தமிழ்நாடு-கேரளா
எல்லையில் உள்ள கண்ணகிக் கோயிலில் வருடத்திற்கு ஒருநாள் சித்திராப்பௌர்ணமி அன்று
மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் கண்ணகி விழாவிற்காக திருச்சியிலிருந்து
நான்கு பெண்கள் உட்பட பன்னிரண்டு பேர் கிளம்பிப்போய் கொண்டிருக்கிறோம்.21-04-2016
அன்று தேனி மாவட்டம் கம்பத்தில் தங்கி மறுநாள் காலையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள
திட்டமிட்டுப் போய்கொண்டிருக்கிறோம்.
நமது கதை, 1800
ஆண்டுகளுக்கு முன் அதாவது இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் சித்திரை மாதத்தில்
துவங்குகிறது.
சேரன்செங்குட்டுவன் தனது வழக்கமான நிகழ்வான மலைவளம் காண சேர நாட்டிற்கும்
பாண்டிய நாட்டிற்கும் இடையே அமைந்த செங்குன்று எனும் மலைக்கு அரசி வேண்மாள்,
தம்பி இளங்கோ, புலவர் சீத்தலை சாத்தனார் ஆகியோருடன் செல்கிறான்.
மன்னனை வரவேற்ற அம்மலையில் வாழும் குன்றக் குறவர்கள் மலையில் விளைந்த பொருட்களை
மன்னனுக்கு வழங்கித் தயங்கி நிற்க, மக்களின்
குறிப்பறிந்து செயல்படும் மன்னன் என்ன செய்தியென வினவ, அவர்கள்,
"மன்னா, சில
தினங்களுக்கு முன்பு தலைவிரிகோலமாகவும், துயரமிகுந்த விழிகளோடும், இடது
மார்பகம் அறுபட்ட நிலையிலும் பெண் ஒருத்தி அதோ... அந்த வேங்கை மரத்தின் கீழே வெகு
நேரமாக வானத்தைப் பார்த்தபடி நிற்கக் கண்டோம். அவள் யாரென்று நாங்கள் வினவ அவளோ 'கணவனை இழந்த பாவி நான்' என்று மட்டும் கூறினாள். அப்போது வானத்திலிருந்து ஒரு வாகனத்தில் வந்த ஒருவன் இவளை அழைத்துச்
சென்றான். அவன் இவளின் கணவனாக இருக்க வேண்டும்."
அம் மலைமக்கள் விவரித்த இக்காட்சியைக் கேட்ட சேரன், முகத்தில் கேள்விகளுடன் புலவர் சாத்தனாரைப்
பார்க்கிறார். அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து வைத்து அரசனுக்கு ஆலோசனை வழங்கும்
ஆற்றல் பெற்றவராயிற்றே பலவர்.
"மன்னா, இவர்கள்
கூறும் அந்தப் பெண்னைப்பற்றி எனக்குத் தெரியும். அவள் பெயர் கண்ணகி
சோழநாட்டிலிருந்து கணவனுடன் பாண்டிய நாட்டிற்கு பெயர்ந்தவள். அவள் கணவன் கோவலன்,
திருடன் எனத் தவறாகக் குற்றம்
சாட்டப்பட்டு பாண்டியனால்
கொல்லப்பட்டான்."
கண்ணகி மதுரையிலிருந்து வெளியேறியது வரை கண்ணகியின் வரலாற்றை
எடுத்துரைக்கிறார்.
(சிலப்பதிகாரக்கதையில் கண்ணகி மதுரையை எரித்துவிட்டு மதுரையிலிருந்து
கிளம்பியது வரை நினைவுக் கூறுங்கள்)
புலவர் கூறிய கண்ணகியின் கதையைக் கேட்ட அரசி வேண்மாள், கண்ணகியின் கற்பைப் போற்றிவிட்டு,
“நம்நாட்டிற்கு வந்த கண்ணகி தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும். அவளை நாம்
வணங்கத்தக்கவளாக கருத வேண்டும்”
என்கிறாள்.
"இவள் பத்தினித் தெய்வமாவாள், இவளுக்கு இமயத்திலிருந்து கல் எடுத்துவந்து இங்கே
கோயில் கட்டுவேன்"
என அங்கேயே அறிவிக்கிறான் செங்குட்டுவனும்.
