தங்களிடம் அடைக்கலமடைந்த ஊமைத்துரையைக் காட்டிக்கொடுக்க மறுத்து ஆங்கிலேயர்களுடன் போர்புரிந்து தங்கள் உயிர் நீத்த மருது சகோதர்கள் கட்டிய காளையார் கோயிலின் வெளியே கையில் துப்பாக்கியுடன் வேட்டையாடும் நிலையில் எதிரே கரடி ஒன்றின் சிலையையுடனும் காணப்படும் அச்சிலை நிச்சயம் நம்மைக் கவரும்.
யார் அவர்? ஏன் துப்பாக்கியுடன் வெளியே நிற்கிறார்? அந்தக் கரடி...?
அவர்..., கரடிக் கருத்தான்...
மருதிருவர்களால் வளர்கப்பட்டு பின்னாளில் சூழ்ச்சிக்குக் கட்டுப்பட்டு மருதிருவர்களைக் காட்டிக்கொடுத்த கரடிக் கருத்தானின் சிலைதான் அது.
யார் இந்தக் கரடிக் கருத்தான்....?
பெரியமருதுபாண்டியரோடு வேட்டைக்கு செல்லும் அளவிற்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவனாக விளங்கியவன் கருத்தான். ஒருமுறை வேட்டையின்போது கரடி ஒன்று பெரியமருதுவை பின்னாலிருந்துத் தாக்க முயற்சித்திருக்கிறது. கருத்தான் பாய்ந்துச் சென்று அந்தக் கரடியைத் தாக்கி, அதனோடு சண்டையிட்டு கரடியைக் கொல்கிறான். இதனைக் கண்டு அகமகிழ்ந்த பெரியமருது கருத்தானைக் கட்டியணைத்து பாராட்டுகிறார். தனது மகன் போல் வைத்து அவனுக்கு வளரி வீச்சு, துப்பாக்கிப் பயிற்சி மற்றும் தனக்கு தெரிந்த போர்க்கலைகள் அனைத்தும் கற்றுக் கொடுத்து, அவனை மாவீரனாக்குகிறார்.
பின்னாளில் மருதுசகோதரர்கள் கௌரி வல்லபரின் சதிச்செயலால் போரிலே தோற்றுக் காளையார்கோயில் காட்டுபகுதியில் மறைந்திருந்து வெள்ளையர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்திவந்தனர்.
இதனால் மிரண்டுபோன வெள்ளையர்கள் மருதுசகோதரர்களைச் சதிசெய்து பிடிக்க திட்டமிட்டுக் கௌரிவல்லபரிடம் யோசனை கேட்கின்றனர். துரோகத்துக்குப் பெயர்போன வல்லபன்,கரடிக் கருத்தானை நம் வசம் இழுத்தால் மருதுசகோதரர்களைத் தீர்த்துக்கட்டிவிடலாம் எனக் கூற,
அதன்படியே கருத்தானும் வல்லபரின் ஆசைவார்த்தையில் சிக்கி, மருதுபாண்டியருக்கு கஞ்சி கொண்டு போகும்போது பெரியமருதுவை காட்டிக் கொடுக்கிறான்.
சின்னமருது எப்படியாவது தப்பிச் சென்றுவிடலாம் எனச் சண்டையிடும்போது துப்பாக்கியால் சின்ன மருதுவின் தொடையில் சுட்டு அவரை மிருகத்தைப் போல் வேட்டையாடிக் கூண்டில் அடைத்து பிடிக்கின்றனர்.
அதன்பிறகு மருது சகோதரர்களையும் அவரது வகையறாக்கள் 500 பேரையும் 'கூண்டோடு கைலாசம்' என வெள்ளையர்கள் சொல்லி மருதிருவரை கூண்டில் வைத்தே தூக்கிலிட்டனர். இதுவே பின்னாளில் கூண்டோடு கைலாசம் என வழக்கானதாகக் கூறுவார்கள்.
அதன்பிறகே கௌரி வல்லபன் கரடி கருத்தான் சின்னமருதுவைச் சுட்டதைப் பாராட்டி, சின்னமருதுவை கரடியாகச் சித்தரித்து அவரை கருத்தான் சுடுவதுபோல ஒருசிலையை காளையார்கோவில் சின்னகோபுரத்தின் வாசலில் வைக்கிறான்.
அச்சிலையை அன்றிலிருந்து இன்றுவரை காட்டிக்கொடுத்த கரடிக் கருத்தான் சிலை என்றே அழைக்கின்றனர்.
இச்சிலையை முன்பு கோயிலின் உள்ளே வைத்திருந்தனர், மருதுபாண்டிய மன்னர்களைக் காட்டிக்கொடுத்த துரோகியின் சிலை கோயிலின் உள்ளே இருக்கக்கூடாது என்ற காரணத்தினால்
கரடிக் கருத்தான் சிலை காளையார் கோயிலின் சிறிய கோபுரத்திற்கு வெளியே வைத்துவிட்டனர்.
கரடிக் கருத்தான் சிலை காளையார் கோயிலின் சிறிய கோபுரத்திற்கு வெளியே வைத்துவிட்டனர்.
- பாலா பாரதி


No comments:
Post a Comment