Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை : புலிகள் கணக்கெடுப்பு

முதலில் செய்தியைக் கேட்டவுடன் பயமாகத்தான் இருந்தது 

‘என்னாது காட்டுக்குள்ளபோய் புலிகளைக் கணக்கெடுக்கனுமா?’  

இருந்தாலும், ரொம்பநாட்களாகவே இந்த புலிகள் கணக்கெடுப்பில்  கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை  வென்றுவிட்டது.  அதனால்தான் நண்பர் பழனிராஜ் , ஆனைமலைப் புலிகள் காப்கத்திற்கு புலிகள் கணக்கெடுப்பிற்குப் போகிறோம் வருகிறீர்களா? எனக் கேட்டதற்குப் பெயர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். சரி...

.. நாம அங்க போறதுக்குமுன் இந்த புலிகள் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தைப் பார்த்துவிடுவோம்.



சுற்றுச்சூழலின் முதன்மை அங்கமாக விளங்கும் காடுகளைப்  பற்றியும் அங்கு நிகழும் மாற்றங்களைக் குறித்தும் புலிகளின் எண்ணிக்கையை  வைத்து அறிந்துகொள்ளலாம். காடுகளின் செழிப்பு அங்கு வாழும் புலிகளின் எண்ணிக்கையை வைத்தே புரிந்துகொள்ளப்படுகிறது.  ஒரு காட்டில் புலிகள்செழிப்பாக வாழ்கின்றன என்றால் அங்கு அவை விரும்பித் தின்னுணும் மான்கள் செழித்திருக்கின்றன எனப்பொருள். மான்கள் செழித்து  வாழ்கின்றன எனில் அவை  விரும்பித் தின்னும் புற்கள்  செழித்திருக்கின்றன எனப்பொருள். புற்கள் செழித்திருக்கின்றன எனில் சரியான அளவு மழை பெய்திருக்கிறது எனப்பொருள்.  இவ்வாறுதான் புலிகள் ஒருவனத்தின் செழிப்பின் குறியீடாகின்றது. உலகில் புலிகள் அதிகமாக வாழும் நாடு இந்தியா, இங்கு எடுக்கப்படும் தேசிய புலிகள் கணக்கெடுப்பை உலகமே உற்றுநோக்க இவைதான்  காரணங்கள்.  ஒரு காட்டிலிருந்துபுலிகள் வெளியேறுகின்றன  எனில் அக்காடு மோசமாக மாறி வருகின்றது  எனப்பொருள்கொள்ளலாம்.

"புலிக்குப் பயந்தவங்க என்மேலே படுத்துக்குங்க" என்று ஒருகதையில்வரும்.  புலியைக் கண்டால் யாருக்கும் பயம்தான். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. இன்று புலிகள் மனிதனைக் கண்டு பயப்படுகிற நிலைமை உள்ளது. அந்த அளவுக்கு மனிதன் புலிகளை  வேடையாடிக்  கொன்றிருக்கிறான். புலி இந்தியாவின் தேசிய  விலங்கு. அப்பெயருக்கு ஏற்றாற்போல் பல நூற்றாண்டுகளுக்கு  முன்னர் இந்தியாவில் ஆயிரமாயிரம் புலிகள் வாழ்ந்தன.  அப்போதெல்லாம் கிராமங்கள் அதிகம், காடுகளும் அதிகம், ஆகவேபுலிகளும் அதிகமிருந்தன.


