Wednesday, 3 January 2024

பயணங்கள் முடிவதில்லை : மதுரை ஆனைமலை

மதுரைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போகவேண்டியிருந்தது. சரி அப்படியே ஒரு எட்டு ஆனைமலைக்கு போயிட்டு வரலாம் என்ற யோசனைத் தோன்றியது. காலை, சீக்கிரமாகவே நண்பர்கள் அம்புரோஸ், கண்ணன் ஆகியோருடன் கிளம்பிவிட்டேன். ஏற்கனவே பலமுறைகள் போயிருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் அதைப் பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்துடன்தான் கிளம்பினேன்.

ஆனைமலைதிருச்சியிலிருந்து செல்கையில் மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் செல்வதற்கு முன்பே வருகிறது. மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ளது. இது தோராயமாக நான்கு கிலோ மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும், 400 மீட்டர் உயரமும் கொண்ட மலையாகும். சற்று தொலைவில் இருந்து பார்த்தால், யானை ஒன்று படுத்தபடி ஓய்வெடுப்பதைப் போல் தோன்றுவதால், ஆனை மலை என்ற பெயரினைப் பெற்றிருக்கிறது.

சமணர்கள் இருந்த இடங்களுக்கு அருகிலேயே மலைகளில் குடைவரை கோயில்களை சைவர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவை. இங்கே சிறப்பாக நரசிம்மப் பெருமாளுக்கு ஒரு குடைவரைக் கோயில் அமைத்துக் கட்டியிருக்கின்றனர்.

முதலில் பஞ்சபாண்டவர் குகை என அழைக்கப்படும் பழந்தமிழ் கல்வெட்டைப் பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்தில் மலையின் மேற்புறமாகச் சென்றோம்.
மலை அடிவாரத்திலேயே தொல்லியல் துறைச் சார்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை நம்மை வரவேற்கிறது. யானையின் துதிக்கைப்போன்றமைந்த பகுதியில் காணப்படும் படிக்கட்டுகள் வழியே ஏற ஆரம்பித்தோம். முதல் முறை இம்மலையேற வந்து துன்பப்பட்டது மனதில் நிழலாடியது. அன்று அறிவிப்புப்பகைக்கு அருகில் நின்ற அவ்வூர்க்காரர்களில் சிலர் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்லுமாறு கூற, நாங்களும் குகை அருகில்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மலையேறினோம். மதிய வெயிலில் பாறையில் வெறும் காலோடு ஏறுவது கொடுமையானது.



எனவே இம்முறைப் பாதுகாப்பாக பாதணிகளெல்லாம் அணிந்துகொண்டுதான் சென்றோம். அரைமணிநேரம் பாறைகளில் ஆங்காங்கே காணப்படும் படிக்கட்டுகளின் வழியே ஏற, ஒருவழியாக அந்தக் குகையைக் கண்டோம். சிறிய குகைத்தான் 15 அடிக்கு10அடி அளவும் 5 அடிகள் உயரமும் இருக்கும். உள்ளே   கற்படுக்கைகள் உள்ளன. இவை அங்கு வாழ்ந்த சமணத்துறவிகளுக்காக ஏற்படுத்தப்பட்டவை ஆகும். உள்ளே வெயிலின் கடுமையில்லாமல் இதமாகவே இருந்தது. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் நடந்த சமண சைவ சண்டைக்குப்பிறகு சமணர்களின் குகைககளை சைவர்கள் ஆக்கிரமித்ததின் வெளிப்பாடாக குகையினுள் சிறிய சிவலிங்கம் ஒன்றும் நந்தியும் உள்ளன. குகையின் வாயிலில் பாறையின் தரைத்தளத்தில் சிறு குழிகளைக் காணமுடிந்தது. இதை அவர்கள் தாழ்வாரங்கள் அமைக்கப் பயண்படுத்தியிருக்க வேண்டும். இங்கிருந்து மதுரையின் பெரும்பகுதியைத் தெளிவாகக் காணமுடிகிறது.