இவற்றையெல்லாம கேட்டுக்கொண்டிருந்த செங்குட்டுவனின் தம்பி இளங்கோ
அருகிலிருந்த புலவர் சாத்தனாரிடம்
“இந்தப் பத்தினியின் வாழ்வை ஒரு காப்பியமாக எழுதுங்கள் புலவரே"
என்கிறார்.
“கண்ணகி வாழ்வில் சோழ, பாண்டிய,
சேர என மூன்று நாடுகள்
சம்பந்தப்பட்டிருப்பதால் அது பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஒரு புலவரைவிட அரச
குடும்பத்ததைச் சேர்ந்த தாங்கள் ஈடுபட்டால் பணி எளிதாக அமையும்”
சாத்தனார் இளங்கோவையே எழுதும்படிக் கூற, அதன்படி அரசாட்சியில் அண்ணனுக்குப் போட்டியாக மாறும்
சூழல் ஒருநாளும் வரக்கூடாது என்பதற்காகத் தானாக முன் வந்து சமணத் துறவியாக மாறிய
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எனும் காவியத்தைச் சிறப்புற எழுதி முடித்தார்.
இமயம் சென்று பத்தினி தெய்வத்திற்குச் சிலை
வடிக்கப் புறப்பட்ட சேரன் செங்குட்டுவன் அங்குத் தமிழர்களை இழிவாகப் பேசிய ஆரிய
மன்னர்களை வென்று, தோற்ற
மன்னர்களான கனகன், விஜயனின் (கனக
விஜயன் ஒருவனே என்றும் சிலர் கூறுவர்) தலையின் மேல் கல்லை சுமக்க வைத்து, கங்கையில் புனித நீராட்டி சிலை வடித்துக்
கோயில் கட்டுகிறான்.
இவ்வாறுக் கட்டப்பட்ட கோயிலின் குடமுழுக்கு விழாவிற்குத் தன்னுடைய நட்பு
நாடுகளின் மன்னர்களைச் செங்குட்டுவன் அழைக்கிறான். அந்த விழாவிற்கு இலங்கை மன்னன்
கயவாகுவும் வருகை தருகிறான். விழாவிற்கு வந்தக் கயவாகு கண்ணகியின் பெருமையை
அறிந்து, மங்கலதேவிக் கோட்டத்தில்
இருந்து. ஒரு காற் சிலம்பைக் கொண்டுபோய் இலங்கையில் பத்தினி தெய்வ வழிபாட்டைத்
தொடங்கி வைத்திருக்கிறான்.
இன்றும் இலங்கையில் கண்ணகிக்கு கோயில்கள் இருப்பது நோக்கத்தக்கது.
பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் இமயத்தில்
கல்லெடுத்து கண்ணகிக்குக் கோயில் கட்டினான். இக்கோயில் தமிழகத்தின் எல்லையில்
அமைந்திருந்தாலும் கேரள வனப்பகுதி வழியே செல்லவேண்டியுள்ளது, ஆனால் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்து
வருகின்றனர். நீண்ட போரட்டத்திற்குப்பின் ஆண்டுக்கு ஒருமுறை சித்திராப் பெளர்ணமி
அன்று மட்டும் மக்களை அக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கின்றனர்.
மங்கலதேவிக் கோட்டம் என்றழைக்கப்படும்
கண்ணகிக் கோட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர், வண்ணாத்திப் பாறை காப்புக்காடு வனப்பகுதியில்
அமைந்துள்ளது. இது பளியன்குடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும்
தேக்கடியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்து.
தற்போது, கண்ணகிக் கோட்டம்
இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மேலும் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்
இருப்பதால் வழிபாடு நடத்தவே இடர்பாடாக உள்ளது.