புலி இந்தியாவின் தேசிய  விலங்கு. அப்பெயருக்கு  ஏற்றார்போல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்  இந்தியாவில் ஆயிரமாயிரம்  புலிகள் வாழ்ந்தன.  அப்போதெல்லாம் கிராமங்கள் அதிகம், காடுகளும் அதிகம், புலிகளும் அதிகம்.
புலிகள் கிராமங்களில் புகுந்து கால்நடைகளைத் தாக்க நேர்ந்த போதெல்லாம்  மனிதனுக்கும் புலிக்கும் நேரடி மோதல்  நிகழ்ந்தது.  அவ்வித சந்தர்ப்பங்களில் தன்னைத்  தாக்க வரும் புலியை வில் அல்லது ஈட்டியைக் கொண்டு எதிர்த்துப் போராடி புலியைக் கொல்பவன் வீரனாகக் கருதப்பட்டான். இத்தகைய மோதலில் உயிரிழந்தவர்களுக்கு 'புலிக்குத்துப்பட்டான் கல்' என்ற நடுக்கற்களும் ஏற்ப்படுத்தப்பட்டன. பிற்காலங்கலில்  காட்டுக்குச் சென்றுப் பாதுகாப்பான இடத்தில் இருந்தப்டி புலியைக் கொல்வதை வீரத்தின் அடையாளமாகக் கருத ஆரம்பித்தனர். வீரத்தைக் காட்ட மன்னர்கள் காட்டுக்குச்  சென்று வேட்டையாட ஆரம்பித்தனர்.
முகலாய மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் துப்பாக்கிகள்  அறிமுகமாயின. பின் பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றினர்.  அப்போதே புலிகளுக்கு நெருக்கடியான காலகட்டம் தொடங்கியது. வெள்ளைக்கார துரைகள் புலி வேட்டைக்குச்  செல்வ தென்றால் பெரிய படையே பின் தொடரும். கூடாரம் அமைக்கும். முரசு கொட்டி புலியை கதிகலங்கச்  செய்து துரைமார் முன் ஆஜர் படுத்துவதற்கென ஒரு கும்பல் கூட வரும். துரை ஒரு தடவை  காட்டுக்குச் சென்றால் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புலிகள் காலி.


இந்தியாவில் மொத்தம் 48 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் 4 காப்பகங்கள், ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, களக்காடு-முண்டந்துறை ஆகிய இடங்களில் உள்ளன.  இந்தியாவின் முக்கியமான புலிகள் காப்பகங்களில் ஒன்றான பன்னா காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்து  இன்று புலிகளே காணமுடியாத நிலை சுற்றுச் சூழலுக்கு  எச்சரிக்கை  விடுக்கும்  செய்தியாகும். 

புலிகளின்  எண்ணிக்கை குறைந்து வருவதற்கு முக்கியக் காரணங்கள்  நகர்ப் புறங்களின் வளர்ச்சி,  சுரங்கத் தொழில் ஆகும். உலகில் இந்தியா, நேபாளம்,  வங்கதேசம், சீனாஉள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர் வாழ்கின்றன.  கடந்த 1900 ஆம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.
19 ஆம் நூற்றாண்டில்,  இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969 இல்,  புலிகள் எண்ணிக்கை    2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.  2011ஆம் ஆண்டில், 1,706 புலிகள் உள்ளதாகத் தெரியவந்தது.  கடந்த 2006இல் இருந்த எண்ணிக்கையை விட 296 புலிகள் அதிகமாகி தற்போதைய நிலவரப்படி 2,220 உள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை தற்போது 29ஆக உயர்ந்துள்ளது உண்மையில் சற்று மகிழ்ச்சியானசெய்திதான்.


உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின்  எண்ணிக்கையில்  97 சதவீதம் அழிந்துவிட்டனவாம். உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு,  அது விவசாய நிலங்களாகவும்,குடியிருப்புகளாகவும்  மாறிவிட்டது முக்கியக் காரணமாக உள்ளது.

“இந்தியக் காடுகள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து சுரங்கத் தொழிலின் வளர்சிதான்” என்கிறார் காட்டுயிர் ஆர்வலரான  மோகன்ராஜ்.
            
“ஒரு சுரங்கம் அமைக்கப் படுவதற்காகப் பெறப்படும் அனுமதிக்கான அடிப்படையே அந்தப் பகுதி காடு அல்ல என்ற சூழலை உருவாக்குவதிலிருந்துதான் தொடங்குகிறது. சுரங்கத் தொழில்  காட்டுச் சுழலை எவ்வாறு சீரழிக்கும் என்பதற்கு கர்நாடத்தின் 'குத்ரேமுக்காடு' ஒரு உதாரணம். ஒருகாலத்தில் காட்டுயிர்களின் சொர்க்கமாகக் காட்சி அளித்த அந்தக் காட்டில் இன்றைக்கு விலங்குகளைத்  தேட வேண்டி இருக்கிறது”. 

என்கிறார் இயற்கையியலாளரான  தியோடர் பாஸ்கரன் அவர்கள்.


