்டை கற்கள் மண்டைஓடு அளவில் சிறிதும், பெரிதுமாக இருப்பதைப் பார்க்கும்போது அங்கு வாழ்ந்தவர்கள் பாறைச்சுவரின் வழியாக நம்மையே சோகமாகப் பார்ப்பது போலிருந்தது.
அந்தக் குகையின் கம்பீரமும், காட்டிற்கே உரிய அந்த மௌனமும் எங்களைப் பபரவசப்படுத்தியது. வெளியே வெயில் இருந்தாலும் இந்தக் குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 300 பேர் அமரக் கூடிய அளவிற்கு இடமிருந்தது. மூன்று புறமும் பெரும் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடமாக இதனைத் தேர்வுச் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்பகுதி மக்கள் இக்குகையில் மண்ணாச்சி அம்மன் எனும் சாமியின் சிலையை வைத்து வழிபாடு செய்கின்றனர். குகையின் விளிம்பிற்குக் கீழே நேரேத்திக்கடனுக்கு வைத்த யானை, குதிரை சுடுமண் சிற்பங்களுப், மனிதத்தலை சுடுமண் சிற்பங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
நீண்ட பெருமூச்சுடன் எழுந்துக்கொண்டோம்.
சிறியக்குகைக்கு வந்த வழியே சற்றுத்தொலைவில் வலப்புறம் திரும்பி சிறிய சரிவின் மேலே ஏறிப் போனோம். பெயர்தான் சிறியகுகை ஆனால் பெரியது, முந்தயக் குகையைவிட சற்றுச் சிறியது. குகையின் மேல்பகுதிக்குச் சென்றுப் பார்க்கும்போது அப்பகுதியின் முழுகாட்சியும் தெரிகிறது. பசுமையாகத் தென்படும் மலைகளுக்கிடையே அடர்த்தியான காட்டுப்பகுதி அமைதியாகக் காட்சியளிக்கிறது. இம்மலைத் தொடர் 'அல்லி குல்லி' மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது.
இந்த மலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு 'கொற்றலையாறு' ஓடியது, இந்த ஆற்றங்கரையில்தான் இம்மக்கள் வாழ்ந்துள்ளனர்.
கொற்றலையாறு , இன்று வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் பாலாற்றிலிருந்து பிரிந்து கிளையாறாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. அந்த ஆறு இப்போது ‘கொசத்தலை’ என்று அழைக்கப்படுகிறது. சிறிய ஓய்வுக்குப் பின் மலையிலிருந்து இறங்க ஆரப்பித்தோம்.
கொற்றலையாறு , இன்று வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் பாலாற்றிலிருந்து பிரிந்து கிளையாறாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. அந்த ஆறு இப்போது ‘கொசத்தலை’ என்று அழைக்கப்படுகிறது. சிறிய ஓய்வுக்குப் பின் மலையிலிருந்து இறங்க ஆரப்பித்தோம்.
மீண்டும் அடுத்தப் பயணத்தில் சந்திப்போம்.
நன்றி
பாலா பாரதி
No comments:
Post a Comment