1983 ஆம் ஆண்டுவரை, இங்கு செல்ல தமிழக எல்லைக்குள் உள்ள நடைபாதையைப் பயன்படுத்தி மூன்று நாட்களுக்கு
விழாவாக நடத்தி வந்தனர். விளக்குகள், ஒலிபெருக்கிகள், சமையல்
பாத்திரங்கள் முதலியப் பொருட்களை எடுத்துச் சென்று மூன்று நாட்கள் அங்கேயே தங்கி
விழா எடுத்திருக்கிறார்கள். தற்ப்போது கோயில் உள்ளப்பகுதி கேரள தொல்லியல்துறையின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மூன்று நாள் விழா வெறும் எட்டு மணிநேர
விழாவாகச் சுறுக்கப்பட்டு எந்த ஒரு பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாமல்
கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஆறு மணிக்கு குமுளி வந்துவிட்டோம். நமக்கு முன்பே நிறையபேர் வந்து
வரிசையில் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் கூட்டம் அதிகம் என்றுப்
பேசிக்கொள்கிறார்கள்.
தற்போதைய நடைமுறைப்படி, ஒவ்வொரு
ஆண்டும் கண்ணகி விழா நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிழக, கேரள அதிகாரிகளும் கண்ணகி அறக்கட்டளை
நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் கூட்டம் குமுளியில் நடத்தப்படுகிறதாம். கூட்டத்தில்
விழா ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படுகிறதாம்.
அன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும்
டிராக்டர்களில் உணவைக்கொண்டு வந்துக் கொடுப்பது,மேலும் தண்ணீர், உணவு, தங்குமிடம்
போன்ற ஏற்பாடுகளையும் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்கின்றனர்.
அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பேசியபோது இக்கோயிலின் கடந்தகாலச் செய்திகளை
தெரிந்துகொள்ள முடிந்தது.
அவர்கள் கூறிய தகவல்களிலிருந்து,
1975 ஆம் ஆண்டு தமிழக அரசின் நில துறை
இணை இயக்குனர் திரு. கணேசனும், கேரள
அரசின் துறைத் தலைவரும் கூட்டாக ஆய்வு செய்து மங்கலதேவியின் கோயில் கேரள எல்லையில்
இருந்து 44 அடிதூரத்தில் தமிழக
எல்லையில் உள்ளது என்று அறிக்கையும் அளித்துள்ளனர்.
இவ்வளவுக்குப் பிறகும் இந்தக் கோயில் கேரள அரசின் தொல்லியல் துறையினரால்
தங்களின் கட்டுப்பாட்டிற்குள் எப்படிக் கொண்டுவரப்பட்டது என்று வியப்பாக உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்தக் கோயில்
கேரள அரசின் கோயிலாக அவர்களின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
கேரளக்காரர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் வழிபட்டுவரும் மங்கலதேவி தெய்வம்
தங்களுக்குரியது என நம்புகின்றனர். மங்கலதேவி என்பது கண்ணகி என்ற தமிழ் பெண்
என்பதை அவர்கள் மனம் ஏற்க மறுப்பதுதான் அடிப்படைப் பிரச்சனையாகும்.
குமுளிவரை நமது வாகனத்தில் செல்லலாம். அங்கிருநது ஆறு கிலோமீட்டர்கள்
ஆபத்தான, சாய்வானப் பாதையில் கேரள
ஜீப்களில்தான் பயணம் செய்யவேண்டும். வாகனத்திற்காகத்தான் இவ்வளவு நேரமாகக்
காத்திருக்கிறோம்.
கண்ணகி
ஓர் உண்மை நிகழ்வு, அவள் ஒரு
வரலாறு. பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து இறுதியில் தெய்வ
நிலையை அடைந்தவள் கண்ணகி. அக்கால அடித்தட்டு மக்கள், அபலைகள், சமூக, பொருளாதாரப்
பலமில்லாதவர்கள் கண்ணகியைத் தங்களில் ஒருவராகப் பார்த்தனர். கணவனோடு
பிழைப்பைத்தேடி இடம்பெயர்ந்த இடத்தில் துயரம் நேர்ந்தபோது ஆவேசம் கொண்ட அவளுக்கு
இயற்கையும் கைக்கட்டி மண்டியிட்ட அந்தக் காட்சி சாதாரண மக்களின் வாழ்வில்
நம்பிக்கையைக் கொடுத்தது. தாங்கள் வயிறு எரிந்து விடும் சாபம் வஞ்சகர்களைக்
கேட்கும் என நம்பினர்.
