"மீசைப்புலி மலை" இந்தப் பெயர்தான் நம்மை முதலில் ஈர்த்தது. நண்பர் அன்பு அவருடைய முகநூல் பதிவில் வெளியிடும் படங்கள் சுவிட்சர்லாண்ட் போன்ற வெளி நாடுகளில் எடுத்தவை போலிருக்கும். நமக்கு உண்மையிலேயே ஒர் ஐயம். வெளிநாட்டில் எடுத்தப் படங்களுடன் இவர் படத்தை இணைத்து வெளியிடுகிறாரோ என்று. இதை நாமும் நேரில் போய் பார்த்து உறுதி செய்யவேண்டும் என்ற நினைப்பில் இருந்த போதுதான் #galaxytripmaker இல் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அக்டோபர் மாதம் 14, 15 (2023 ஆம் ஆண்டு) தேதிகளில் மீசைப்புலி மலைக்கு வருபவர்கள் இணைந்து கொள்ளலாம் என்று செய்தியைப் பார்த்தவுடன் பயணத்தைப் பதிவு செய்து காத்திருந்தோம். இந்தப் பயணத்தின் ஏற்பாடுகளை நண்பர் மதன் அவர்கள் செய்திருந்தார். இந்த பயணத்தில் அன்பு கலந்து கொள்ளவில்லை. எங்கு வரவேண்டும், என்னென்ன பொருட்களை எடுத்து வர வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. தரமான ஷுவும், மழைவந்தால் சமாளிக்க ஜெர்கினும் தேவை என்று வலியுறுத்தி இருந்தார்கள்.
பயணம் ஆரம்பிக்கும் இடம் தேனி என அறிவிக்கப்பட்டிருந்தது. 14 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேனியில் இருக்க வேண்டும். தொலைவிலிருந்து வருகிறவர்கள் தயாராகிக்கொள்ள ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக இரு இடங்களில் அறைகள் ஏற்பாடு செய்யட்டிருந்தன. காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை இவ்வறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாம் திருச்சியில் இருந்து காலை நாலரை மணிக்கு அரசுப் பேருந்தில் தேனிக்கு புறப்பட்டோம். அந்த நேரத்தில் நேரடியாக தேனிக்கு பேருந்து இல்லை. எனவே, திண்டுக்கல் வந்தால் அங்கிருந்து தேனிக்கு எளிதாகப் போய்விடலாம். நமக்கு லக்கேஜ் சற்று அதிகமாதால் பேருந்தில் மாறி ஏறி இறங்க சற்றுக் கடினமாக இருந்தது. தனியா பயணம் போகிற உனக்கு எதற்கு அதிகப்படியான லக்கேஜ்? என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்...காலை 8:30 மணிக்குத் தேனிக்கு வந்து சேர்ந்தோம். உயரமான மலைப் பகுதிக்குப் போகிறோம், அதுவும் அக்டோபர் மாதம். இந்தக் காலகட்டங்களில் நமது சூரியக் குடும்பம் இடம்பெற்றுள்ள Milkyway எனப்படும் ஆகாயகங்கை வானில் நன்றாகத் தெரியும. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாலை வேளையில் கிழக்கே தோன்றும் இப்பேரண்டத்தின் காட்சி இரவு முழுவதும் காணக் கிடைக்கும் அற்புதம் ஆகும். ஆனால், நாம் போவது அக்டோபர் மாதம். அக்காலங்களில் மாலை வேளையில் மேற்கே தோன்றும். இரண்டு மணி நேரங்களுக்குக் காட்சியளித்து, மேற்கே மறைந்துவிடும்.ஆகாயகங்கை என்னும் நம் பேரண்டத்தின் எழில் தோற்றத்தை மலையேற்றத்திற்காக வந்திருக்கும் மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும் என்ற நோக்கில் அதற்கான Astro Binocular, Stand, அதைப் படம் எடுப்பதற்கான கேமரா போன்ற கருவிகள். இதெல்லாம் சேர்ந்து நமது லக்கேஜ் அதிகமாக இருந்தது. தனியாக இவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு வருவது சற்று கடினம்தான். வெவ்வேறு ஊர்களிலிருந்து தேனிக்கு அனைவரும் வருகிறார்கள். தேனியில் இருந்து மூணார் செல்வதற்காகத் தனியார் பேருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை 9 மணிக்கு கிளம்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பேருந்து கிளம்பும்போது 10 மணி ஆகிவிட்டது. 