“மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்கமுடியாது. தமிழ்நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன, சிவஸ்தலங்களும், விஷ்ணு ஸ்தலங்களும், சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப்போல் தமிழ் தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்”.
தமிழில் மிகப்பழமையான சங்க நூல்களை வெளியிட்டுத் தமிழின் சிறப்பையும், தொன்மையையும் உலகம் அறியும்படி செய்த உ.வே.சா அவர்கள், ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்த நிகழ்ச்சிகள் மனத்தை உருக்கக் கூடியவை. தமிழ் மொழியின் பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில் அதாவது 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் தமிழுக்குப் புத்துயிர் ஊட்ட தோன்றிய பலரில் பெருமைக்குரியவர் உ.வே.சாமிநாதய்யர் என்கிற தமிழ்தாத்தா உ.வே.சா.
“….இவற்றுள் மிகப்பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்ற பிரதிகளிற் குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களையெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து, அழகு கெட்டு, மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவள் அணிந்துகொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப்பட்டிப் பிரதியே.”
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை தனக்கு மிதிலைப்பட்டியிலிருந்து கிடைத்தது என ஐயா குறிப்பிடுவதிலிருந்து அவ்வூரின் பெருமையை நாம் உணர்ந்து கொள்கிறோம் அல்லவா !
இத்தகைய பெருமைகள் கொண்ட அவ்வூரை காணச் செல்வோமா……
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடைவரைகளைக் காண்பதற்கான எங்களின் பயணத்திட்டத்தில் மிதிலைப்பட்டியும் இருந்தது. தேவர்மலை குடைவரைக்கோயிலைப் பார்த்துவிட்டு பூலாங்குறிச்சிக்குப் போகும்போது மிதிலைப்பட்டியைப் பார்க்க நம்மை மேலப்பனையூர் திரு கரு. இராஜேந்திரன் அவர்கள் அழைத்துச் சென்றார்.
மிதிலைப்பட்டி போய் சேர்ந்தபோது மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுமார் ஐம்பது வீடுகள் இருக்கும், நம்மை திரு சுப்பு வரவேற்றார். அவ்வூரின் அழகிய சிற்றம்பலக் கவிராயரிடமிருந்துதான் பழைய ஓலைச்சுவடிகளுடன் மணிமேகலையைப் பெற்றதாக உ.வே.சா குறிப்பிடுவார்.
“கவிராயர் வீடு எங்கேயிருக்கிறது? எங்களைக் கூட்டிப் போகிறீர்களா?"
“இந்த ஊரே ஐயாவோடதுதான், ஐயாவோட வாரிசுகள் சென்னனையில் இருக்கிறார்கள். எப்போதாவதுதான் வருவார்கள்”
போசிக்கொண்டே வந்த நாங்கள் இரண்டு மணித்துளிகளில் ஒரு பழைய வீட்டின் முன்பாக நின்றோம்
.
“இதுதான் ஐயாவோட வீடு”
இடிந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத, முழுவீடாக இல்லாமல் வீட்டின் முகப்புமட்டுமே சுற்றுச்சுவருடன் காணப்பட்டது, ஆனாலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
உ.வே.சா அவர்கள் 'என் சரித்திரம்' எனும் நூலில் இவ்வீட்டைக் குறிப்பிடுகிறார்.
"...அவருடைய பரம்பரையானது தமிழ் வித்துவான்களுடைய பரம்பரையாதலின், பல அரிய தமிழ்ச் சுவடிகள் பல நூற்றாண்டுகளாகச் சேகரித்து அவர் வீட்டிலே பாதுகாக்கப் பெற்றிருந்தன. அவருடைய முன்னோர்கள் பல ஸமஸ்தானங்களில் யானை முதலிய பரிசுகளும் மானியங்களும் பெற்றவர்கள். அவர் வீட்டின் பக்கத்தில் யானை கட்டிய கல்லையும் சிவிகையையும் பார்த்திருக்கிறேன். அங்கே கலைமகளும் திருமகளும் ஒருங்கே களிநடம் புரிந்தனர்."
கலைமகளும் திருமகளும் ஒருங்கே களிநடம் புரிந்த அந்த வீட்டின் இன்றய நிலை கண்ணீரை வரவழைக்கின்றது. நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றிருந்த நமது எண்ணங்களைச் சுப்புவின் குரல் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.
