Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை...மாங்குளம்- மீனாட்சிபுரம் கல்வெட்டுகள்


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள மாங்குளம் என்ற ஊரிலுள்ள மீனாட்சிபுரத்தில் கழுகுமலை என்ற ஓவாமலையில் சமணர்கள் வாழ்ந்த குகைப் பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளே மாங்குளம் கல்வெட்டுகள். இவை மீனாட்சிபுரம் கல்வெட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை ராபர்ட் சீவல் என்பவரால்1882ஆம் ஆண்டு முதலில் பார்வையிடப்பட்டபோதும்1906ஆம் ஆண்டு கே.வி.சுப்ரமணிய ஐயரால் ஆய்வு செய்யப்பட்டு1924ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டில்பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச்சின்னங்களும்கல்வெட்டுகளும்எனும் தலைப்பில் கட்டுரை படிக்கப்பட்டது. புலிமான்கோம்பை கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை இந்த மாங்குளம் கல்வெட்டுகளே பழமையானவைகளாகக் கருதப்பட்டு வந்தன.
.

கிருஷ்ணகிரி சுகவன முருகன் அவர்கள்,விழுப்புரம் வீரராகவன் ஐயா ஆகியோருடன் அரிட்டாப்பட்டிக்கு வந்திருந்தேன். அரிட்டாபட்டிக்கு அருகிலேயே மாங்குளம் உள்ளது,அவற்றைப் பார்க்க கிளம்பினோம்.அரிட்டாப்பட்டியிலிருந்து கிடாரிப்பட்டி வந்து அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள மாங்குளம் சென்றோம். மீனாட்சிபுரம் ஊருக்குள் நுழைந்து,ஊருக்கு மேற்கேயுள்ள மலைப்பகுதிக்கு சென்றோம். மலையடிவாரத்திலேயே தொல்லியல் துறையினர் வைத்துள்ள தகவல் பலகை,இக்கல்வெட்டுகள் குறித்த செய்தியை அறிவிக்கின்றன.


இங்குள்ள கல்வெட்டுகள் பொ.இ 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று முன்பு கூறப்பட்டுவந்த நிலையில் 1993ல் ஓய்வு பெற்ற அகழாய்வுத்துறை உயர் அதிகாரி டாக்டர் ரமேஷ் அவர்கள்தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பதைபொருந்தல் கண்டுபிடிப்பு மேலும் வலுப்படுத்துகிறது என்றும்மாங்குளம் தமிழ் கல்வெட்டுப்பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்றும் குறிப்பிடுகிறார். காலிகட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரியரும்கேரள அகழாய்வு இதழின் கௌரவ paபதிப்பாசிரியரும் ஆன திரு இராகவ வாரியர் ( Raghava varier ) அவர்கள்இந்த அறிவியல் முறைப்படியான கண்டுபிடிப்புதமிழ் எழுத்து பொறிப்பு கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை உறுதி செய்கிறது என்பதோடுஇக்கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது என்கிறார்.


 இக்குகைகளில் வாழ்ந்த சமணதுறவிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்படுக்கைளைப் பற்றிக் கூறுகின்றன. அக்காலத்தில் இங்கு ஏராளமானத் துறவிகள் தங்கியிருதனர். இங்குள்ள ஆறு கல்வெட்டுகளும் பழந்தமிழ்(பிராமி) எழுத்துவடிவில் வெட்டப்பட்டுள்ளன. 

இம்மலையில் இயற்கையாக அமைந்துள்ள ஐந்து குகைகள்,சுமார் என்பது கற்படுக்கைகள்,ஐம்பது பேர்களுக்கு மேல் அமர்ந்து படிக்குமளவிற்கு வசதியான தளம் என்று ஒரு கல்விக்கூடம் செயல்பட்ட எச்சங்கள் காணப்படுகின்றன.மீனாட்சிபுர மலையில் நான்கு இடங்களில் தமிழ்நாடு தொல்லியல்துறை அகலாய்வு செய்துள்ளது. மலையின் மேற்பகுதியில் இரு இடங்களிலும்,கீழ்பகுதியில் இரு இடங்களிலும் நடத்தப்பட்ட அகழாய்வில் அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை எனகண்டறியப்பட்டது.