46 பேர்கள் வந்திருந்தார்கள். மூணாரில் நான்கு பேர் இணைந்து கொள்வதாகப் பேசிக்கொண்டார்கள்.மீசைப்புலி மலை செல்லவேண்டுமெனில் கேரள வனத்துறையிடம் பெயரைப் பதிவு செய்துவிட்டு மூணார் வந்துவிட வேண்டும். அங்கிருந்து அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஜீப்பில் செல்ல வேண்டும். நமது சொந்த வாகனத்தில் அங்கே போக முடியாது. எங்கள் பயணம் கேலக்ஸி டிரிப் மேக்கர் வழியாக செய்யப்பட்டு இருந்ததனால் பதிவு செய்யும் பணியை எல்லாம் அவர்களே பார்த்துக் கொண்டனர். எட்டு ஜீப்புகள் எங்களை ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் பேஸ் கேம்பை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது. பேஸ் கேம்ப் என்பது மலையில் அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடம். செல்லும் வழியிலேயே வனத்துறை அலுவலகத்தில் ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட தகவல்களைச் சரிபார்த்து மேலே செல்ல அனுமதிக்கிறார்கள். ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு சமதளமான ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அப்பகுதியில் ஒரேயொரு தேநீர் கடையும் எதிரே பெரிய விளையாட்டு மைதானமும் மலைகளுக்கிடையுள்ள சமதளப்பகுதியில் அமைந்திருந்தன. மதிய உணவுக்கான நேரமாதலால், அவ்விடத்தில் உணவருந்த ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்களுக்கான மதிய உணவு இரண்டு ஆட்டோக்களில் கொண்டுவரப்பட்டிருந்தது. வெஜிடபிள் பிரியாணி, முட்டை, தயிர் பச்சடி, சிறிய ரக வாழைப்பழம் ஆகியவை உணவாகப் பரிமாறப்பட்டன. சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர் குடித்து பயணத்தைத் தொடர்ந்தோம்.வழியெங்கும் சிறிய சிறிய அருவிகளைக் கடந்து வந்தோம். அதில் ஒர் அருவியில் குளித்துவிட்டு மேலே செல்வதற்காகத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், நாங்கள் பயணத்தை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அருவிக்குச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டு பேஸ் கேம்பை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.மூணாறில் இருந்து பேஸ் கேம் செல்வதற்கு ஒன்றரையிலிருந்து இரண்டு மணிநேரம் ஆகிறது. இங்கு வனத்துறை அலுவலர்களுக்கான ஒரு கட்டிடம் இருக்கிறது. அதில் அலுவலகம், சமையல் கூடம், இரு அறைகள், 50 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் இடம் ஆகியன உள்ளன. இங்கு wifi வசதியும் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் bsnl ஓரளவிற்குச் சிக்னல் கிடைக்கிறது மற்றவை கிடைப்பதில்லை. இங்கு வந்து சேர்ந்த உடனே சூடாக 'கட்டன் சாயா'' கொடுத்தார்கள். கட்டன் சாயா கேரளாவில் அதிகம் பரிமாறப்படும் சுவையான பால் சேர்க்கப்படாதத் தேநீர். நாமிருக்கும் இப்பகுதி காட்டின் நடுவே