கண்ணகி வழிபாடு தமிழர்களிடம் அசுர
வளர்ச்சிப் பெற்றது. அது அப்படியே நீடித்திருந்தால் தனி ஒரு மதமாகக் கூட உலகம்
தழுவியிருந்திருக்கும் இன்றைய பௌத்தம்போல. ஆனால், ஏதோ சிறுதெய்வ வழிபாடு என்ற நிலையிலுள்ளது.
கடுமையான பயணமாக உள்ளது. கோயில் தொலைவில் தெரிகிறது.நெருங்கிவிட்டோம்.
![]() |
தொலைவில் மக்ககள் நடந்து வருவதுத் தெரிகிறதா?
அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து நடந்து வருகிறார்கள்.
ஒருவழியாகக் கோயிலுக்கு வந்துவிட்டோம். வரிசையில் நிற்கிறோம்.
கண்ணகி விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சித்திரை முழுநிலவு விழா என்றும்
பூமாரி விழா என்றும்அழைக்கப்படும் கண்ணகி விழாவானது காலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி
பள்ளி உணர்தல், மலர் வழிபாடு,
யாக பூஜை என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள்
தொடர்ந்து நடைபெறுகிறது. யாகபூஜையில் திருமாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்காகச் சிறப்பு
பூஜைகள் செய்யப்படுவதைப் பார்க்கமுடிகிறது. எட்டு மணியளவில் பொங்கல் வைத்து
வந்திருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஒன்பது மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பக்தர்கள்
தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நேர்த்திக்கடன்
செலுத்தவரும் பக்தர்கள் மஞ்சள் ,பச்சை
நிற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.தொடர்ந்து அம்மனுக்குச் செலுத்தப்பட்ட மங்கல நாண்,
வளையல்கள் வந்திருந்த பெண் பக்தைகளுக்கு
அளிக்கப்படுகிறது. சில ஆண் பக்தர்களும் தங்கள் துணைவிக்கு
வாங்கிச்செல்கின்றனர்.இத்துடன் காலை நிகழ்ச்சிகள் முடிந்து மாலை மூன்று மணிக்கு 'அவல் சிறப்புணா' வழங்கல் நடைபெறுகிறது. பின்னர் திருவிளக்கு வழிபாடு,
பூமாரி விழாவுடன் நிகழ்ச்சி முடிகிறது.
காலையிலிருந்து மாலைவரைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது இதை
அறக்கட்டளையினரும் நேர்த்திக்கடன் உள்ளவர்களும் செய்கின்றனர். இங்குப் பிளாஸ்டிக்
பைகள், தண்ணீர் பாட்டில்கள்
ஆகியவற்றுக்கு அனுமதியில்லையாதலால் மலை சுத்தமாகவே உள்ளது. ஐந்து லிட்டருக்கு மேல்
அளவுள்ள கேன்களை எடுத்து வரலாம் ஆனால் போகும்போது எடுத்துச்சென்றுவிட வேண்டும்.
செல்வச் செழிப்பான கண்ணகியின் 'வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்' என்று எந்த நேரத்தில் பாடினாரோ புலவர், புலவன் வாக்குப் பொய்யாகாது என்பார்கள். ஆமாம், மங்கலதேவிக் கோட்டத்தில் கண்ணகியின் வண்ணச்
சீறடியை மண்மகள் பார்க்கவே
முடியாதுதான். புரியவில்லையா? சேரன்
வடித்த கண்ணகியின் சிலையை உடைத்துவிட்டார்கள்.
இராஜராஜ சோழன், குலசேகரப்
பாண்டியண் ஆகியோர் இக்கோயிலுக்குச் செய்தக் கொடையைப்பற்றிம செய்திகள்
இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் சிறிய துண்டுகளாகக்
காணப்படுகின்றன.
கண்ணகி, வழிபாடு தமிழர்களிடம் அசுர
வளர்ச்சி பெற்றது. அது அப்படியே நீடித்திருந்தால், இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவியதுபோல, இஸ்ரேலில் தோன்றிய இயேசு, பின்னர் வழிபாடாக உலகளவில் பரவியது போல், கண்ணகியும் உலகம் முழுதும் பரவி நின்றிருப்பாள். கண்ணகி வழிபாடு
தனி ஒரு மதமாகக்கூட உலகம் தழுவியிருந்திருக்கும்.