இதில் வேடிக்கை என்ன  தெரியுமா? ஆந்திரத்திலுள்ள நாகார்ஜுன சாகர் புலிகள் காப்பகம், சத்தீஸ்கரில் உள்ள இந்திராவதி புலிகள் காப்பகம், ஒரிசாவில் உள்ள சிமிலிபல் வனவிலங்கு காப்பகம்,பிகாரில் உள்ள  வால்மீகி வனவிலங்கு காப்பகம், ஜார்க்கண்டில் உள்ள பாலமாவ் புலிகள் காப்பகம் போன்ற  மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின்  ஆளுமைக்கு உள்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன. அதாவது, வளர்ச்சிப்  பணிகள்  என்கிற  பெயரில்  பன்னாட்டு  நிறுவனங்கள் தொழிற்சாலைகளையும், கனிம வளங்களை எடுக்கும் சுரங்கங்களையும் அமைக்க மாவோயிஸ்டுகள் தடையாக இருப்பதால், புலிகளும் ஏனைய வனவிலங்குகளும் மனித நடமாட்டத்தால் பாதிக்கப்படாமல் தங்களது இனப் பெருக்கத்தைத்  தொடர முடிகிறது என்று தெரிகிறது.

புலிகள் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட்ட முன்னால்மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கும் கருத்து சிந்தனைக்குரிது.

"வேட்டையாடுபவர்கள், வனங்களை அழித்துக் குடியிருப்புகளை உருவாக்க முயலும் ரியல் எஸ்டேட்காரர்கள், கனிம வளங்களைக் கொள்ளையடிக்க முனையும் மாஃபியா கும்பல்களிலிருந்து வனவிலங்குகளைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால், வளர்ச்சிப் பணிகளை எப்படி முடக்கி வைக்க முடியும்? அனல் மின்நிலையங்கள் அமைக்க நமக்கு நிலக்கரி தேவைப்படுகிறதே? நீர் மின்நிலையங்கள் அமைக்கும்போது மனித நடமாட்டம் அதிகரிக்காமலும், காடுகள் அழிக்கப்படாமலும் இருக்குமா? நெடுஞ்சாலைகள் வனங்களின் வழியாகத்தானே அமைக்கப்பட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவையெல்லாம்தான் வனவிலங்குகளுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால்கள்'' 

என்று ஏற்றுக் கொள்கிறார் முன்னால் அமைச்சர்  ஜெய்ராம் ரமேஷ்.


யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று விடுகின்றன என்றெல்லாம் நாம் ஆத்திரப்படுகிறோம். அதேநேரத்தில், வனவிலங்குகள் வாழும் காடுகளை நாம் அழித்து, அவைகள் நிம்மதியாக வாழ வழியில்லாமல் செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். காடுகள் வழியாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்போது, நமது நாகரிக வாழ்க்கைக்கும், வசதிக்கும் மின்சாரம் உருவாக்கக் காடுகள் அழிக்கப்பட்டு அணைகளும், நீர்மின் நிலையங்களும் அமைக்கப்படும்போது, நமது குடியிருப்புகளுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சாலைகளுக்காகவும் காடுகள் காணாமல் அழிக்கப்படும்போது, அந்த வனவிலங்குகளின் கதி என்னாகும் என்று யாராவது யோசித்துப் பார்க்கிறோமா?

புலி வேட்டை 1970 ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டு விட்டது என்றாலும் இந்தியாவின் காடுகளில் புலிகள் கள்ளத்தனமாகக் கொல்லப்படுகின்றன என்பது கசப்பான உண்மை. பல நூறு புலிகள் இவ்விதம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
புலிகளின் தோல், எலும்பு, பற்கள், நகம் என ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு மருத்துவ குணம் இருப்பதாகச் சீன மருத்துவம் கூறுகிறது.சீனா, தைவான், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சீன மருத்துவம் மீது நம்பிக்கை நிலவுகிறது இக்காரணத்தால்தான் இந்தியாவில் திருட்டுத்தனமாகப்புலி வேட்டை நடக்கிறது என்கிறார்கள், புலியின் உறுப்புகள் இந்தியாவிலிருந்து  கள்ளத்தனமாகக் கடத்தப்படுகின்றன.இதில் பெரும் பகுதி சீனாவுக்குப் போய்ச்சேருகிறதுஎன்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்குக் கரை வரை பல நாடுகளிலும் புலிகள் இருந்தன.  இவற்றில் பல இனங்கள் அழிந்து விட்ட்ன. இப்போது ஆசியாவில் ஒரு சில நாடுகளில் மட்டுமே புலிகள் உள்ளன. இந்தியப் புலி இனம்
'பெங்கால் டைகர்' என அழைக்கப்படுகிறது. இது வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் உள்ளது.  தவிர, மலேயப் புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியப் புலி, தென் சீனப் புலி, இந்தோசீனா புலி என பிற புலி வகைகளும் உள்ளன