அமைந்துள்ளது. அதாவது விலங்குகள் வசிக்கும் இடத்தில் நாம் உள்ளோம். இங்கே சில கட்டுப்பாடுகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். என்ன செய்யக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்து. இந்த மலைப்பகுதியில் பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள், மதுபானங்கள் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. மேலும், இப்பகுதியைச் சுற்றி வாழும் விலங்குகளுக்கு இடையூறாக இருக்கும் ஸ்பீக்கர் போன்றவற்றில் சத்தமாக பாட்டு போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.உட்காரும் இடத்தின் நடுவே நெருப்பு மூட்டி கேம்ப் பயர் செய்திருந்தார்கள். அந்தக் குளிருக்கு அதனைச் சுற்றி உட்கார்ந்து இருக்கும்போது மிகவும் இதமாக இருந்தது. அருவிக்கு போகாமல் நேரே இங்கே வந்ததால் சற்று முன்பாகவே வந்துவிட்டோம். இதனால் எங்களுக்கு நேரம் சிறிது இருந்தது. இந்த நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த நாங்கள் பல்வேறு குழுக்களாக அங்கே உட்கார்ந்திருந்தோம். சிலர் பேசிக் கொண்டும், சிலர் குழுவாகச் சேர்ந்து பாட்டு பாடிக் கொண்டும் மகிழ்வாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னிரவில் அனைவரும் சேர்ந்து இருக்கும்போது நமது கேலக்ஸி எனப்படும் ஆகாய கங்கையை வந்திருப்பவர்களுக்குக் காட்டி விளக்கிக் கூறுமாறுக் கேட்டிருந்தார்கள். அதற்காக Astro Binocular உட்பட பல கருவிகளை எடுத்து வந்திருந்தோம். நமது திட்டம் என்னவென்றால் மாலை சூரியன் மறைந்த உடன் மேற்கு வானத்தில் மிக அழகாகவும், பிரம்மாண்டமாகவும் தெரியும் அந்த ஆகாயக் கங்கையைக் காட்டி, அது குறித்து வந்தவர்களிடம் உரையாடுவதும் ஆகும். ஆனால் மழை பெய்து கொண்டு, மேகமூட்டமாக இருந்ததால் வானத்தைப் பார்க்க முடியவில்லை. எனவே திட்டத்தைச் சற்று மாற்றி வானியல் குறித்த ஒரு உரையாடலாகப் பண்ணலாமா என்று மதன் கேட்க நாமும் சரி என்று அவர்களிடம் வானியல் குறித்தூ உரையாடினோம். ஆங்காங்கே குழுவாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒரே வட்டமாக உட்கார உரையாடல் தொடர்ந்தது. ஒரு மணி நேரமாக ஆர்வத்துடன் நடந்த கலந்துரையாடல் இரவு உணவுக்கு நேரம் ஆகிவிட்டதால் முடிவுக்கு வந்தது. இரவு உணவாகச் சப்பாத்தி, சிக்கன் கிரேவி, சாதம், பழங்கள் வழங்கப்பட்டன.இரவு தங்குவதற்குக் கூடாரங்கள் (டெண்ட்) அடித்து இருந்தார்கள். 20 லிருந்து 30 கூடாரங்கள் வரைப் பார்க்க முடிந்தது. மலைச் சரிவுகளில் அங்கங்கே சமமான பரப்பை ஏற்படுத்தி அதில் ஆங்காங்கே இவற்றை அடமைத்திருக்கிறார்கள். ஒரு கூடாரத்தில் இரண்டு பேர் தங்கும் வீதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம்முடன் கோவையைச் சேர்ந்த திரு இரமேஷ் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார். தூங்குவதற்கு தனித்தனியாக மெத்தையான ஒரு படுக்கைக் கொடுத்தார்கள். அந்த மெத்தையினுள் நாம் நுழைந்து கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். ஆனால், இரமேஷ் அவர்களுக்கு புதிய இடமாக இருந்ததால் தூக்கம் வரவில்லை என்று கூறினார். நேரம் செல்லச் செல்ல காட்டின் அமைதி எங்கும் நிறைந்தது. ஆனால், நமக்குத் தூக்கம் வரவில்லை.