அதை உணர்ந்தே தடுத்தனர்
அரசர்களைக் கையில் வைத்திருந்தவர்கள், அவள் சமணப் பெண் என்று
சமூகத்தில் தாழ்த்தினர். சிறுதெய்வ வழிபாடு என்றனர். பலி கேட்கும் தெய்வம் எனப்
பழித்தனர்.
புதினெட்டாம் நூற்றாண்டில்
இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர் மிகக் கடுமையாகக் கண்ணகி
வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி, முதல் புரட்சிப்பெண், தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும், அவளை மிகச் சாதாரணமாக ‘சமண மதத்து செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். “அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?” எனக் கொச்சையாகக் கேட்டு, தன் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும்
இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி. தமிழகத்தில், பெரியார் சிலப்பதிகாரத்தைக் கடும் விமர்சனம் செய்தார்.
சிலம்பு
ஒரு கதைதான் எனக் கட்சி பேசுவோர் இங்கே அதிகம். கண்ணகி ஒரு காப்பியத்தின் நாயகி.
அதனால் அவளை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே காணுங்கள் என வலியுறுத்தும் ஆய்வறிஞர்கள், கட்டுரைகள், நூல்கள் பல உள்ளன. இறை
நம்பிக்கையுடைய தமிழர்களிடம் கூட
‘எதை வேண்டுமானாலும் வழிபடு, கண்ணியை வழிபடாதே துயரம் வரும்!’ என அச்சம் மூட்டினர், அவள் மறுபிறப்பு எடுத்துவிட்டாள். அவளை வழிபடவேண்டாம் எனப் பிற
இலக்கியத்தில் இணைத்தனர்.
தற்கால கண்ணகி வழிபாடு
கண்ணகிக்
கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள வந்த இலங்கை அரசன் கயவாகு, பத்தினித் தெய்வ வழிபாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்தினான்.
இலங்கையில் கண்ணகிக்கு இன்றளவிலும் கோயில்கள் உள்ளன. மேலும், அங்கு கண்ணகிப் பற்றி தமிழில் வழக்குரைக் காதை, ஊர்சுற்று காவியம், பொற்புறா வந்தக் காவியம், கண்ணகை அம்மன் குளிர்த்திப் பாடல்கள், உருகுச் சிந்து ஆகியவையும் சிங்களத்தில் இராசாவளி பத்தினிக் கதா, கஜபாகு கதா, சிலம்புக் கதா, பத்தினி தெய்யோ ஆகிய நூல்களும் இயற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில்
செழித்திருந்த கண்ணகி தெய்வ வழிபாடு, பல்வேறு மதங்களின்
வளர்ச்சியினாலும் அவை கொடுத்த தாக்கத்தினாலும் மறைந்தாலும் அது முற்றிலுமாக
வழக்கொழிந்துவிடவில்லை, மாறாக வேறொரு உருவை
எடுத்துக்கொண்டது. கண்ணகித் தெய்வ வழிபாடு அம்மன் வழிபாடாக மாறியது. மாரியம்மன், மதுரகாளியமன் என்று பல பெயர்களில் நடைபெறும் வழிபாடுகளுக்கு
அடிப்படையாக அமைந்தது கண்ணகி வழிபாடு.
கண்ணகியால் எரிக்கப்பட்டப் பின்
மதுரை மழையின்மையால் வாடியது. வெயில் கொடுமையால் மக்களின் மேனியெங்கும்
கொப்புளங்கள் தோன்றி வாட்ட, கண்ணகி தெய்வத்தைக்
குளிர்வித்தால் தன் மக்களின் துயரத்தைத் துடைக்க முடியும் என்று நினைத்த மன்னன்
வெற்றிவேல் செழியன் கண்ணகியைக் குளிர்விக்க மழைவேண்டி அவளுக்கு விழா எடுக்கிறான்.
இவ்விழாவின் தொடர்ச்சியே மாரியம்மனுக்கு இப்போது எடுக்கப்படும் விழாவாகும்.