மலையின் மேல்பகுதியில் ஒரு கட்டடப்பகுதியும் கீழ்பகுதியில் ஒரு கட்டடப்பகுதியும் கண்டறியப்பட்டன. கருப்பு, சிவப்பு நிறப்பானை ஓடுகள், சொரசொரப்பான பானைஓடுகள், இரும்புஆணிகள், சுண்ணாம்புக்கலவை ஆகியவை கிடைத்தன. செங்கள் ஒன்றின் அளவு 35X18X6 செ.மீ ஆகும். முதல் கட்டடப் பகுதி வழிபாட்டுக் கூடமாகவும் இரண்டாவது கட்டடப்பகுதி சமையற் கூடமாகவும் இருந்திருக்கலாம். மலையின்மீது குகைகளுக்கு செல்லும் வழிகள் அம்புக் குறியிட்டு காட்டப்பட்டிருந்ததால் எங்களால் எளிதாக இவ்விடங்களுக்கெல்லாம் செல்ல முடிந்தது. முதல் குகையில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்குகையில் மேல்பகுதியில் வரலாற்று காலத்துக்கு முந்தைய பாறைஓவியங்கள் சிதைந்து அதன் எச்சங்கள் மட்டும் தெரிகின்றன.



மலைகள் முழுவதும் பாறைகள் சிதறிக் கிடந்ததைப் பார்க்கும்போது வானத்திலிருந்து யாரோ பாறைகளைக் கொட்டியிருப்பதைப் போலிருந்தது.இம்மலையிலுள்ள ஐந்து குகைத்தளங்களில் நாலு குகைத்தளங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் காடி வெட்டப்பட்டு மழை நீர் வடி விளிம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ஆறு தமிழ் பிராமி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இவை தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைத் தருகின்றன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னரின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. செழியன்,வழுதி போன்ற பாண்டியர் குடிப்பெயர்களும்,பட்டப்பெயர்களும்குறிப்பிடப்பட்டுள்ளன.மாங்குளம் கல்வெட்டில் தம்மம் (தர்மம்),அசுதன் (மகன்),சாலகன் (சகலன்) போன்ற பிராகிருதச் சொற்கள் கலந்து காணப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுக்களில்,கடல் அன் என்று பிரித்தே எழுதப்பட்டுள்ளது. உயிர் மெய் சேர்த்து கடலன் என எழுதும் வழக்கத்திற்கு முந்தையகாலகல்வெட்டுக்கள்இவை. 



பெரும்பாலும் இவை அனைத்துமே இந்தப்பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும்,படுத்து உறங்கவும்,பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன. இவ்விதம் அமைத்துக்கொடுப்பதற்கு கல்வெட்டுக்களில் பாளிய் என்ற சொல் பயன்பட்டுள்ளது. பாளிய் என்ற சொல்லிற்கு மேடானப் பகுதி என்றுப்பொருள். ஆனால்,இவற்றைப் பல அறிஞர்களும் பிராகிருதச் சொல் எனக்கொண்டுள்ளனர். பின்னர் காலங்களில் ஏற்பட்ட சமண,புத்தப் பள்ளிகளுக்கு இவையே அடிப்படையாகும். பாறையைச் செப்பனிட்டு கொடுக்கும் செயலிற்கு பிணவு,பிளவு,கொட்டுதல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.



கல்வெட்டு1
கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்
செய்தி:நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை)அமைத்துக் கொடுத்துள்ளார்.

கல்வெட்டு2
கணிய் நந்த ஸிரிய்குவன்
தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பாளிய்
செய்தி:நெடுஞ் செழியனுடைய சகலனாகிய,இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.

சிறப்புகள்:
நெடுஞ்சழியன் என்ற சங்க காலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு.
புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டிக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மாங்குளம் கல்வெட்டே காலத்தால் முந்தைய பழந்தமிழ் எழுத்தாக்க் கருதப்பெற்றுவந்தது.
சமணர் குகையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
கணிய் நந்தஸ்ரீகுவன் என்ற சமணத் துறவிக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்சழியனின் சேவகனும்,சகலையும் மற்றும் பல பொது மக்களும் குகையில் இருக்கை அமைத்துக் கொடுத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
கல்வெட்டு3

கணிய நந்தஸிரிகுவன்
வெள் அறைய் நிகமது
காவிதி கழிதிக அந்தை
அஸீதன் பிணஉ கொடுப்பிதோ
செய்தி:வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள,வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்பவன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல்,கயிறுகட்டு,பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது. வாணிகத்தில் சிறந்து விளங்குபவருக்குக் காவிதி என்று பட்டப்பெயர் வழங்குவது தெரிய வருகிறது. காழிதிகம் என்பது முத்தைக் குறிக்கும். எனவே அந்தை அஸிதன் ஒரு முத்து வணிகன் என்பது தெளிவு.