உலகம் மனித இனத்துக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல என்கிற உண்மையை நாம் உணர்ந்தால் மட்டுமே வனமும், வன விலங்குகளும் காப்பாற்றப்படும். வனவிலங்குகளும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படாவிட்டால், மனித இனம் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. இயற்கை சுனாமிகளாக, பூகம்பங்களாக நம்மையும் அழித்துவிடும்.

இந்தியாவில் சிறந்த புலிகள் காப்பகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2010 இல் நடைபெற்ற கணக்கெடுப்பில் 13இக்கும் அதிகமான புலிகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டிருந்தது. கடைசியாக நடந்த கணக்கெடுப்பில் அங்கு 29 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்குத் தேவையான நீராதாரங்கள்அதிகரிப்பே இப்புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்காரணம் எனக் கூறப்படுகிறது. மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க தகவல் தொடர்பை ஏற்படுத்தியதற்காகவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தக்காப்பகம் இரண்டு கோட்டங்களாகவும், ஆறு வனச்சரகங்களாகவும்   பிரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டுப்பன்றிகள்,செந்நாய்கள்,முள்ளம்பன்றிகள், பலவேறுவிதமான மான்கள், ராஜநாகம், பல்வேறுபறவைகள் முதலியன உள்ளன. இங்கு 'எலிபெண்ட் அலர்ட் இண்டிகேட்டர்எஸ.எம்.எஸ் சிஸ்டம்', வன உயிர்கள் நடமாட்டம் குறித்து தனியான தொலைபேசி இணைப்புகள் எனப் பல தகவல் தொடர்புச்சாதனங்கள் மூலம் வனவிலங்குகள் குறித்து அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்குமிடையே மோதல் பெருமளவில் குறைந்துள்ளது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட விலங்குகள் கணக்கெடுப்பு இப்போது ஆண்டுக்கு இருமுறைகள் அதாவது கோடைகால மற்றும் குளிர்காலக் கணக்கெடுப்பு எனநடத்தப்படுகிறது. இந்தவருட குளிர்காலக் கணக்கெடுப்பு டிசம்பர் மாதத்தில் நடைபெறவேண்டியிருந்தது. தமிழகத்தில் மழைகாரணமாக ஐனவரி 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திரு.பழனிராஜ் அவர்கள் தலைமையில் 18 தன்னார்வலர்கள் இக்கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வந்திருந்தோம்.

முதல்நாள் 'அட்டகட்டி வனப்பாதுகாப்பு பயிற்சிமையத்தில்' கணக்கெடுப்பபுப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டது. இதில் வனஅலுவலர்கள், வேட்டைத்தடுப்புகாவலர்கள், தன்னார்வலர்கள் முதலியோர் கலந்துகொண்டனர். மாவட்ட வனஅலுவலர் திருஅசோகன் கணக்கெடுப்புப் பயிற்சியைத் துவக்கிவைத்துப் பேசினார். வனத்துறை அதிகாரி திரு.ஆறுமுகம் வனவிலங்குகள், பறவைகள் குறித்து அரிய தகவல்களை ஒளிப்படம் மூலம் விளக்கியது எங்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருந்தது. குறிப்பாக முதல்முறையாகக் கலந்துகொள்ளும் என் போன்றவர்களுக்குத் தெளிவாகப் புரியுமாறு அமைந்தது. திருப்பூர் மாவட்ட வனஅலுவலர் திரு.பெரியசாமி அவர்கள் புலிகளைப்பற்றியும், காமிராவில் பதிவான படங்களைக்காட்டியும் வனப்பாதுகாப்புக் குறித்தும் கூறியத் தகவல்கள் எனக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலை இயக்குனர் அவர்கள் கூறிய வனம் சார்ந்த உயிரினங்களின் தன்மைகள், வனப்பாதுகாப்பு குறித்து பல அறிய தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வனஅலுவலர் செல்வி.திவ்யா அவர்களும் விலங்குகள், பறவைகள் கணக்கெடுப்புபற்றி பேசியதும் எங்களுக்குப் பயனள்ளதாக இருந்தது. வனத்துறை அதிகாரி திரு.தங்கராஜ் பன்னீர் செல்வம் அவர்கள் காட்டுக்குள் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கமளித்தார்.