மாரி
என்றால் மழை, மழைவேண்டி வழிபடப்பட்ட அம்மன் என்ற
பொருளில் மாரி அம்மன் என்று அழைக்கப்பட்டாள் பத்தினித் தெய்வம் கண்ணகி. மழையில்லா
பஞ்சக்காலங்களில் உண்ணப்படும் உணவான கூழ், கருவாடு, முருங்கைக்கீரை முதலியவை மாரியம்மன் விழாக்களில் வழங்கப்படுவதையும், வெயில் கொப்புளங்களுக்காக வேப்பிலைப் பயன்படுவதையும், திருநீற்றுத் தட்டில் ஒற்றைச் சிலம்பை வைத்திருப்பதையும்
நோக்கும்போது இது தெளிவாகிறது.
மாரியம்மனை
ரேணுகாதேவியுடன் இணைத்து சிலர் ஒரு புராணக்கதையைக் கூறுகிறார்கள். ஜமதக்கினி எனும்
முனிவர் தனது தர்மபத்தினி ரேணுகாதேவியின் கற்பின் மீது ஐயம்கொண்டு, தனது மைந்தன் பரசுராமனை அழைத்து ரேணுகாதேவியின் தலையை
வெட்டிவிடுமாறு கட்டளையிடுகிறார். தந்தையின் கட்டளையை உடனே நிறைவேற்றிய
பரசுராமனைப் பார்த்து வரமொன்றைக் கேட்குமாரு ஜமத்கனி கூற, பரசுராமனோ தனது தாய் உயிருடன் வேண்டும் என்று வரம் கேட்கிறான்.
வெட்டப்பட்ட தலையை உடலுடன் சேர்த்தால் உன்தாய் உயிருடன் வருவாள் என வரம்
கொடுக்கிறார் முனிவர். மகனும் தன் தாயின் தலையைத் தேடிப்போக அதுவோ ஏதோ ஒரு
விலங்கினால் எடுத்துச் செல்லப்பட்டுவிட, வேறுவழியின்றி புலத்தி
ஒருத்தியின் தலையை வெட்டி எடுத்துப்போய் உடலுடன் சேர்க்க புலத்தித் தலையுடன்
ரேணுகாதேவி உயிர்பெறுகிறாள்.
தலை
மாறியிருப்பதால் அவள் மாரியம்மன் எனப்பட்டாள் என்று வலிய ஒரு கதையை கட்டுகிறார்கள்.
'மாரி' எனும் சொல் 'மழையைக்' குறிக்கும், தலை மாறிவிட்டது என்பதைக் குறிக்க 'மாறி அம்மன்' என்று வல்லின 'றி' யைத்தானே பயன்படுத்தியிருக்க வேண்டும். எனவே மாரி அம்மன் வழிபாடு
என்பது ரேணுகாதேவி வழிபாடல்ல அது கண்ணகி வழிபாட்டின் வேறு வடிவமே என்பது தெளிவு.(நன்றி
: திரு யாணன்)
திருச்சி-சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனும் கண்ணகித் தெய்வத்தின் ஒரு
வடிவமே. மதுரையை எரித்த கண்ணகி பல்வேறு திசைகளில் செல்லும்போது சிறுவாச்சூர் வந்து
அம்மன் கோயிலில் இரவுத் தங்க முற்பட , அக்கோயில் இருந்த செல்லியம்மன்
கண்ணகி முன்புத் தோன்றி மாந்திரீகன் ஒருவனின் கட்டுக்குள் தான் இருப்பதாகவும்
கண்ணகி இங்குத் தங்கினால் அவளுக்கு அவனால் துன்பம் ஏற்படலாம் என்றும் எனவே
அப்பகுதியிலிருந்து போய்விடுமாரும் கூற, கோபத்திலிருந்த கண்ணகி அந்த
மாநதி்ரீகனின் தலையைக் கொய்தாள். அவனும் கண்ணகியிடம் வரமொன்றைப் பெற்றான் அதன்படி
சிறுவாச்சூர் வருகிறவர்கள் முதலில் அவனைப் பார்த்துத் திட்டிவிட்டுப் பிறகு
அம்மனைப் பார்க்கப் போகவேண்டும் என்பதே.
செல்லியம்மனும்
கண்ணகியை சிறுவாச்சூரிலேயே தங்கிக் கொள்ளுமாரும் தான் அருகிலுள்ள பெரிய சுவாமி
மலையில் தங்கிக் கொள்வதாகவும் கூறுகிறாள். மேற்கண்ட இச்செய்தி பாம்பாட்டிச்
சித்தரின் பாடல்களில் காணப்படுகிறது என்கிறார்கள்.
