இம்முறை சிவகங்கை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்க்க கிளம்பிவிட்டேன். திருச்சியிலிருந்துக் கிளம்பிய நாம் புதுக்கோட்டை வழியாக திருமயம் சென்று அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக திருக்கோட்டியூர் செல்வதாகத் திட்டமிட்டிப் போய்கொண்டிருக்கிறோம். 'பைபாஸ் ரோட்டில்' செல்வதால் பயணம் முன்பைவிட எளிதாகவே இருக்கிறது.
திருப்பத்தூர் வந்துவிட்டது தேநீர் அருந்திவிட்டு பயணத்தைத் தொடரலாமா? திருக்கோட்டியூர் நெருங்கிவிட்டது அதோ உயரமான கோபுரம் தெரிகிறதுப் பாருங்கள். கோயிலுக்குப் போவதற்கு முன்பாக இக்கோயிலைப்பற்றி பார்த்துவிடுவோமா?
நூற்றி எட்டு வைனவ திருக்கோயில்களில் ஒன்றான திருக்கோட்டியூரில் 'சௌமியநாராயணப் பெருமாள் கோயில்' உள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்புப் பெற்றது இக்கோயில்.
இக்கோயிலில் பெயர்காரணமாக கூறப்படும் புராணக்கதையொன்றில், முக்கடவுளரும், தேவர்களும், ரிசிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் கொல்வது எப்படி என கண்டறிந்த இடமாகக் கூறப்படுகிறது. கோஷ்டி அதாவது கூட்டம் சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப்பட்டதாக புராணக்கதையில் கூறப்பட்டாலும், திருக்கு + ஓட்டியூர் = திருக்கோட்டியூர் என்பதே பொறுத்தமாகத் தெரிகிறது. திருக்கு என்றால் பாவம் என்றுப் பொருள் எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்று பொருள் உணர்ந்துக் கொள்ளமுடிகிறது.
கோயில் நெருங்கிவிட்டது... தொலைவிலிருந்து பார்க்கும்போது உயரமான மதில் சுவர்களும் தென்னைமரங்களும் அழகாகக் காட்சியளிக்கின்றன. நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோயில் கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெருமாளின் நின்ற, நடந்த, இருந்த என முக்கோலங்களும் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். மூலவர் பெயர் சௌமிய நாராயணன், தாயார் மகாலட்சுமி.
திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில், திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் தொட்டிலில் உள்ள சந்தானகிருஷ்ணர் பிராத்தனை கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். மகாலெட்சுமி தாயார் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
'ஓம் நமோ நாராயணாய' எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது தளத்தில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாவது தளத்தில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருள் வழங்கிக்கொண்டிருக்கிறார்.
பிரகாரத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது, இந்த கிணறை "மகாமக கிணறு' என்று அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.
இராமானுஜர், கோபுரம் மீது ஏறி நின்று உபதேசம் செய்த இடத்தை, இன்றும் கோயிலுக்குள், குறுகிய பாதை வழியாக கோபுரத்தின் மேல்தளம் சென்றுப் பார்க்கலாம்.
பெருமாளை வழிபட்டுவிட்டு வெளியே வந்தபோது ஒரு செய்தி நமக்குச் சட்டென நினைவுக்கு வர, அருகில் இருந்தவர்களிடம் நம்பி அவர்களின் வீடு எங்கேயென வினவ, புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்த வீட்டைக் காட்டினார்கள். வீட்டுக்கு மேலேr
“திருக்கோஷ்டியூர் நம்பிகள் கல்திருமாளிகை” என்று எழுதியிருந்தது.
வாயில் முன்பாக சிறிது நேரம் நிற்கிறேன், நினைவுகள் ஆயிரமாண்டுகள் பின்னோக்கி நகர்கின்றன. நம்பி அவர்கள் இங்கு நின்றுக்கொண்டு கோயிலைப் பார்ப்பதுத் தெரிகிறது.
"யாரது?"
உள்ளிருந்துக்கேட்ட பெண் குரல் நம்மை நிகழ்காலத்துக்குக் கொண்டுவர,
“நான் திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறேன்”
நம் பதிலைக்கேட்டு வீட்டுக்குளிருந்து வந்த பெண்மணி நம்மை அன்பாக உபசரித்து, தனதுபெயர் செண்பகம் எனவும், தாங்கள் நம்பியின் வம்சா வழியினர் எனவும் கூறி வீட்டினுள் அழைத்துச்சென்று வீட்டைச் சுற்றிக்காண்பித்தார். அது பதினாறுகால்களுடன் கூடிய மண்டபம் போன்றிருந்ததை சுவர்களால் பிரித்து பல அறைகளாகப் பிரித்திருக்கின்றனர். அன்று முழுவதும் மின்சாரத்தடையாம் டார்ச் லைட் வெளிச்சத்திலேயே வீடு முழுதும் சுற்றிக்காண்பித்தார்.
நம்பி அவர்களின் படத்துடன்கூடிய சாமிப்படங்கள் நிறைந்திருந்த ஒரு வழிபாட்டு அறைக் காண்பித்து
"சேவிச்சுக்கோங்கோ"
எனக்கூற நாமும் வணங்கிவிட்டு, அங்கிருந்த நம்பியின் வரையப்பட்டப் படத்தை, அனுமதியோடு படம் எடுத்துக்கொண்டேன்.
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது
அருகிலிருந்தவர்கள் கோபுரத்தைக்காட்ட ஏதோ குறிப்பால் சொல்லவருகிறார்கள் என உணர்ந்து அவர்கள் காட்டிய திசையில் உற்று நோக்க, சட்டென உறைத்தது. கோபுரத்தின் நடுப்பகுதியில் ஒரு வளைவுப்போன்ற பகுதிக்குக்கீழே சிலையொன்று இருப்பதைக்காணமுடிகிறது. அது இராமானுஜர் சிலையாம் அங்கிருந்துத்தான் இராமானுஜர் மக்களுக்கு மந்திரத்தை உரக்கக் கூறினாராம்.
