Monday, 25 December 2023

பயணங்கள் முடிவதில்லை: சந்திரன் சித்தப்பா

 ‘சார், இவரு நல்லபாம்பு கொத்தியே உயிரு பொழச்சவரு’

சந்திரனை நம்மிடம் அப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆனைமலையில் நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்புக்குச் சென்றிருந்த நமக்கு ஆழியாறு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. பெரியசோலை வனப்பகுதியில் நண்பர் பழனிராஜ் அவர்களுடன் வனத்துறை சார்பாக வேட்டைத்தடுப்பு காவலர்கள் முத்துராஜ், சந்திரன் ஆகியோருடன் தங்கியிருந்தோம்.
கணக்கெடுப்பை வனத்துறையினருடன் இணைந்து நடத்த வேண்டும். இதற்கென்று தனியாகப் பயிற்சி கொடுத்திருந்தார்கள். கணக்கெடுக்கும் பணி காலை சீக்கிரமாகவே ஆரம்பித்து முற்பகலிலேயே முடிந்துவிடும். மற்ற நேரங்களில், நாம் நமது மற்ற பணிகளைச் செய்யலாம்.
நம்முடன் இருந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களில் ஒருவரான சந்திரனைத்தான்
‘சார், இவரு நல்லபாம்பு கொத்தியே உயிரு பொழச்சவரு’ என்று
அறிமுகப்படுத்தினர். வனக்காவலர் முத்துராஜுக்கு சந்திரன், சித்தப்பா முறையாம். அதனால் எல்லோருமே அன்பாக அவரை 'சந்திரன் சித்தப்பா' என அழைத்தனர். அவர்தான் நம்மை தினமும் காட்டுக்குள் பத்திரமாக அழைத்துப்போவார். மெதுவாகவும், மென்மையாகவும் பேசக்கூடியவராக இருந்த சந்திரன் வனத்தைப்பற்றியும் வனவிலங்குகளை பற்றியும் நமக்கு நிறைய சொல்லிக்கொடுத்தார். சந்திரன், அவர்கள் ஊரான நாகர் ஊற்றின் ஊர்தலைவராகவும் உள்ளாராம்.
வனத்துறையில் வேட்டைத்தடுப்புக் காவலர் பணியில் அப்பகுதியிலுள்ள உள்ளுர், பழங்குடி மக்களை அமர்த்தியிருப்பார்கள். கணக்கெடுப்பு முடிந்து மற்ற நேரங்களில் பழங்குடி மக்களைப்பற்றி தெரிந்துகொள்ள அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருப்போம். ‘சந்திரன் சித்தப்பா’ மலசர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராம். ஐம்பது வயதிருக்கும், சிறிய உருவத்துடன் காணப்பட்ட சந்திரனை இராஜநாகம் தீண்டியுள்ளது. உலகிலேயே அதிக விஷமுள்ளது, நல்லபாம்பு என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இராஜநாகம், அது கொத்திவிட்டால் உடனடி மரணம் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்ற வியப்புடன் அதுபற்றி அவரிடம் பேச ஆரம்பித்தோம் .
நாம் தங்கியிருந்த பகுதி இராஜநாகங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதி, அங்கு இராஜநாகங்கள் அதிக அளவில் வாழ்கின்றனவாம். அங்குள்ள வீடுகளிலோ, வனத்துறை அலுவலகங்களிலோ இந்த நாகங்கள் வந்துவிட்டால் சந்திரனைத்தான் கூப்பிடுவார்களாம். இவர்தான் அவற்றைப்பிடித்து வனத்தில் விடுவாராம்.
“விஷமுள்ள பாம்ப புடிக்கும்போது அது கொத்திராதா? விஷத்துக்கு ஏதாவது மூலிகையோ மருந்தோ வெச்சிருப்பீங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க, சாமிய நெனச்சிக்கிட்டு நாகராஜா ஒன்னும் செய்யாதப்பான்னு சொல்லிக்கிட்டு அதப்புடிச்சி காட்டுல விட்டுருவேன்”
இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது, காட்டில் வாழும் பழங்குடிகளை அங்குவாழும் வனஉயிர்கள் ஏதோ ஒருவகையில் அடையாளம் காணும் கூறு இருக்குமோ என்ற ஐயம் நமக்குத் தோன்றியிருக்கிறது. அதுபற்றி உறுதியாகத் தெரியாதநிலையில் தொடர்ந்து அவரிடம் பேசுகிறோம்.
“பாம்பு ஒங்கள கொத்தியிருக்கா?”
“ஆமா ஒரு தடவ பாரஸ்ட் ஆபிஸ்ல நல்லபாம்பை புடிக்கும்போது அது கையில கொத்திருச்சி”.
“விஷம் ஏறியிருக்குமே? உடனே என்ன பன்னீங்க?”
“அதக்கொண்டுபோய் காட்டுல விட்டுட்டேன், கொஞ்சநேரம் கழிச்சு லேசா மயக்கம் வர்ரமாதிரி இருந்துச்சி அப்புறம் சரியாயிருச்சி”
வலக்கையில் தழும்பைக் காட்டியவாறு தொடர்ந்தார்.
“ஒரு தடவ யானை ஒன்னு என்னையை மறிச்சி காலைப்புடிச்சிகிருச்சி, சரி நம்ம கத அவ்வளவுதான், தூக்கி அடிக்கப்போகுதுன்னு பயந்திட்டேன், திடீர்னு அது என்னய விட்டுட்டுப் போயிருச்சி".
அவர் சொல்லும்போதே அந்தபயம் அவர் கண்ணில் தெரிய தொடர்ந்தார்,
“இன்னொரு தடவ கரடிகிட்ட மாட்டிக்கிட்டேன் கரடிதான் உள்ளதிலேயே பொல்லாதது, அது என்ன செய்யுமின்னே சொல்லமுடியாது, என் காலைபுடிச்ச கரடி, திடீர்னு என்ன நெனச்சதோ, விட்டுட்டு போயிருச்சி, ஆனா அதோட நகம் பெருசுல்ல அதுனாள கால்ல இருக்கிற சதை பிஞ்சு தொங்கிக்கிட்டிருந்ததுச்சி, எப்படியோ அதிலிருந்தும் தப்பிச்சிக்கிட்டேன்”.
காட்டில் வசிக்கும் பழங்குடிகள் அக்காட்டிலேயே விளையும் பொருட்களை உண்பதால் அவர்கள் உடலிலிருந்து வரும் வாடையை அவ்வனத்தில் வாழும் வனஉயரிகள் வேறுபடுத்திக் காணும் கூறினைப் பெற்றிருக்குமோ? என்ற நமது ஐயத்திற்கு அவர்களிடம் பதில் இல்லை.
சந்திரன் சித்தப்பா பேசப்பேச நாம் அவற்றைப் பதிவு செய்துகொண்டோம். பாம்பு மட்டும் என்றில்லை எந்த விஷஜந்துகளையும் அவர்கள் கொல்வதில்லையாம், அவை தங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டாலும் அவற்றைப் பத்திரமாக காட்டில் கொண்டு விட்டுவிடுவார்களாம்.
“ஒவ்வொரு உயிருக்கும் ஆயுசுன்றது கடவுள் கொடுத்திருப்பார் அதுவரைக்கும் அதுங்க வாழட்டும், நாம அதுங்கல கொல்லக்கூடாது”.
அன்று நேரம் கடந்துவிட்டதால் அத்துடன் எங்கள் பேச்சை முடித்துக்கொண்டோம்.
"அடுத்த தடவ எங்க ஊர் நாகரூத்துக்கு வாங்க சார்... நல்லபாம்ப பாக்கலாம்..."
அடுத்தமுறை அவர்கள் கிராமத்திற்கு சென்று சந்திரன் பாம்பை பிடிப்பதைப் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டே அன்று தூங்கப் போய்விட்டோம்.
அடுத்த ஆண்டு கணக்கெடுப்பில் நமக்கு சின்னாறு ஒதுக்கப்பட்டிருந்தது. கணக்கெடுப்பு முடிந்தவுடன் நமக்கு சந்திரன் நினைவுவர, மலசர்கள் வசிக்கும் கிராமத்தையும் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் சந்திரனைத் தொலைபேசியில் அழைக்க முயற்சித்தோம். அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. முத்துராஜை அழைத்து சந்திரன் சித்தப்பாவைப் பார்க்க நாகரூத்து போகவேண்டுமே எனச் சொன்னபோது, அவர் கூறிய பதில் நம்மை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது.
“நல்லபாம்பு கொத்தி, சந்திரன் சித்தப்பா செத்துப்போயிட்டார் சார் ….”.
சந்திரன் சித்தப்பாவின் சிரித்த முகம் மங்கலான ஓவியமாக நம் நினைவில் வந்து சென்றது.
- பாலா பாரதி




No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...