கண்ணகி வழிபாடு கேரளத்தில்
பகவதி அம்மன் வழிபாடாக காணப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் அப்போதைய
சேரநாட்டில் கொடுங்கலூரிலும் கண்ணகிக்குக் கோயில் கட்டியுள்ளான். இக்கோயில்
முகப்பில் கையில் ஒற்றைச் சிலம்புடன் கண்ணகி ஓவியம் காணப்படுகிறது. ஆரம்ப
காலத்தில், உக்கிரமாக இருந்த இந்த பகவதி
அம்மனுக்கு உயிர் பலிகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆதிசங்கரர் இங்கு வந்தபோது
உக்கிரமாக இருந்த பகவதியை சாந்தமாக்கி உயிர் பலிக்குப் பதிலாக குங்கும் கொடுக்கும்
வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
நடைபெற்று வரும் கண்ணகி தெய்வ வழிபாட்டின் தொடர்சியாக அண்மையில் கண்ணகிக்கு கோயில்
அமைத்திருக்கிறார்கள். நாகை மாவட்டம் சீர்காழிக்கருகில் மேலையூர் தாசில்பண்ணை என்ற
ஊரில் கண்ணகி தெய்வத்தின் பக்தையான கௌரி என்பவரின் முயற்சியால் 1970 ஆம் ஆண்டு கண்ணகிக்கு கோயில் கட்டப்பட்டு பத்தினி தெய்வ வழிபாடு
நடைபெறுகிறது. கண்ணகி விண்ணுலகம் சென்ற மாதமாகிய ஆடி மாதத்தில் ஆடிமாததில் அனுஷ
நட்சத்திரத்தில் வீடுபேறு நாளாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி புனித நீரால்
அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம்
செய்யப்பட்டு பொங்கலிட்டு சிறப்பாக நடைபெற்றுவரும் இவ்வழிபாடு இன்றளவும் நடைபெற்று
வருகிறது.
1945 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது தேடுதல் பயணம், சுமார் 18 ஆண்டுகள் நீடித்துள்ளன. முழுக்க நடைப்பயணம், 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் பெரும் பாக்கியத்தை, மனஉவகையை அடையும் பேறுபெற்றுள்ளார். அவரது தமிழ்ப் பணியைச் சிறப்பிக்கும் வகையில் கடந்த 2012 டிசம்பர் 21 ஆம் நாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
கண்ணகிக் கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு? என்பது குறித்து தினமணி நாளிதழுக்குத் திரு கோவிந்தராசனார் அளித்த பேட்டி:
“சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன்.
(காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் பாதை, கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் பிரான்மலை, அழகர்மலை, மதுரை. அதன்பிறகு வைகைகரை வழியே சுருளி மலைத் தொடர், இறுதியில் நெடுவேள் குன்றம்)
மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு மதுரையை எரித்துவிட்டுத் தலைவிரிகோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேள் குன்றத்துக்கு (இன்றைய மங்கல தேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்த கண்ணகி விண்ணுலகம் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
கண்ணகி நடந்து சென்றதாகக் கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து தொண்ணூறு மைல் தொலைவில் உள்ள மங்கலதேவி மலையை அடைந்தேன். நாற்பது மைல் சுற்றளவில் கண்ணகிக் கோட்டத்தைத் தேடி அலைந்தேன். இறுதியில் அந்தக் கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.”
கண்ணகிக் கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
“வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்தச் செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதைக் கங்கையில் நீராட்டித் தலைச்சுமையாக இங்குக் கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்குச் சிலை வடித்து முருகவேள் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன், அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகிக் கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.”
அது கண்ணகிக் கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?
“மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகிச் சிலை இருந்தது. (சுமார் இரண்டடி உயரம். ஒரே கல்லில் , இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண் சிலை, தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல், இடது புற மார்பு சிறியதாக இருந்தது) அந்தக் கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டன. இங்குச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கைக் காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.”
எனக் குறிப்பிடுகிறார்.
“மேலும், அங்கிருந்த கண்ணகிச் சிலை, இமயமலைக் கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்தக் கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியானக் கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலைக் கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகிச் சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து (17.5. 1971) கண்ணகிச் சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்."