        இங்கு நான் பலமுறை வரக்காரணம் இங்குள்ள பழந்தமிழ் கல்வெட்டே. குகைவாயிலின் மேலே வெட்டப்பட்ட இந்தக் கல்வெட்டு பிராமி எழுத்துக்கள் எனக் குறிப்பிடப்படுகிற பழைய தமிழ் எழுத்துகளால் ஆனவை. பார்ப்பதற்குத் தற்போதைய தமிழ் எழுத்துகள் போல இல்லாமல் இருக்கும் இவ்வெழுத்துகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இனிக் இக்கல்வெட்டில் என்ன செய்தி வெட்டப்பட்டுள்ளது எனப்பார்ப்போம். குகை முகப்பில் காணப்படும் கவ்வெட்டில், பொறிக்கப் பட்டுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?



இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

    ஒன்றும் புரியவில்லைதானே?

இவம் எனில் யானை என்று பொருள்.
குன்றம் என்றால் மலை. எனவே இவகுன்றத்து என்றால் யானை மலை என்று புரிகிறதல்லவா.
உறையுள் என்றால் தங்குமிடம். பாதந்தான் எனறால் படுக்கை என்று பொருள்.அத்துவாயி அல்லது அட்டவாயி எனில் சொற்பொழிவாளர்கள் என்று பொருள்.ஏரி ஆரிதன் மற்றும் அரட்ட காயிபன் என்னும் சொற்கள் இரு சமணத் துறவிகளின் பெயர்களாகும்.

     "ஆனை மலையில் தங்கிய,ஏரி ஆரிதன்,அரட்ட காயிபன் என்ற இரு சமணத் துறவிகள், சொற்பொழிவாற்றி, தங்கள் சமயத்தை பரப்பினர்"

எனப் பொருள் கொள்ளலாம் அல்லவா!

இன்னும் அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்லவேண்டுமாதலால் சற்று விரைவாகவே மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம். அடுத்துஆனைமலையை ஒட்டியுள்ள, நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோயிலுக்குச் செல்கிறோம். இக்குடைவரைக்கோயில் கி.பி.770 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட, மாறஞ்சடையான் பராந்தக நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனால் உருவாக்கப் பட்டதாகும்.
எனவே இம் மலையும், மலையைச் சுற்றியுள்ள இடமும் நரசிங்க மங்கலம் என்று அழைக்கப்பட்டு இப்போது நரசிங்கமாகிவிட்டது.


பெரும்பாலும் சமணர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலைகளில் குடவரைகளைச் சைவர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்காக ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கும் நிலையில், இங்கே வைனவர்கள் நரசிம்ம பெருமாளுக்கு ஒரு குடவரைக் கோயிலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.


கோயில் வளாகத்துக்குள் சென்றதும் வலப்புறம் ஒரு பாதை செல்கிறது. அதில் சென்றால் லாடன் கோயிலைப் பார்க்கலாம். அழகியக் குடைவரையாக அமைக்கப்பட்ட இக்கோயிலின் செவ்வக வடிவில் மைக்கப்பட்ட முன் மண்டபத்துடன் கூடிய சிறிய  கருவறையில் முருகக்கடவுள் தன் இடப்பக்கத்தில் தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவரைக்கு வெளியே முருகப்பெருமானுக்குரிய சேவல், முருகனுக்கு வலப்புறமும், மயில் இடப்புறமும் இடம்பெற்றிருக்கின்றது. பொ.ஆ எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் கிழக்கு சுவரில் பொ.ஆ எட்டு ஒன்பதாம் நூற்றாண்டில் இக்கோயிலுக்குச் செய்யப்பட்ட திருப்பணிக் குறித்த செய்தி வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளது.
அங்கிருந்து மீண்டும் கோயில் வளாகத்திற்கு வந்து யோக நரசிம்மர் கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை, முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.