"இதுதான் யானையைக் கட்டிவைக்கும் கல்"
நான்கடி உயரமும் ஒன்றரைக்கு ஒன்றரை அடி கனமும் கொண்ட நட்டுவைக்கப்பட்ட கல்லை சுப்பு காண்பித்தார், அதில் எழுத்துகள் காணப்பட, பின்பு படித்தறிந்துக்கொள்ளலாம் என எண்ணி படமெடுத்துக் கொண்டோம்.
"யார் சிறந்த கவிராயர் என்பற்கு இங்குத்தான் பல போட்டிகள் நடக்கும் என எங்கள் முன்னோர் கூறக் கேட்டிருக்கிறேன்."
"போட்டியா... சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?"
"ஒருமுறை 'வெண்பாபுலி கவிராயருக்கும்', 'பாடுவார் முத்தப்ப செட்டியாருக்கும்', 'அறம்பாடி' யார் சிறந்த கவிராயர் என நிறுவ தேவையேற்பட, போட்டி மிதிலைப்பட்டியில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் முன்னிலையில் நடைபெற்றதாம். வெட்டப் பாடுவதற்கும், ஒட்டப்பாடுவதற்கும் இருவரும் தயாராகியுள்ளனர்.
வெட்டவும், ஒட்டவும் பாடுவது என்றால், முதலில் வெட்டப்பாடுபவர் பாட அங்கிருக்கும் ஆட்டுக்கிடாவின் தலை துண்டாக விழ வேண்டும். பின்னர் ஒட்டப்பாடுபவர் பாட துண்டான தலையைக் கிடாவின் உடலுடன் சேர வேண்டும். வெண்பாபுலிக் கவிராயர் வெட்டப்பாடவும், பாடுவார் முத்தப்ப செட்டியார் ஒட்டப்பாடவும் முடிவெடுக்கப்பட்டு. அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயரின் முன்னிலையில் அவரின் வீட்டுக்கு முன்பாக இதோ இங்கேதான் போட்டி ஆரம்பமானதாம். முதலில் பெண்பாபுலிக் கவிராயர் பாட ஆரம்பிக்க அருகில் சிவன்கோயிலில் இருந்த ஆட்டுக்கிடா போட்டி நடைபெறும் இடத்திற்குத் தானே வந்ததாம்.
'அலறிய வாயும் உளறிய வாயும் உலராது இருப்ப உன் சிரசு விழுந்திடவே'
என வெண்பாபுலிக் கவிராயர் பாடவே கிடாவின் தலை துண்டாகி கீழேவிழ,
பின்பு..
பின்பு..
'அலறிய வாயும் உளறிய வாயும் உலராது இருப்ப உன் சிரசு ஒட்டிடவே'
எனப் பாடுவார் முத்தப்ப செட்டியார் பாட, கிடாவின் தலை அதன் உடலில் ஒட்டிக்கொண்டதாம். பிறகுத் தலை ஒட்டியவுடன் கிடா கோயில் வாசலில் போய் நின்றதாம்."
சுவையாக சொல்லிமுடித்த சுப்பு மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சுவையான தேநீர் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை முழுமையாக கிடைக்கச் செய்த புண்ணிய பூமியாம் மிதிலைப்பட்டியை மீண்டுமொருமுறை வணங்கிவிட்டு விடைபெற்றோம்.
கிளம்பும்போது மிதிலைப்பட்டித் தொடர்பான மற்றொரு செய்தி நினைவில் வந்தது. அது அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயரைப் பற்றி உ.வே.சா அவர்கள் எழுதிவைத்துள்ளக் குறிப்புதான் அது. இனி உ.வே.சா ஐயா சொல்வதைக் கேளுங்கள்....
"அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயர் நல்ல செல்வர். அவரோடு நான் பழகிய காலத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றிய பல வரலாறுகளை எனக்குச் சொல்லியிருக்கிறார். தம்முடைய சொந்த அனுபவங்கள் பலவற்றையும் சொன்னதுண்டு. அவற்றுள் ஒன்று வருமாறு:
ஒருநாள் எங்கேயோ நெடுந்தூரமுள்ள ஒரு ஊருக்கு ஒரு கலியாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும் ஊருக்குத் திரும்ப எண்ணி ஒரு வண்டிக்காரனிடம் வண்டி பேசி அமர்த்திக் கொண்டார். இரவு முழுதும் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான்; அன்றியும்,”ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து விடுமாகையால், எனக்கு நாளைக் காலையில் சாப்பாடு போட்டு அனுப்பவேண்டும்” என்றும் தெரிவித்துக் கொண்டான். அவ்வாறே செய்விப்பதாக அவர் உடன்பட்டார்.