மாநாட்டில் இளங்கோவடிகள் சிலை திறப்பு விழாவின் போது, கண்ணகிக் கோயில் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. (நன்றி - கரந்தை ஜெயக்குமார் பதிவு)
தஞ்சாவூர் கரந்தட்டான்குடியில் ஒரு சாதாரண ஓட்டு வீட்டில் வசித்து வந்த சி. கோவிந்தராசனார் 94 ஆவது வயதில் அண்மையில்தான் மறைந்துள்ளார்.
கண்ணகி அம்மன் வழிபாடு
வேம்பின் ஒர் இலையைத் தலையில் சூடீனால் போதும்! அங்கே தாய்த்தெய்வம் கண்ணகி அம்பாளின் அருள் தானே வரும் எனும் நம்பிக்கை ஆதித்தமிழர்களிடம் இருந்து வருகிறது என்கிறார் திரு யாணன் அவர்கள் ,தனது 'பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு' எனும் புத்தகத்தில். அவர் மேலும் கூறும்போது;
ஏழைகளுக்கும், அபலைகளுக்கும் கண்ணகி துணையானாள். அவளை நினைத்து நெற்றியில் மஞ்சள் பூசினர் தலையில் வேப்பிலை சூடினர். கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் விரத மாதம் ஆனது.
கண்ணகி, கண்ணகையம்மா, கண்ணேயம்மா, கண்ணியம்மன், கண்ணம்மா, கண்ணாம்பாள், கண்ணாத்தாள், கண்ணு, கண்ணி போன்ற பெயர்கள் கண்ணகி அம்மன் மீது கொண்ட பக்தியால் கடந்தகால தமிழர்கள் தங்கள் சந்ததியினருக்கு வைத்து பரவசப்பட்டனர்.
கண்ணகி, வழிபாடு தமிழர்களிடம் அசுர வளர்ச்சி பெற்றது. அது அப்படியே நீடித்திருந்தால், இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவியதுபோல, இஸ்ரேலில் தோன்றிய இயேசு, பின்னர் வழிபாடாக உலகளவில் பரவியது போல், கண்ணகியும் உலகம் முழுதும் பரவி நின்றிருப்பாள். கண்ணகி வழிபாடு தனி ஒரு மதமாகக்கூட உலகம் தழுவியிருந்திருக்கும்.
அதை உணர்ந்தே தடுத்தனர் அரசர்களைக் கையில் வைத்திருந்தவர்கள், அவள் சமணப் பெண் என்று சமூகத்தில் தாழ்த்தினர். சிறுதெய்வ வழிபாடு என்றனர். பலி கேட்கும் தெய்வம் எனப் பழித்தனர்.
புதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர் மிகக் கடுமையாகக் கண்ணகி வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி, முதல் புரட்சிப்பெண், தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும், அவளை மிகச் சாதாரணமாக ‘சமண மதத்து செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். “அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?” எனக் கொச்சையாகக் கேட்டு, தன் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும் இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி. தமிழகத்தில், பெரியார் சிலப்பதிகாரத்தைக் கடும் விமர்சனம் செய்தார்.
கண்ணகி ஒரு காப்பியத்தின் நாயகி. அதனால் அவளை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே காணுங்கள் என வலியுறுத்தும் ஆய்வறிஞர்கள், கட்டுரைகள், நூல்கள் பல உள்ளன. இறை நம்பிக்கையுடைய தமிழர்களிடம் கூட
‘எதை வேண்டுமானாலும் வழிபடு, கண்ணியை வழிபடாதே துயரம் வரும்!’ என அச்சம் மூட்டினர், அவள் மறுபிறப்பு எடுத்துவிட்டாள். அவளை வழிபடவேண்டாம் எனப் பிற இலக்கியத்தில் இணைத்தனர்.
Sources :
பெருகட்டும் கண்ணகி அம்மன்
வழிபாடு- திரு யாணன்
Published by: Blackhole Media Publication Limited,
ISBN 978-93-81098-25-7
Published by: Blackhole Media Publication Limited,
ISBN 978-93-81098-25-7











No comments:
Post a Comment