திருச்சி கே.சாத்தனூரில் உள்ள ஐயனார் சிற்பத்தைப் பார்க்க நண்பர் கண்ணன் முனைவர் தமிழகன் ஐயா ஆகியோருடன் போய்க்கொண்டிருக்கிறேன். எனது வீட்டினருகேயே இருப்பதனால் இச்சிற்பத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் எதையோ கவனிக்க தவறியதாக ஏனோ மனம் தவிக்க மறுபடியும் ஐயனாரை தரிசிக்க வந்துள்ளேன். நீங்களும் கூட வாருங்களேன் ஐயனாரைப் பார்த்து விடுவோம்.
கே.கே.நகரைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். சாத்தனூருக்குள் நுழையும் நம்மை சாத்தனூர் குளம் வரவேற்கிறது. ஊரின் வடக்குப்புறத்திலுள்ள இக்குளத்தில் நீர் நிரம்பி, அதில் பறவைகள் சுற்றி வருவது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளதுதானே? குளத்தைக் கடந்து வரும்போது அரசுப்பள்ளி ஒன்று தெரிகிறது பாருங்கள் இன்று விடுமுறையாதலால் பூட்டப்பட்டிருக்கும் இப்பள்ளியைக் கடக்கும் நாம் வலபுறமாக செல்லும் சாலையில் செல்கிறோம். இருபுறமும் உள்ள வீடுகளைக் கடக்கும் நாம் சாலையின் இடப்புறமுள்ள அரசமரத்தையும் மரத்தடியிலுள்ள விநாயகரைத் தரிசித்தவாறே ஊரைக்கடந்து வந்துவிட்டோம். ஊரின் மேற்கே அமைந்துள்ள சாத்தனூர் ஏரிக்கரையில் நிற்கும் நம்மைப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் மேலே செல்ல விடாமல் தடுக்க அருகே வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர் தெரிகிறார் பாருங்கள் அவரிடம் கேட்போம்.
"தண்ணில எறங்கி நடங்க முழங்கால் ஆழந்தான் பயப்படாம போங்க"
நாம கேட்காமலேயே பதிலளித்தவருக்கு நன்றி கூறிய நாம் கால்சட்டைகளை முழங்கால்வரை தூக்கிக்கொண்டு தண்ணீரில் இறங்கி நடக்கிறோம். குளிர்ந்த தெளிவான நீரில் மீன் குஞ்சுகள் நீந்திக்கொண்டிருப்பது தெரிகிறது பாருங்கள். சாத்தனூர் ஏரியின் தண்ணீர் ஏரி நிறம்பி அதிகப்படியான தண்ணீர் இங்கு வந்திருக்கும் போலிருக்கிறது. சென்றமுறை வந்தபோது வறண்டிருந்த இவ்வேரியில் இம்முறை தண்ணீர் முழுமையாக இருப்பது நல்ல செய்திதானே?
ஏரியின் கரையில் சிறிய சிதைவடைந்த கோயில் ஒன்று தெரிகிறது பாருங்கள். பத்தடிக்கு பத்தடி அளவேயுள்ள இக்கோயிலின் உள்ளே என்ன இருக்கும் என்றுப் பார்க்கலாம் வாருங்கள்.
நில்லுங்கள்....
கதவு ஏதும் இல்லாமல் இருப்பதைப் பாருங்கள் உள்ளே ஏதேனும் விலங்குகளோ பாம்புகளோ இருக்கக்கூடும் மேலும் மேல்தளம் இடிந்துவிழும் நிலையிலுள்ளதையும் கவனியுங்கள். எனவே வெளியிலிருந்தே பாதுகாப்பாக நின்றுகொண்டு உள்ளே எட்டிப்பார்ப்போமா?
உள்ளே....
ஏழு கன்னிமார் சிற்பங்களும் விநாயகர் சிற்பமொன்றும் இருப்பதைப் பார்க்கிறோம். ஏழு கன்னிமார் வழிபாடு தமிழர்களின் பழமையான வழிபாடு விநாயர் சிலை பின்நாளில் வைக்கப்பட்டிருக்கலாம். வெளியே நடுகற்கள் சிலவும் இரண்டு உயரமான குத்துக்கற்கள் நிற்பதையும் கவனித்தீர்களா? நடுகற்களும் குத்துக்கற்களும் இங்கு வந்து வழிபடும் மக்களின் முன்னோர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலை அங்குள்ளவர்கள் பிடாரிகோயில் என்று அழைக்கின்றனர்.முன்னோர் வழிபாடு நாட்டுப்புறச் சிறு, குலதெய்வங்களின் வழிபாடாக மாறியது என்று நாட்டுப்புறக் குலதெய்வங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர் சுப்பிரமணியன் ஐயாவின் கருத்து நோக்கத்தக்கது. மேலும், நடுகற்கள் வழிபாட்டுமுறை கீரனூர் காட்டு ஐயனார்கோயிலில் நடைமுறையிலிருப்பது ஒப்புநோக்கதக்கது என்றும் இதனைப் பட்டவன் வழிபாடு என்றும் அழைப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஒருவனைக் கொடுத்து ஓர்குடி காப்பதுதானே குலதெய்வ வழிபாடு என்ற இவர் கூற்று சிந்திக்கத்தக்கதாகும்.