அடுத்து, கருட மண்டபம், மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக நரசிம்மர். பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் இருபுறங்களிலும் உள்ள பாறைச்சுவர்களில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.
முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் குடையப்பட்ட இக்குடைவரையின் பாறைகளில் ஒருபுறம் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொருபுறம் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்படும் செய்தியாதெனில், முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன் மாறங்காரி என்பவன் அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான்.  இது நிகழ்ந்தது பொ.ஆ. 770ஆம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான் என்பதாகும்.

யோக நரசிம்மர் கோயிலில் இருந்துச் சற்றுத் தொலைவிலுள்ள சமணச் சிற்பங்கள் உள்ளப்பகுதிக்குச் சென்றோம். சிறிது தூரம் மலையேறினால் பெரியப் பாறையின் மீது செதுக்கப்பட்டிருக்கும் இவ்வழகியச் சிற்பங்களைக் காணலாம். முகப்பில், வரிசையாகப் புடைப்புச் சிற்பங்களாக மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி ,அம்பிகாஆகியோர் காட்சியளிக்கின்றனர். பொ.ஆ. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக் கருதப்படும், இச்சிற்பங்களின் கீழ், தமிழ், கிரந்தம், வட்டெழுத்து ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மெய்மறந்து சிற்பங்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம். இந்த உலகம் உள்ள வரை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆனைமலையும், அதிலுள்ள சிற்பங்களும்.
ஆனாலும் , மனம் வேதனைப் படத்தான் செய்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாய், நம் முன்னோர்களால் போற்றிப் பாதுகாக்கப் பட்டு வந்த இந்த ஆனைமலையும் அதன் சிற்பங்களும் பல்வேறு படையெடுப்புக்களாலும், சேதப்படுத்தப் படாத நிலையில், இவற்றின் மகத்துவத்தை அறியாத இன்றைய வீணர்களின் வேடிக்கைச் செயலால் தன் பொலிவினை இழந்து வருகிறது என்பது கசப்பான உண்மை. பாறைகளில் கிறுக்கல்கள், இலை வடிவப் படங்கள், அதனுள் பாயும் மன்மத அம்பு என இன்றைய இளைஞர்களின், கை வண்ணங்களை காணும்போதும், இந்த உலகிற்கு அன்பையும், அகிம்சையையும் மட்டுமே போதித்த, மாமனிதர்களின் காலடிச் சுவடுகள், பதிந்துள்ள இம் மலையில், இங்குள்ள பாறையில் காட்சியளித்துக் கொண்டிருக்கும், மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி, அம்பிகா ஆகியோரின் கண் முன்னே, நாள்தோறும் அரங்கேறும், ஒழுக்கச் சீர்கேடுகள், மனத்தை வலிக்கச்செய்கின்றன.
இவர்களின் அறியாமையை நினைத்து தேற்றிக்கொள்வதா? இல்லை நாம்தான் அவர்களுக்கு நம் முன்னோர்களைப்பற்றிச் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லையா? என்ற விடைதெரியாத கேள்விகளை மனத்தில் தாங்கியவாறே மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.



 நம்நாட்டில் பரவி வரும் மதுக் கலாசாரம், ஆனை மலையையும் விட்டு வைக்கவில்லை. எங்குப் பார்த்தாலும, உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், சிகரெட் துண்டுகள்.
வழியில்  இவ்வூரைச்சேர்ந்த வெங்கடேசன் என்பரைச் சந்தித்து பேசியதிலிருந்து இவரைப்போல தன்னார்வலர்கள் சிலர் இம்மலையைப் பாதுகாக்க முயற்சி எடுத்துவருவதும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் தன்னார்வலர்களையெல்லாம் ஒருங்கிணைத்து  இம் மலையை சுத்தப்படுத்தும் அரிய பணியைச் செய்துவருவதும் சற்று ஆறுதலான செய்திதான்.

 நண்பர்களே, ஆனைமலை, நம் முன்னோர்கள், நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் கலைச் செல்வம், காலப் பெட்டகம். வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறையேனும் சென்றுவாருங்கள் என்பது எனது சிறு வேண்டுகோள்.

நன்றி

- பாலா பாரதி

No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...