புலிகளுக்கும், சிறுத்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் காலடித்தடங்கள் மூலமாகவும் அவற்றின் எச்சங்கள் மூலமாகவும், மரங்களில் ஏற்படுத்தும் நகக்கீறல்கள் மூலமாகவும் எவ்வாறு வேறுபடுத்திக் காண்பது என்று படங்கள் மூலம் விளக்கினார்கள். புலிகள் மட்டுமல்லாது அக்காட்டில் வாழும் மற்ற விலங்குகளை அவற்றின் காலடித்தடங்கள், எச்சங்கள், வேட்டையாடிய பின்பு மீதமிருக்கும் இரையின் உடற்பகுதிகளைக்கொண்டு கணக்கிடுவதுப் பற்றியும்,  G P S கருவியைக்கொண்டு வழித்தடங்களைப் பதிவுசெய்யும் முறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது. கணக்கெடுப்பின்போது விலங்குகள் மட்டுமல்லாமல், பறவைகள், நிலஅமைப்புகள் குறித்தும் தகவல்களை அதற்குரிய படிவத்தில்(Data Sheet) நிரப்புவது குறித்தும் விளக்கப்பட்டது. கோவைமாவட்ட வனப்பகுதி அமராவதி, டாப்சிலிப், பொள்ளாச்சி, வால்பாறை, மானப்பள்ளி, உடுமலைப்பேட்டை முதலிய வனசரகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் பலஉட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. நான் அமராவதி பகுதிக்கு அனுப்பப்பட்டேன். 

அமராவதி வனப்பகுதிக்குச் செல்லும் அனைவரும் அமராவதி வனஅலுவலகத்தில் அன்று மாலையே ஒன்று கூடினோம். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பீட்களுக்கு செல்லதனியாக வாகன ஏற்பாடும் செய்திருந்தனர். நாங்கள் ஆறுபேர் தளிஞ்சி மற்றும் மஞ்சம்பட்டி பகுதிகளுக்குச் செல்வதற்காக எட்டு நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட ஒரு ஜீப்பில் வனத்துறையினருடன் பயணமானோம்.

போகும் வழியில் காடுகள் குறித்தும் வனவிலங்குகள் குறித்தும் நாம் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதிலளித்துக்கொண்டே வந்தனர் வனத்துறையினர். தளிஞ்சி வந்ததும் அங்குப் போகவேண்டியவர்கள் இறங்கிக்கொள்ள, நான், தெய்வநாயகி, கௌதம் ஆகிய மூவரும் வனத்துறையினர் நால்வரும் மஞசம்பட்டி நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். மஞசம்பட்டி வந்துசேர இரவாகிவிட்டது. அங்கு வனத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் ஏற்கனவே அங்கிருந்த மற்ற வனத்துறையினருடன் சேர்ந்துகொண்டோம். சமையலுக்குத் தேவையான பொருட்களை நாங்கள் எங்கள் வாகனத்தில் எடுத்து சென்றதனால் போனவுடன் சமையல் ஆரம்பமாகியது. சிறிது நேரத்திலேயே சுடச்சுட சுவையான ரவாஉப்புமா பரிமாறப்பட்டது. அடுத்தநாள் காட்டுக்குள் போய் விலங்குகளை அவற்றின் இயல்பான நிலையில் காணப்போகும் நிகழ்வை நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்.