சரி... யார் இந்த திருக்கோட்டியூர் நம்பி எனக்கேட்கிறீர்களா?
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். திருவரங்கம் பெரிய நம்பியின் உபதேசத்தின்படி இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியைக் காண வருகிறார். சௌம்ய நாராயணப் பெருமாளை வணங்கிவிட்டு, நம்பியின் வீடு எங்கே என்று வினவி அவர் வீட்டையும் அடைகிறார். வீட்டிற்குள் இருந்தபடியே யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி "நான் செத்து வா!" என்கிறார். திருவரங்கம் திரும்பிய ராமானுஜர் மீண்டும் வர அதே பதில் கிடைக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொல்லி அத்தனை முறையும் நம்பி அவருக்கு உபதேசிக்க மறுத்துவிட்டார். கடைசியாக பதினெட்டாவது முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்கிறார். உள்ளே அழைத்த நம்பி இராமானுஜருக்கு "ஓம் நமோநாராயணாய" என்ற மந்திரத்தை உபதேசிக்கிறார்.
“இந்த ரகசியம் தெரிந்தவன் வைகுந்தம் செல்வான். நான் இப்போது உனக்கு உபதேசிக்கிறேன். நீ யாருக்கும் உபதேசிக்க கூடாது மீறினால் நரகம் புகுவாய்!”
என்ற சத்தியம் வாங்கிக்கொண்டு இராமானுஜருக்கு உபதேசிக்கிறார்.
ஆச்சாரியரிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற இராமானுஜர் திருவரங்கத்துக்குப் புறப்பட்டார். புறப்படுமுன் திருக்கோட்டியூர் கோயிலின் போபுரத்தின் மீது ஏறி கீழே இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு உரத்த குரலில் கூட்டத்தை நோக்கி,
ஆச்சாரியரிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற இராமானுஜர் திருவரங்கத்துக்குப் புறப்பட்டார். புறப்படுமுன் திருக்கோட்டியூர் கோயிலின் போபுரத்தின் மீது ஏறி கீழே இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு உரத்த குரலில் கூட்டத்தை நோக்கி,
“நீங்கள் இந்த உலகத்துத் துயரங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுபட்டு மோட்சம் பெற விரும்பினால், நான் கூறும் இந்த மந்திரத்தை என்னுடன் சேர்ந்து மூன்று முறை உச்சரியுங்கள்!”
என்று “ஓம் நமோ நாராயணாய” என்று கூட்டதை பார்த்து மூன்று முறை சொல்ல, கூட்டமும் மொத்தமாக அந்த மந்திரத்தை உச்சரித்தது.
இராமானுஜர் செய்ததை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த கோபம் கொண்டவராக
“உனக்கு நரகம் கிட்டும் என்று தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்க
“தங்கள் வாக்கை மீறினால் நரகம் கிட்டும் என்பதை நான் அறிவேன். நான் ஒருவன் நரகம் போனாலும், மற்றவர்களுக்கு உங்களுடைய உபதேசத்தால் மோட்சம் கிடைக்குமே”
என்று இராமானுஜர் பதில் கூற, இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணி “எம்பெருமானாரே!” என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி. எம்பெருமானாரே என்றால் எனக்கே பெருமான் ஆனீர் என்று பொருள்.
என்று இராமானுஜர் பதில் கூற, இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணி “எம்பெருமானாரே!” என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி. எம்பெருமானாரே என்றால் எனக்கே பெருமான் ஆனீர் என்று பொருள்.
மற்றொருமுறை இராமானுஜரை சிலர் விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயல, அதிலிருந்து இராமானுஜர் தப்பியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டு திருவரங்கத்துக்கு வந்த சமயம், இராமானுஜர் நம்பி வருகிறார் என்ற செய்தி கேட்டு உடனே அவரை வரவேற்க அங்கே செல்கிறார். நல்ல கொளுத்தும் வெய்யில். சுட்டெரிக்கும் காவிரி மணலில் நடந்துவரும்போது நம்பியைப் பார்த்தவுடன் அந்த வெய்யிலையும் பாராது மணலில் விழுந்து வணங்குகிறார். வைணவ சமயத்தில் வணங்கும்போது, “போதும் எழுந்துரு” என்று சொல்லும் வரை எழுந்திருக்க கூடாது. நம்பி இராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லாமலிருக்க, கூட வந்தவர்கள் என்ன செய்வது என்று புரியாமலிருக்க, கிடம்பியாச்சான் என்பவர் நம்பியைப் பார்த்து,
“இதென்ன? ஒரு பூமாலையை வெய்யிலிலே போடுவீர்களா? நீங்கள் அவரைக் கொலை செய்யப் பார்க்கிறீர்கள்”
என்று கோபமாக தாமே இராமானுஜரை எழுப்ப, நம்பி சந்தோஷமாக,
“இராமானுஜரின் மேல் அக்கறை வைத்துள்ள ஒருவரைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இனிமேல் நீங்கள்தான் இராமானுஜருக்கு உணவு செய்துதர வேண்டும்”
என்றுக் கூறுகிறார்.
கோயிலினுள் நுழைந்தவுடன் இடப்புறமாக இருக்கும் இராமானுஜர் மற்றும் நம்பி ஆகியோரின் சந்நிதிகளை மீண்டுமொறுமுறை பார்த்துவிட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பிவிட்டேன்.
நன்றி-சுஜாதா தேசிகன்(http://solvanam.com/?p=18475)






No comments:
Post a Comment