கல்வெட்டு4
கணிய நத்திக் கொடியவன்
செய்தி:கணிய என்பது சமண முனியைக் குறிக்கும் பிராகிருதச் சொல். நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.

கல்வெட்டு5
சந்தரிதன் கொடுபிதோன்
செய்தி:சந்திரிதன் கொடுபித்தோன்

கல்வெட்டு6
வெள்அறை நிகமத்தோர் கொட்டியோர்
செய்தி:நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக்குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.
இவ்விதம் இந்த6கல்வெட்டுக்களையும் தொகுத்துக் காணும்பொழுது இக்கல்வெட்டுக்கள் தமிழக வரலாற்றுப் புனரமைப்பிற்குப் பெரிதும் துணைபுரிவனவாக உள்ளன. முதல் இரண்டு கல்வெட்டுகளும் சங்க காலத்தில் வாழ்ந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனின் சகலையும்,பணியாளும் சமண முனிவருக்குச் செய்து கொடுத்த பாளிய் குறித்துப் பேசியது. மேலும் நிகமம் என்று அழைக்கப்பட்ட வணிகக்குழுக்கள் இருந்தமை தெரியவருகிறது. காவிதிப் போன்ற பட்டங்கள் வணிகர்களுக்கு வழங்கப்பட்டமையை அறியமுடிகிறது. சங்க காலத்தில் முத்து வணிகம் சிறப்புற்று இருந்திருப்பதை அறியலாம். பாண்டி நாட்டில் சமணத்திற்கு அரச ஆதரவு இருந்துள்ளமையினையும் அறியலாம்.


பேராசிரியர் க. நெடுஞ்செழியன் இந்த மாங்குளம்(மீனாட்சிபுரம்) கல்வெட்டுகளைப் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

"கி.மு.6ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புரட்சி நடந்தது. வேத மரபு ஒரு புறமும் வேத எதிர்ப்பு அணி ஒரு புறமுமாய் நின்று அறிவுப் போர் புரிந்த காலமும் அதுவாகும். வேத வைதீக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள் மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றன. இக்கோட்பாடுகளை வளர்த்துப் பரப்பிய அறிஞர்கள் ஏறத்தாழ62பேருக்கு மேலே இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களுள் புத்தர்,மகாவீரர்,பக்குடக்கை நன்கணியார்,பூரணர்,மற்கலிகோசாலர்,நரி வெரூஉத்தளையார்,முதலானோர் பெரிய சங்கங்களின் தலைவர்களாகவும் திகழ்ந்தவர்கள். இவ்வாறு அறிஞர்களுள் நால்வர் சங்கத்தமிழ் புலவர்களாகவும் இருந்தவர்கள். அவர்களுள் பக்குடக்கை நன்கணியாரின் சங்கமே பெரிதாம். ஆயினும் பக்குடக்கையார்,பூரனர்,மற்கலி கோசலர் ஆகியோர் ஒன்றினைந்து ஒரு புதியக் கோட்பாட்டை ஊழியல் எனும் கோட்பாட்டை நிறுவினர். இதனை பாலிமொழியில் ஆசிவகம் என்றனர்." மேலும் இதற்கு விளக்கம் தரும் பொழுது ஆசிவகத் தோற்றுநர்களின் வரலாற்றை விவரிக்கின்றார் அவ்வரலாறு.