அங்கே பாருங்கள் ஏரிக்கரையில் இரண்டு சிற்பங்கள் தெரிகின்றன. வாருங்கள் போய் பார்ப்போம்.
ஆகா...
ஐயனார் சிற்பம்!
அருகில் துணைவியாரோடு காணப்படுகிறாரே!
அருகில் துணைவியாரோடு காணப்படுகிறாரே!
இரு கால்களும் குத்திட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். இடது முழங்காலில் யோகப்பட்டை கட்டியிருக்கிறார். வலப்பக்க இடையில் குறுவாள் தெரிகிறது. இடையில் ஆடை அணிந்தவரின் மார்பில் காணப்படும் யோகப்பட்டையும், பூணூலும் சேர்ந்து பார்பதற்கு சன்னவீரம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கழுத்தில் தோள்வளையம்(வாகு வளையம்), சரடு என இரண்டு அணிகளைக்கொண்டுள்ளார். மேற்கையில் கடகத்தையும் முன்கையில் வளையையும் அணிந்துள்ளார். காது வடிகாது அமைப்பில் அதாவது காது கீழே தொங்கிய வடிவில் உள்ளது. முடியலங்காரம் விரிசடை நிலை அதாவது ஜடாமுடியைக் கொண்டுள்ளார். சாந்தமாகக் காணப்படும் முகத்துடன் மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கும் இந்த ஐயனார் சிற்பம் வேறு பகுதியிலிருந்து இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். கால்பகுதி உடைந்து சற்று பின்னோக்கி சாய்ந்துள்ளது. மேலே எண்ணெய் பூசப்பட்டிருப்பதும், துணி கட்டப்பட்டிருப்பதும் வழிபாட்டில் உள்ளமையை உணர்த்துகின்றன. இடப்புறம் தன் துணைவியாருடன் காணப்படுகிறார்.
அங்கே பாருங்கள் ஒருவர் வருகிறார், அவரிடம் இச்சிற்பங்களைப்பற்றி கேட்போமா?
"என் பேரு கோவிந்தன் இந்த ஊருதான். இந்த சாமிய மூக்கர சாத்தாயின்னு நாங்க கூப்புடுவோம்".
ஐயனாரை சாத்தன் என்று அழைப்பார்கள். அவரின் துணைவியாரை சாத்தாயி என்றும் சாத்தனாரை மூக்கரையன் என்றழைக்கின்றனர் போலும். மூக்கரையன் பெயர் காரணம் தெரியவில்லை. மூக்கு உடைபட்டநிலையில் இச்சி இருப்பதால் மூக்கு அறுபட்டசாத்தன் எனும் பொருள்படும்படி மூக்கரையன் என்றாகியிருக்கலாம்.
நம்முடன் வந்துள்ள முனைவர் தமிழகன் ஐயாவிடம் கேட்போமா?
"சாத்தன், தேவன், பூதன் ஆகியவை பழந்தமிழ் பெயர்கள். இவற்றில் சாத்தனை வழிபடும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. சாத்தனை ஐயனார் என்றும் அழைப்பர். ஐயனார் இன்று பலருக்கு குலதெய்வமாக இருப்பதைக் காணலாம். சாத்தனாரின் நினைவாக இவ்வூர் சாத்தனூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்."
"சரிங்க ஐயா கே.சாத்தனூர் என்று சொல்கிறார்களே அது என்ன ஐயா கே?"
"கானாடு காத்தான் என்ற ஊர் உள்ளதல்லவா அதுபோல கோனாடு சாத்தனூர் எனும் இவ்வூரின் பெயர் கோ.சாத்தனூர் என்று சுருக்கி அழைக்கப்பட்டு, இதை ஆங்கிலத்தில் எழுதும்போது K.SATHANUR எனமாறி பின் மீண்டும் தமிழில் கே.சாத்தனூர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றாக கோனாடு அபிஷேகபுரம் கோ.அபிஷேகபுரம் என அழைக்கப்பட்டு இன்று கே.அபிஷேகபுரம் என்று அழைக்கப்படுகறதே, அது போலத்தான் கே.சாத்தனூர் எனும் பெயர் வந்திருக்க வேண்டும்".
"கோனாடு என்ற பெயர் எவ்வாறு வந்தது ஐயா?"
"இருப்பையூர் கிழான் கோன் என்ற சிற்றரசன் சங்ககாலத்தில் இருந்துள்ளான். இவ்வரசனைப்பற்றி நற்றிணையில் 350 வது பாடலில்
"தேர்வண் விராஅன் இருப்பை அன்ன" என்ற குறிப்பு வருகிறது. இருப்பையூர் கிழான் கோன் ஆண்ட நாடு கோனாடு என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும்".
"தேர்வண் விராஅன் இருப்பை அன்ன" என்ற குறிப்பு வருகிறது. இருப்பையூர் கிழான் கோன் ஆண்ட நாடு கோனாடு என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும்".
சாத்தனூர் சாத்தனை மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டு கிளம்புவோமா?
இவ்வளவு நேரம் கூடவே பயணம் செய்த உங்களுக்கு நன்றி. மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
...பாலா
(Ayanar Statue at Sathanur villiage Trichy-620021, Tamilnadu)
No comments:
Post a Comment