அதற்கு காரணம்…. இடைவிடாமல் ஒரே இலயத்துடன் நடுக்காட்டில் டொம்... டொம்... என்று கேட்கும் அந்த சத்தம்... அந்த சத்தம்...மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் ஒலி. சீரான இடைவெளிகளில் அடிக்கப்படும் மேளத்தின் ஓசை அது. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் நம் மனம் அதிலேயே இலயித்துவிடும். அந்த மாதிரி தாளம் கொண்டு சிறிதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. மற்றவர்கள் யாருக்கும் அது கேட்டதா என்று தெரியவில்லை. வெளியே வந்து பார்த்தால் அனைவரும் அவர்கள் இடத்தில் தூங்கப் போய்விட்டார்கள். அந்தச் சத்தம் தொடர்ந்து நமக்குக் கேட்டுக் கொண்டிருந்தது டம்... டம்...டம்... என்று. சத்தம் வரும் திசையைக் கணிக்க முடியாது. ஏனெனில் நாம் இருப்பது மலைப்பகுதி ஏதோ ஒர் இடத்தில் தோன்றும் ஒலியானது ஒவ்வொரு மலையிலும் மோதி எதிரொலித்து நமக்கு வந்து சேருகிறது. அதனால் அது எந்த திசையில் இருந்து வருகிறது ஏன ஊகிக்க முடியாது. அந்தக் காட்டில் இருக்கும் பழங்குடிகளோ அல்லது மலை கிராமத்தினரோ ஏதோ சடங்குக்காக அடிக்கும் மேளமாக இருக்கலாம் என்று தோன்றியது. இடை இடையே வேட்டுச் சத்தமும் கேட்டதனால் அது ஏதோ ஒரு கோயில் விழாவாக இருக்கலாம் என்றும் நினைத்தபோது அந்த சத்தம் அரைத் தூக்கத்திலிருந்த நம்மை ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. ஆப்பிரிக்காவில் வெவ்வேறு கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஒர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செய்தியைக் கடத்துவதற்கு இதுபோன்று மேளம் அடிப்பார்கள். மேளத்தின் தாளத்தில் கேட்பவர்கள் புரிந்து கொள்ளும் செய்தி இருக்கும். நாம் கோடிங் என்று சொல்வோமில்லையா அதுபோல. கேட்பவர்கள் அந்தச் செய்தியை மீண்டும் ஒலிபரப்புவார்கள். இவ்வாறு ஒர் இடத்திலிருந்து அடுத்தடுத்த ஊர்களுக்கு அந்தச் செய்தி ஒலியின் வேகத்தில் பரப்பப்படும். இப்படியாக நம் நினைவலைகள் ஆப்பிரிக்காவரை செல்லக் காரணமும் உண்டு. அது நம் தலைமாட்டில் பையினுள் அமைதியாக இருக்கிறது.கிறிஸ்டோபர் நோலனின் இண்டர்ஸ்டெல்லார் படம் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பூமியைப்போல் வேறு இடத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறதா என்று தேடுவார்கள். சனி கோளுக்கருகே உள்ள ஒரு வார்ம் ஹோல் வழியாக கருந்துளைக்கு அருகே கூப்பர் மாட்டிக் கொள்வார். அது காலம், இடம் இவற்றை கடந்த ஒரு பகுதி. அங்கு இருக்கும்போது காலம் செயல்படாது. Fifth dimension, Gravity என அறிவியலெல்லாம் பேசுவார்கள். அங்கிருந்து வீட்டில் உள்ள கடிகாரத்துடன் தொடர்பை ஏற்படுத்தி விடுவார் கூப்பர். மோர்ஸ் கோட் (Morse Code) மூலமாக தன் மகள் மர்ஃபுக்கு செய்தி அனுப்புவார். இதில் நமக்கு வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த "மோர்ஸ் கோட்" ஆகும். இது ஒரு அடிப்படையானத் தகவல் தொடர்பாகும். இது உலகம் முழுவதும் ஒரே வடிவத்தில் இருப்பதனால் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். நாங்கள் 'ஹேம் ரேடியோ'வில் பயன்படுத்துவோம். இதுகுறித்தும் பேசலாம் என்று அதற்குண்டான கருவிகளுடன் வந்திருந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் அக்கருவிகளை தலைமாட்டில் வைத்து படுத்திருந்ததால் இதுபோன்ற சிந்தனைகளெல்லாம் வந்திருக்கும் போல.காலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்ப வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஐந்து மணிக்கு ஜீப்கள் வந்தவுடனேயே கிளம்பினால்தான் ஆறு மணிக்கு ரோடோ மேன்சன் போகமுடியும் எனக் கூறியிருந்தனர். ஆனால் கிளம்ப வழக்கப்படி தாமதாமதமாகிவிட்டது. பேஸ் கேம்பிலிருந்து மறுபடியும் ஜீப் பயணம் ரோடோ மேன்சன் நோக்கி. விடியற்காலை நேரம் அடர்ந்த காட்டில் பயணம். அதிகாலை நேரத்தின் விலங்குகள், பறவைகள், நீரோடும் ஓசைகளைக் கேட்க நல்ல வாய்ப்பு என நினைத்த நமக்கு ஏமாற்றம். ஜீப்பில் குத்துப்பாடல்களை சத்தமாக வைத்துக்கொண்டு, அதையும் கேட்காமல் தங்களுக்குள் அதைவிட சத்தமாக பேசிக்கொண்டு வந்தனர் உடன் வந்த நண்பர்கள். பயணம் வேறு பொழுதுபோக்கு வேறு எனப் புரிந்தது. ரோடோ மேன்சனில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து மலை ஏற ஆரம்பித்தோம். எங்கள் பாதுகாப்பிற்காகவும், வழிகாட்டவும் வனத்துறையினர் வந்திருந்தனர். சற்றுச் செங்குத்தான பாதையாக துவங்கியது. அதில் தொடர்ந்து ஏறிக் கொண்டே இருக்க வேண்டும். ஆங்காங்கே சிறிது ஓய்வெடுத்து செல்லும் போது அவரவர் நடக்கும் வேகத்தைப் பொறுத்து பல குழுக்களாக ஏறிக்கொண்டு இருந்தோம். இதுபோன்ற வேளையில் சூரிய உதயம் மிக அழகாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அன்று மேகமூட்டமாக இருந்ததனால் சூரிய உதயத்தை காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வியூ பாயிண்ட் வருகிறது. மலை உச்சியில் உள்ள ஒரு சமதளமான இடம் அங்கிருந்து பார்த்தால் மற்ற மலைகள் எல்லாம் அழகாக தெரிகின்றன. மேகமே இந்த மலைக்கு கீழே போனது பார்க்க நமக்கு வியப்பாக இருந்தது. சிறிது நேரத்திலேயே விரைவாக கிளம்ப வேண்டும் அடுத்த இடத்துக்கு போக வேண்டும் என்று அனைவரையும் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ஏனெனில் மழை வரும் போல் இருந்தது மழை வந்துவிட்டால் மீசை மலை உச்சியை போய்ச் சென்றடைவது கடினமாக இருக்கும் என்று கூறப்பட்டது அனைவரும் அடுத்த பயணத்தை தொடர்ந்தோம். அதிலிருந்து வேறு மலைக்குப் பாதை இறங்கியது மறுபடியும் மற்றொரு மலைக்கு ஏறுகிறது மலையில் இறங்குவதும் ஏறுவதுமாக ஒரு மலையில் இருந்து இன்னொரு இடம் மலைக்கு நடந்து கொண்டிருந்தோம்.சில இடங்களில் ஏற்றம் செங்குத்தாக இருந்தது, சில இடங்களில் சமதளமாகவும் இருந்தது. இது போன்று நடையானது கால் வலிமையையும், நுரையீரலின் வலிமையும் நமக்கு எடுத்துச் சொல்லி விடும். கால் வலிமையாக இல்லை எனில் நடக்க இயலாது, நுரையீரல் நன்றாக வலிமையாக இருந்தால் தான் ஏற முடியும். காலையில் கிளம்பும்போது பிரட்டும், ஜாமும் கொடுக்கப்பட்டது. காலை உணவு அது தான் காலை உணவு. ஏனெனில், மலை ஏறும் பொழுது வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு ஏற முடியாது. அதே வேலையில் ஏறுவதற்காக ஆற்றலும் தேவைப்படும். அதற்காக பிரட், ஜாம், டீ மட்டும் கொடுப்பார்கள். மீசைப்புலி மலையை அடைந்தபோது உடலின் ஆற்றல் அற்றுபோய் அப்பாடா... என்றிருந்தது. அங்கிருந்து பார்க்கும் பொழுது கீழே குரங்கணி, கொழுக்குமலை, கொடைக்கானல், இடுக்கி அணை நீர் தேக்கம், ஆணை முடி சிகரம் இவையெல்லாம் தெரிகிறது. இப்போது இம்மலையின் உயரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. 