"ஆசிவகம் எனும் சொல்லிற்கு வாழ்க்கை முறை என்பது பொருளாகும். இந்தச் சமயத்தில் மிக உயர்ந்த நிலை கழிவெண் பிறப்பு நிலையாகும். இக்கழிவெண் பிறப்பு நிலையை அடைந்தவர்கள் நல்வெள்ளையார் எனப் பாராட்டினர். இதற்கு முந்தைய நிலை வெண் பிறப்பு நிலை ஆகும். இச்சமய வரலாற்றில் நல்வெள்ளையார் எனும் சிறப்பினை அடைந்தவர்கள் மூவர் மட்டுமே. அவர்கள் பூரணர்,மற்கலி,கணி நந்தாசிரியன் இயக்கன் எனும் மூவரேயாவர். இம் மூவருள் பூரணரும் - மற்கலியும் சமகாலத்தவர்கள். கணி நந்தாசிரியன் இயக்கன் அவர்களை அடுத்து வந்தவர். இவர் ஆசிவகச் சமயத்தில் ஈடுபாடு கொள்வதற்கு முன்பு பாண்டிய வேந்தனும்,தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தந்தையுமாகிய பூதப் பாண்டியனின் கண்போல் நண்பர்களுள் ஒருவராக இருந்தார்.
மேலும்,குதிரை எடுப்பை விவரிக்கும் போது பூதப்பாண்டியன் இவரை வெஞ்சின இயக்கன் எனக் குறிப்பதால் இவரின் வீரமும் விளங்கும். பூதப் பாண்டியனின் படைத்தளபதிகளுள் ஒருவராகவும் இவர் விளங்கினார். பூதப்பாண்டியன் போரில் இறந்துவிட அதனால் துயர் தாங்காது அவன் மனைவி பெருங்கோப்பெண்டும் தீப்பாய்ந்து மாய,இத்துன்பியல் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட "வெஞ்சின விபக்கன்" ஆசிவகச் சமயத்தைத் தழுவி அதன் ஒப்புயர்வற்ற தலைவராகவும் உயர்ந்தார். தம் தந்தையின் உயிர்த்தோழராக இருந்தவர். சூழலின் காரணமாகவே (குடும்பச் சூழல்) துறவியாகிப் பொருந்தலைவராகத் திகழும் கனிநந்தாசிரியன் இயக்கன் என்பாருக்கு நெடுஞ்செழியன் அமைத்த கற்படுக்கைகளே மதுரை மாவட்டம் மாங்குளம் கல்வெட்டும் கற்படுக்கைகளும் ஆகும்.

இக்கல்வெட்டுச் செய்தி
மாங்குளம் மீனாட்சிபுரம் மலையில் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழ் உள்ளன. முதற்கல்வெட்டு ஒரே வரியில் உள்ளது.
"கணிய் நந்த அஸிரிய்ஈ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்"

கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவனுக்கு தருமமாய் நெடுஞ்செழியன் அலுவலனான கடலன் வழுதி என்பான் இப்பள்ளியைஉருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். பணஅன் என்பதற்கு அரசனின் அலுவலன் எனபது பொருள்.
இக்கல்வெட்டுப் பொறிப்பில் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அத்துடன் அன் ஆண்பால் ஒருமை ஈறு பணவன்,கடலன் என தனியே பிரித்து காட்டப்பட்டுள்ளது. சிந்து முத்திரைகளிலும் அன் ஈறு தனிப்பட காட்டப்பட்டு உள்ளது.

 நம் பண்பாடு சார்ந்த,மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள்,நெடிய வரலாற்றுச்சான்றுகள் இருந்தபோதும்,சுயநலத்திற்க்காக சிதைத்ததன் காரணமாகவும் எண்ணற்றவற்றை இழந்துவிட்டோம். நமது வரலாற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லை. நமது பண்பாட்டின் தொன்மையை எடுத்து சொல்லி வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் இன்றியமையாமையை அடுத்த தலைமுறைக்கு சொல்ல தவறி விட்டோம். இன்று அண்ணாந்து பார்த்து வியந்த மலைகள் நாளை தார் சாலைகளுக்கு ஜல்லிகளாக மாறும் காலம் வெகுதொலையில் இல்லை.

எனக்கு இயல்பாக மணத்தில் எழுந்க் கேள்விகள்.

#            கல்வெட்டுகள் வெட்டப்பட்ட காலத்தில் இருந்த தமிழ் இலக்கியத்தரத்தை               இக்கல்வெட்டுகளில் ஏன் காணமுடியவில்லை?

#            இக்கல்வெட்டுகளில் ஏன் பிழைகள் உள்ளன?
               
பார்வை நூல்கள்:
எண் பெருங்குன்றம் - முனைவர் வெ.வேதாச்சலம் (பக்7, 12)

மதுரையின் சமணம - -முனைவர் சொ.சாந்தலிங்கம்.

மாங்குளம் தமிழ்க்கல்வெட்டுக்கள்  - முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல்துறை

'ஆசீவகமும் ஐயனார் வரலாறும்'பேராசிரியர் க. நெடுஞ்செழியன் 

 பழந்தமிழ்க் கல்வெட்டுகள்   மா. இலாவண்யா
தமிழ் எழுத்தின் பழமை  -   EelamView
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - திரு. ஐராவதம் மகாதேவன்,வரலாறு ஆய்விதழ்6.
 தன்னிகரில்லாத தமிழ் - ச. கமலக்கண்ணன்&தமிழ்சசி,வரலாறு.காம் இதழ்23

"Discovery of a century" in Tamil Nadu - T.S. Subramanian, The Hindu dated May 01, 2006.

No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...