மறுநாள் காலை 6 மணிக்கே கிளம்பிவிட்டோம். என்னை திரு.ராஜ் மற்றும் திரு.ஜோதிமணி ஆகிய வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வனத்தினுள் அழைத்துச் சென்றனர். காடுகளில் உள்ள புலிகளை எப்படிக் கணக்கிடுவது? புலிகளின் காலடித் தடங்களை வைத்தும்,அவற்றின் கழிவுகளை வைத்தும், அவை மரங்களில் ஏற்படுத்தும் கீறல்களைக் கொண்டும் அவை நடமாடும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு வைக்கப்படும் கேமராக்கள் மூலமாகப் படமெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு புலிக்கும் அதன் உடலிலுள்ள கோடுகள் மனிதனின் கைரேகைப் போல வேறுபடும். அதேபோல காலடித்தடங்களுக்கும் வேறுபாடு உள்ளது. இத்தகைய ஒப்பீட்டு ஆய்வின் மூலம் புலிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கூறமுடியும். கணக்கெடுப்பின் போது TrapCamera முறை பின்பற்றப்படுகிறது.
ஒருநாளைக்கு ஐந்து கிலோமீட்டர்கள் தூரம் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.நேர்கோட்டுப் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள பகுதியில் காணப்பட்ட விலங்குகளின் காலடித்தடங்கள், எச்சங்கள், மரங்களில் காணப்பட்ட நகக்கீறல்கள், பறவைகள், புற்கள், நிலஅமைப்புகள் முதலியவை முறையாகப் பதிவுசெய்யப்பட்டன. அனைத்துப் பகுதிகளில் பெறப்படும் தகவல்கள் ஒருங்கினைக்கப்பட்டு அதிகாரப் பூர்வமான முடிவு பின்னர் வெளியிடப்படும் எனத்தெரிவித்தனர்.

மனிதர்களின் வியர்வை வாடையை தொலைவிலேயே தெரிந்துகொள்ளும் புலிகள் உடனே அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடும். கணக்கெடுக்க போகிறவர்கள் அவற்றை நேருக்குநேர் சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. நீர்அருந்த நீர்நிலைகளுக்கு வரும்போது அவை விட்டுச்செல்லும் காலடித் தடங்கள், அவற்றின் எச்சங்கள், மரங்களில் காணப்படும் அவற்றின் நகக்கீறல்கள், இவையெல்லாம் கணக்கிடப்படுகின்றன. நீர்நிலைகளுக்கருகில் காணப்படும் புலிகளின் காலடித்தடங்களைப் படமெடுப்பதன்மூலமாகவும் பிளாஸ்டர்ஆப்பாரிஸ் மாவு ஊற்றி அச்சு எடுப்பதன் மூலமாகவும் பதிவு செய்வார்கள்.   

புலிகள் தங்கள் எல்லையை மரங்களில் நகக் கீறல்களை ஏற்படுத்தியும் சிறுநீர் கழித்தும் பிற புலிகளுக்கு  தெரியப்படுத்தும்.காலடித்தடங்களை வைத்து ஒரு பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கணித்தபின் அங்கே சென்சாருடன் கூடிய தானியங்கிக் கேமராக்களைப் பொருத்துகிறார்கள். இருபுறமும் சென்சார்கள்பொருத்தப்பட்ட மரங்களுக்கு இடையே வரும் புலி, அப்பாதையைக் கடக்கும்போது கேமரா தானாகவே இயங்கி அதைப் படமெடுக்கும். இந்த முறைக்கு ‘கேமரா ட்ரோப்பிங்' என்று பெயர். இக்கேமராக்களிலபுலி மட்டுமல்லாமல்  மற்றவிலங்களும் பதிவாவதுண்டு.
புலிகள் மீதான வரிகள் ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். காடுகளில் ஆங்காங்கே தானியங்கிக் காமிராக்களை நிரந்தரமாகப் பொருத்தி விட்டுப் பின்னர் காமிராவில் பதிவான படங்களை வைத்து புலிகளின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.

புலி, சிறுத்தைப் போன்ற வேட்டையாடும் விலங்குகளைக் கூண்டிற்குள் இல்லாமல் காட்டினுள் பார்க்கும்போது அவற்றின் அந்த கம்பீரம் விவரிக்கவே முடியாது. எங்களைப் போன்ற தன்னார்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வனத்துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்துவிட்டு வீடு நோக்கிப் பயணமானோம். மலையிலிருந்து இறங்கும்போது காட்டிலிருந்துப் புலி உறுமியது கம்பீரமாகக் கேட்டது.

வனங்களைக் காப்போம் ! புலிகளை மீட்போம்  !  !

நன்றி


பாலா

No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...