8661 அடி உயரமுள்ள இது தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான மலையாம். ரோடோ மேன்சனிலிருந்து மூன்று, நான்கு கிலோமீட்டர் வந்திருப்போம். மழை வரும்போல உள்ளது விரைந்து இறங்க வேண்டும் என்றார்கள்.சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு மலை இறங்க ஆரம்பித்தோம். மலைச்சரிவில் வரையாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மலையில் இருந்து இறங்குவதற்கு வேறு பாதை உள்ளது. அதில் இறங்கும்போது சற்று விரைவாகவே இறங்கிவிடலாம். மூன்று கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டும். வழியில் நீரூற்றுகளையும் புல்வெளிகளையும் கடந்து போக வேண்டும். கடைசியில் ஓரிடத்தில் தடுப்பணை ஒன்று இருக்கிறது. அங்குச் சற்று நேரம் ஓய்வெடுக்கும்போது ஒவ்வொரு குழுவாக அனைவரும் இணைந்து கொள்ளலாம். அங்கிருந்து 10 நிமிடத்தில் ரோடோ மேன்சனை அடைந்துவிடலாம். தடுப்பணையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு அனைவரும் இணைந்து மீண்டும் நோக்கி நடந்தோம். மேன்சனுக்கு அருகில் வரையாடுகள் கும்பலாக எங்களைக் கடந்தன. எங்களுக்கு மிக அருகில் வந்து சென்றன. பிறகு மீண்டும் ஜீப் பயணம் பேஸ் கேம்ப் நோக்கி. நன்றாக பசிக்க ஆரம்பித்தது. பேஸ் கேம்ப் போய் சேர்ந்தபோது அங்கே மதிய உணவு தயாராக இருந்தது. புட்டு, கடலைக் கறி, சாதம், பழங்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவற்றை சாப்பிட்டு விட்டு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு கிளம்ப தயாரானோம். மீண்டும் ஜீப் பயணம் மூணாறுக்கு. அங்கிருந்து ஏற்கனவே நாங்கள் வந்த தனியார் பேருந்தில் ஏறி தேனியை வந்தடைந்தோம். தேனியிலிருந்து அவரவர் செல்லும் ஊருக்கு பிரிந்து செல்லவேண்டும். அனைவரிடமும் விடைபெற்று திருச்சி பேருந்தில் ஏறி வீடுவந்தடைந்தோம்.நன்றி: அன்பு, மதன்- பாலா பாரதி
Friday, 29 December 2023
பயணங்கள் முடிவதில்லை - மீசைப்புலி மலை
Subscribe to:
Post Comments (Atom)
அரிட்டாபட்டி
மிக அரிதாகக் காணப்படும் ‘ இலகுலீசர் சிற்பம் ’ உங்கள் ஊருக்கருகே உள்ளதே ! அதைப் பார்க்கத்தான் வருகிறோம் என்று திரு . சுக...
-
இராபர்ட் புரூஸ் பூட் இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் புரூஸ் பூட் இங்கிலாந்து நாட்டில், 1834 இல், பிறந்தவர். நி...
-
ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இந்நாளில் நாம், அவர் வாழ்வில் முக்கிய இடம்பெற்றுள்ள ஒரு ஊருக்குப் பயண ம் செல்வோமா? இ...
-
பயணங்கள் முடிவதில்லை – தமிழ் தாத்தா உ.வே.சா தடத்தில்: மிதிலைப்பட்டி (பகுதி 1) “மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்...









No comments:
Post a Comment