இராத்திரியில் வண்டி புறப்பட்டது. கவிராயர் அதிற்படுத்துக்கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது. வண்டிக்காரன் ஆனந்தமாகத் தெம்மாங்கு முதலியவற்றைப் பாடிக் கொண்டே வண்டியை ஓட்டினான். காளைகள் வேகமாகச் சென்றன. பாட்டுக்களைக் கவிராயர் கேட்டுப் பாராட்டிக்கொண்டே வந்தார். பின்பு வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப நிலையைப்பற்றி விசாரித்தான். அவர் தம்முடைய குடும்ப வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்:
“நான் இருப்பது மிதிலைப்பட்டிதான். எங்கள் முன்னோர்களெல்லாம் பெரிய வித்துவான்கள். அவர்கள் எவ்வளவோ நூல்களைச் செய்திருக்கிறார்கள், பல இட்களில் பரிசுகள் பெற்றிருக்கிறார்கள். முதலில் அவர்கள் சேலத்தைச் சார்ந்த ஒரூரில் இருந்தனர். அக்காலத்தில் தாரமங்கலம் கோயில் திருப்பணிகள் செய்த கட்டியப்ப முதலியார் என்பவரால் ஆதரிக்கப்பெற்று வந்தனர். அவர்களில் ஒருவராகிய அழகிய சிற்றம்பலக் கவிராயருக்கு இந்த மிதிலைப்பட்டி என்னும் கிராமமானது அக்காலத்தில் இந்தப் பக்கத்தில் ஜமீன்தாராக இருந்த வெங்களப்ப நாயக்கரென்பவராற் கொடுக்கப்பட்டது. அது சம்பந்தமான சாஸனம் எங்கள் வீட்டில் இருக்கிறது.
இராமநாதபுரம் சேதுபதிகளிடமிருந்து பலவகையான பரிசுகளை எங்கள் முன்னோர்கள் பெற்றிருக்கிறார்கள். மருங்காபுரி ஜமீன்தாரிடமிருந்தும் பலவற்றை அடைந்திருக்கிறார்கள். சிவகங்கையிலிருந்தும் அப்படக்ி கௌரவம் பெற்றிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் தமிழருமை அறிந்த அரசர்களும் ஜமீன்தார்களும் இருந்தார்கள். அவர்கள் வித்துவான்களை ஆதரித்தார்கள். ஆதனால் வித்துவான்களும் பிரபுக்களைப் போலவே கவலையில்லாமல் வாழ்ந்து வந்தார்கள்.
எங்களுக்கு இப்பொழுது ஜீவனாதாரமாக இருப்பதும் எங்கள் குடும்பத்தில் லஷ்மீகடாட்சம் குறையாமல் இருக்கும்படி செய்வதும் அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த கிராமமே. அவருடைய அன்னத்தைத்தான் இப்பொழுது நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.
என்ன கேட்கிறாயா?
என்ன கேட்கிறாயா?
“ ஆமாம் சொல்லுங்கள்" என்றான் அவன்.
“வெங்களப்ப நாயக்கர் செய்த பல தர்மங்களால் அவருடைய புகழும் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவரால் ஆதரிக்கப் பெற்ற பரம்பரையினராகிய நாங்களும் பிறரும் நல்ல நிலையில் இருக்கிறோம். அவருடைய பரம்பரையோ இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது. எங்கள் முன்னோர்களைப் போன்ற எவ்வளவோ பேர்களுக்கு அவர் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் பரம்பரையினர் கொடுத்துக் கொடுத்துப் புகழைச் சம்பாத்தித்தனர். ஆனாலும் பிற்காலத்தில் அக்குடும்பத்திற் பல பிரிவுகள் உண்டாயின. செல்வமும் குறைந்துவிட்டது. வெங்களப்ப நாயக்கருடைய பரம்பரையினர் யாரேனும் இப்போது எங்கேயாவது இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை. அவர்களுடைய நிலை எப்படி இருக்கின்றதோ கால சக்கரமானது இப்படி மாறிக்கொண்டே வருகிறது”
என்று சொல்லிக் கொண்டே வந்த அவர் அயர்ச்சி மிகுதியால் தூங்கி விட்டார்.
விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது. வீட்டை அடைந்த கவிராயர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டார். தம்முடைய வேலைக்காரனை அழைத்து வண்டிக்காரனுக்குப் பழையது போடும்படி சொன்னார். அப்பொழுது வண்டிக்காரன்,
“எனக்குச் சாப்பாடு வேண்டாம், நான் போய் வருகிறேன். உத்தரவு கொடுங்கள்”
என்று சொன்னான். அவர்,
“நீ ஊர்போய்ச் சேர்வதற்கு அதிக நாழிகை யாகுமே. சாப்பிட்டு விட்டுப்போ”
என்று வற்புறுத்தினார்.
வண்டிக்காரன் :
“இல்லை, இப்பொழுது எனக்குப் பசி இல்லை. போகும் வழியில் தெரிந்தவர்கள் வீட்டில் சாப்பிடுவேன்."
கவிராயர்: “சரி இதோ வாடகை ரூபாயை வாங்கிக்கொண்டு போ”
என்று சொல்லி ரூபாயைக் கொடுக்க ஆரம்பித்தார்.
“ரூபாய் தங்களிடமே இருக்கட்டும். நான் போய் வருகிறேன்”
என்று பணிவோடு அவன் சொன்னான்.
கவிராயர் திகைத்துவிட்டார். அவன் அதிக வாடகை விரும்பக்கூடுமோ வென்று எண்ணினார்.
“நான் பேசினது மூன்று ரூபாய்தானே?”
என்று அவர் கேட்டார்.
என்று அவர் கேட்டார்.
“இது கிடக்கட்டும் ஐயா! நான் போய் வருகிறேன். தாங்கள் வேறு ஒன்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது!”
என்று கம்பீரமாக வண்டிக்காரன் சொன்னான்.
“ஏனப்பா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் ஒன்றும் விளங்கவில்லையே!”
என்று இரக்கத்ததோடு அவர் கேட்டார்.
என்று இரக்கத்ததோடு அவர் கேட்டார்.
“ஐயா! நேற்று இராத்திரி உங்கள் முன்னோர்கள் கதையைச் சொல்லி வந்தீர்களே!அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் பரம்பரையிற் பிறந்தவன் அடியேன்.
ஏதோ தலைவிதி இப்படி என்னை வண்டியோட்டச் செய்தது. ‘என்ன செய்தாலும் கொடுத்ததைமட்டும் வாங்கக் கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். எங்கள் முன்னோர்களால் கொடுக்கப்பட்டவைகளில் ஒரு துரும்பையாவது உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ள என் மனம் சிறிதும் துணியவில்லை. மன்னிக்க வேண்டும். இவ்வளவாவது தங்களுக்கு நான் உபயோகப்படும்படி கடவுள் வைத்தது என் பாக்கியந்தான்’ என்று சொல்லிவிட்டுக் கவிராயர் மேலே பேசத் தொடங்குவதற்குள் வண்டியை அவன் ஓட்டிக்கொண்டே போய்விட்டான்.
கவிராயருடைய மனம் அவனுடைய கம்பீரத்தையும் வெங்களப்ப நாயக்கர் பரம்பரையின் பெருமையையும் அவனுடைய நிலையையும் நினைத்து இரங்கியது. அவர் கண்களில் நீர் ததும்பியது.
இந்த வரலாற்றைப் பிற்காலத்தில் எனக்குக் கூறும்பொழுதுகூட இந்தக் கடைசி சந்தர்ப்பத்தைச் சொல்லுகையில் அவர் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டன நாத் தழுதழுத்தது.
உயர்ந்த பரம்பரையில் பிறந்தவர்களுடைய கம்பீரமும் உதாரண குணமும் எக்காலத்தும் அழியாதவை. ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே” என்ற அருமையான வாக்கியத்திற்கு இந்த வரலாற்றைவிட வேறு சிறந்த உதாரணம் கிடைக்குமோ?
நன்றி
- பாலா பாரதி
(மிதிலைப்பட்டி கவிராயர்கள் வாக்கும் வாழ்வும் எனும் தலைப்பில் திருமதி இலட்சுமி அவர்கள் எழுதிய புத்தகத்தைச் சென்னை சி.ஐ.டி நகரைச் சேர்ந்த சிந்தனைக் கலைக்கூடம் வெளியிட்டுள்ளதாகக் கூறி அப்புத்தகத்தையும் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் சுப்பு).



No comments:
Post a Comment